பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் முக்கியத்துவம் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

         மத்திய அரசின் துறைகளில் தாற்காலிகமாகப் பணியாற்றுவதற்காக, மாநில அதிகாரிகளை அனுப்பும்போது பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரிகளை பரஸ்பரம் இடம் மாற்றிக் கொள்வது, தேச கட்டுமானத்துக்கு மிகவும் முக்கியமான செயலாகும். மேலும், இது, தேசிய அளவிலான தொலைநோக்குப் பார்வையுடன் அதிகாரிகள் முடிவெடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் தகுதி பெற்ற ஒவ்வவோர் அதிகாரியும், ஒருமுறையாவது மத்திய அரசின் துறைகளில் பணியாற்றுவதற்கு வாப்பளிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் துணைச் செயலர், உதவி இயக்குர் போன்ற பதவிகளில் பணியாற்றுவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், இந்தப் பதவிகளுக்கு மாநில அரசுகள் தங்களிடம் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்யலாம்.
குறிப்பாக, வரும் 2017-ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலரை மாநில அரசுகள் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் அதிகாரிகள், இந்தியாவின் எந்த மூலையிலும் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பரிந்துரைப் பட்டியலை, வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this