Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'தமிழ்வழி படித்தோரை புறக்கணிக்க கூடாது'

தமிழக அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கான பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் 2014-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணைப்படி, இந்த நடைமுறை மாற்றப்பட்டு சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப் பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை தான் பல்வேறு சிக்கல்களுக்கும், அநீதிக்கும் வழி வகுத்துள்ளது.
உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பாடங்களுக்கு 1,300 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அத்தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி பல மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பட்டியல் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் 38 ஓவிய ஆசிரியர்களின் பெயர் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல், இசை, தையல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும் கூட தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் அடிப்படைத் தகுதி என்னவோ, அந்த படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகியப் படிப்புகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தான் நடத்துகிறது என்பதால், தேர்வுத்துறையின் இயக்குனர் தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சான்றளிக்க வேண்டும். ஆனால், மாணவர்கள் தமிழில் படித்தார்களா? ஆங்கிலத்தில் படித்தார்களா? என்பது தமக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு அதற்கான சான்று வழங்க முடியாது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். அதைக் காரணம் காட்டி தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக போட்டித் தேர்வர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஓவியப் பாடத்திற்கான சிறப்பாசிரியர் நியமனத்தில் மட்டும் தமிழ் வழியில் படித்த 70 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். தமிழை வளர்க்க வேண்டும்; தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம் இதுபோன்று அநீதிகள் இழைக்கப்பட்டால் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க முடியாது; தமிழை வளர்க்கவும் முடியாது என்பதை உரியவர்கள் உணர வேண்டும். அரசுத் தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளில் இயக்குனர் நிலையிலுள்ள அதிகாரிகள் மட்டத்தில் தான் குழப்பங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்து உள்ளார் ராமதாஸ்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive