ஓய்வூதியர் நேர்காணல் என்பது, ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிர் வாழ்வதை, ஒவ்வொரு ஆண்டும் கருவூல கணக்கு துறையில் உறுதி செய்வதாகும். தற்போது ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் செப்டம்பர் வரை, நேர்காணல் பணிகள் நடக்கின்றன.
'இனி ஓய்வூதியதாரர்கள் எளிதில் இச்சேவைகளைப் பெறும் வகையில், ஆண்டு முழுதும் ஓய்வூதியர் நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்' என, நிதித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், நேர்காணல் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிதித் துறை செயலர் உதயசந்திரன் வெளி யிட்டுள்ள அரசாணை:
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்நாள் சான்றிதழை வழங்க, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
இணைய சேவை மையங்கள், தபால் வழியாகவும், கருவூல கணக்குத் துறையில் நேரில் ஆஜராகியும், வாழ்நாள் சான்றிதழை வழங்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும். ஒருவர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுகிறவர் என்றால், அவருக்கான நேர்காணல் மாதம் என்பது, அவர் ஓய்வு பெற்ற மாதமாக இருக்கும்.
மற்ற வகையில் ஓய்வூதியம் பெறுவோர், அவர்கள் ஓய்வூதியம் பெறத் துவங்கிய மாதம், அவர்களுக்கு ஆண்டுதோறும் நேர்காணல் நடக்கும் மாதமாக இருக்கும்.
இந்த புதிய நடைமுறை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும். ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணல் வழியே, வாழ்நாள் சான்று அளிக்கத் தவறினால், அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத் தவறிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை, சிறப்பு நிகழ்வாக, ஜூலை மாதம் நேர்காணலுக்கு அழைக்கலாம். புதிய நடைமுறையை காரணம் காட்டி, நடப்பு நிதியாண்டில் யாருக்கும் ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...