தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான "திருக்குறள் விநாடி-வினா' போட்டி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் "கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு' எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று "எம்ஜிஆர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு' என்ற தலைப்பிலான ஆங்கில நூலை வெளியிட்டு கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் "திருக்குறள் முற்றோதல்'   நடத்தப்பட்டு அதில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. தற்போது திருக்குறளை மாணவர்கள் எந்தளவுக்கு ஆழமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும்,

அதில் உள்ள நுணுக்கங்களை பரப்பும் வகையிலும் ஆண்டுதோறும் மாநில அளவிலான "திருக்குறள் விநாடி வினா' தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் நிறுவனத்துடன் இணைந்து நடத்த முடிவு செய்துள்ளோம்.  இது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிப்பு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் ஆய்விருக்கைப் பொறுப்பாளர் ம.செ.இரபிசிங்,  பேராசிரியர்கள் நா.சுலோசனா,  து.ஜானகி, பெ.செல்வக்குமார்,  கவிஞர் இரா.முருகன்,  ஆய்வாளர் ஈ.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments