Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கம்: தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம்

தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கப்பட்டதற்கு தமிழாசிரியர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக் கல்வியில் 14 ஆண்டுகளுக்குப்பின் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க அப்போதைய பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த உதயசந்திரன் வழிகாட்டுதலின்படி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் உட்பட 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கானஆசிரியர்களின் உழைப்பில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பரவலாக வரவேற்பு

முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்குபுதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதிலும் காவி நிறத்தில் பாரதியார் படம் இடம்பெற்றது உட்பட சில சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மொழி வாழ்த்து மட்டுமே...

இதுகுறித்து தமிழாசிரியர் ஜெய்னுலாபிதீன் கூறும்போது, ‘‘முந்தைய பாடத்திட்டத்தில் தமிழ்புத்தகங்களில் தொடக்கமாக இறைவாழ்த்துஇடம்பெற்றிருக்கும். அதன்பின் நாட்டுப்பண் மற்றும் மொழி வாழ்த்து இருக்கும். ஆனால், புதிய தமிழ் பாடத்திட்டத்தில் இறை வாழ்த்துநீக்கப்பட்டுள்ளது. மொழி வாழ்த்து மட்டுமே உள்ளது. பாடத்திட்டக்குழு இதை நீக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இறை வாழ்த்துதனிப்பட்ட எந்த மதத்தையும் போற்றவில்லை. அவையெல்லாம் மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்கும் கருத்துகளைத்தான் முன்வைத்தன. எனவே, தமிழ் புத்தகங்களில் மீண்டும் இறை வாழ்த்து சேர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் கூறும்போது, ‘‘பாடத்திட்டத்தில் இடம்பெற்ற வாழ்த்து பாடல்கள் எல்லாம் பக்தியை தீவிரமாகவலியுறுத்தவில்லை. மனிதம், நம்பிக்கை தரும் வள்ளலார், தாயுமானவர் போன்றோரின் பாடல்களே இடம்பெற்றன. மேலும், நன்னெறி கதைகளில் இருந்துவிலகியுள்ள இன்றைய தலைமுறை குழந்தைகள் இறை வாழ்த்தின் மூலம் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளலாம்.

ஏதாவது ஒரு வடிவில்...

பெரும்பான்மையான மக்கள்கடவுள் நம்பிக்கையுடன் வாழும் நிலையில், பாடத்திட்டத்தில் ஏதாவது ஒரு வடிவில் இறை வாழ்த்தை சேர்க்க வேண்டும்’’ என்றார்.கல்வியாளரும், பேராசிரியருமான இரா.ஸ்ரீநிவாசன் கூறும்போது, ‘‘பக்தியிலக்கிய மொழி என கூறுமளவுக்கு எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. அத்தகைய பாரம்பரியமான தமிழ் மொழிப்பாடத்தில் கடவுள் வாழ்த்தை நீக்குவது ஏற்கமுடியாது. குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தினால் அதை நீக்கலாம். அதேநேரம் அனைத்து மதக்கடவுள்களையும் போற்றும் விதமாக பொதுப்படையில் இருக்கும் இறை வாழ்த்துகளை புத்தகத்தில் வைக்கலாம்.கேரளாவில் இறை மறுப்பு கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தாலும் ‘கடவுளின் தேசம்’ என்ற வாசகத்தை அவர்கள் நீக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் சின்னமாக கோயில் கோபுரத்தை வைத்துக் கொண்டு இறை வாழ்த்தை நீக்கியது கண்டிக்கத்தக்கது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’என்றார்.

திணிக்கக்கூடாது

பாடத்திட்டக்குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் சிலர் இதுபற்றி கூறும்போது, ‘‘மாணவர்களிடம் கடவுள் நம்பிக்கையை திட்டமிட்டு திணிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இறை வாழ்த்தும், எந்த மதத்தின் கடவுளையும் நேரடியாக குறிக்கும் சொற்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மற்றபடி இதில் வேறு உள்நோக்கம் இல்லை.அதேநேரம் தேவாரம், திருவாசகம் உட்பட தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களின் சிறந்தகருத்துகள், வரலாறு, மொழிச்சிறப்பு, அறிவியல் கூற்றுகள் எல்லாம் விரிவாக குறிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இதுதவிர அனைத்து மதத்தை சேர்ந்த புலவர்களின் பாடல்கள், புது கவிதைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன’’என்றனர்.

கேரளாவை பின்பற்றி...

பாடத்திட்ட உயர்மட்டக் குழுவில் இடம்பெற்ற ஒருவர் கூறும்போது, ‘‘கேரளாவை பின்பற்றி அனைத்து பாடங்களும் 10 விதமான மையக்கருத்துகளை முன்வைத்து தயாரிக்கப்பட்டன. அதன்படி தமிழ் பாடத்திட்டமும் மொழி, இயற்கை, நீர் மேலாண்மைஉள்ளிட்ட கருத்துகளை முதன்மையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.அதன்படி தொன்மை மொழி யான தமிழ் புத்தகத்தில் மொழி அடிப்படையில் பாரதியார்,பாரதிதாசன் ஆகியோரின் பாடல்கள் மொழி வாழ்த்தாக முதலில் வைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு இறை வாழ்த்து நீக்கப்படவில்லை.

அனைத்து மத இலக்கியங்கள்

கம்ப ராமாயணம், பெரிய புராணம் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ புலவர்களின் இறை இலக்கியங்களும் அதற்கடுத்த பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. அதன் வகைப்பாடு மட்டுமே இடம்மாறியுள்ளது.பழங்காலத்திலும் இப்போதையகாலகட்டத்திலும் இருக்கும் சூழல்வேறுபாடுகளை ஒப்பிட்டு விளக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான்மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும்.

அனைவரும் ஏற்றபின்னரே...

மேலும், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை பல்வேறு கல்வியாளர்கள், நிபுணர்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. மக்களின் பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்கள் தெரிவித்த கருத்துகளின்படியும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஏற்றதற்கு பின்னரே பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்களிலும் இதே நடைமுறையே இருந்தது. எனவே,காலத்துக்கேற்ப பல்வேறுசிறப்புமிக்க மாற்றங்களுடன் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இறைவணக்க பாடல்கள்

பழைய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை இறை வாழ்த்து இருக்காது. ஆத்திச்சூடி, திருக்குறள் மற்றும் நீதிநெறி கதைகள் இடம் பெற்றிருக்கும். 4-ம் வகுப்பு முதல் பருவத்தில் பாரதிதாசனின் மெய் சொல்லல் நல்லதப்பா, 5-ம் வகுப்பு முதல் பருவத்தில்கவிமணி தேசிக விநாயகத்தின் திருவடி தொழுகின்றோம் போன்ற பாடல்கள் இருந்தன. இதுதவிர 6-ம் வகுப்பில் ராமலிங்க அடிகளாரின் கண்ணில் கலந்தான், 7-ம் வகுப்பில் திரு.வி.க.வின் பண்ணினை இயற்கை வைத்த பண்பனே, 8-ம் வகுப்பில் தாயுமானவரின் முத்தே பவளமே, 9-ம் வகுப்பில் கம்பரின் உலகம் யாவையும், 10-ம்வகுப்பில் மாணிக்கவாசகரின் மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து, 11-ம் வகுப்பில் தாயுமானவரின் அருள் பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே, 12-ம் வகுப்பில்கம்ப ராமாயணத்தின் ஒன்றே என்னின், ஒன்றே ஆம் ஆகியவை வாழ்த்துப் பாடலாக இருந்ததாக தமிழாசிரியர் அ.கார்த்திகேயன் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive