பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதுவரை, அண்ணா பல்கலை வழியாக நடத்தப்பட்ட கவுன்சிலிங், இந்த முறை உயர்கல்வித் துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக நடத்தப்படுகிறது. 
கவுன்சிலிங் நடவடிக்கைகளை, 15 ஆண்டுகளுக்கு பின், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மீண்டும் ஏற்றுள்ளதால், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான, பல்வேறு வசதி களை செய்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மாணவர் உதவி மையங்கள், 45 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.அதேபோல, விருப்ப பாடப் பதிவுக்கான வழிகாட்டி விதிகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தமிழில் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலை, இதுவரை நடத்திய கவுன்சிலிங் நடைமுறைகளில், கல்லுாரிகளின் தகவல் மற்றும் வழிகாட்டி விதிகள் அனைத்தும், ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டன.ஆனால், வழி காட்டி விதிகளை தமிழில் வெளியிட்டால், கவுன்சிலிங் நடைமுறைகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம் என, பெற்றோர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். அதை நிறைவேற்றும் வகையில், கவுன்சிலிங் குறித்த விதிகளையும், விருப்ப பதிவு நடைமுறைகளையும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தமிழில் வெளியிட்டுள்ளது.அதனால், பெற்றோரும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.