சென்னை: பிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு நாளை (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி மாதம் முதல் தடை அமலுக்கு வந்தது. இந்தநிலையில், பிளாஸ்டிக் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள், சிறிய கடைக்காரர்கள், கடைசியாக பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும் வகையில், தனித் தனியாக அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட தொடக்கத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது போல் தெரிந்தாலும், நாட்கள் நகர, நகர வழக்கம் போல் பயன்பாடு பெருகியது. இதனைத் தொடர்ந்து, அதிகப்பட்ச அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களுக்கு அபராத கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவது முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
2-வது முறையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருளை தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதன்பிறகும் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ வினியோகம் செய்தாலோ முதலில் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதன்பிறகு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு முதலில் ரூ.25 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சிறிய பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.100-ம், 2-வது முறை ரூ.200-ம், 3-வது தடவை ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகளின் கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வீடுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும்போது முதல் முறையாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் ஒரு வீட் டில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தால் அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தி வசூலிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்காக அதிகாரிகள் அதிரடி வேட்டைக்கு தயாராகி வருகிறார்கள். சென்னையில் 15 மண்டலங்களில் இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.