இன்றைக்கு ஆரம்பக் கல்வி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களில் மூன்றில் இருவர் எதிர்காலத்தில், தற்போது நடைமுறையில் இல்லாத, என்னவென்றே தெரியாத, இனிமேல் புதிதாக உருவாகும் துறைகளில்தான் வேலை பார்க்கப்போகிறார்கள். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு போன்றவை துரிதகதியில் வளர்ச்சியடைந்துவருகின்றன. இது மாணவர்களை எதிர்காலத்துக்கு எப்படித் தயார்ப்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகள் பள்ளிக் கல்வியில் சீரிய கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில், பள்ளிக் கல்வித் துறை பல முக்கிய அம்சங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
மாற்றமும் வளர்ச்சியும்: மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின், குறிப்பாக மத அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு, அறிவியல் பரவத் தொடங்கிய பின்னர், 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டிலும் மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக வேலைவாய்ப்புகள் பெருகின. அதற்குத் தக்கவாறு மக்களைத் தயார்ப்படுத்த, கல்வி பரவலாகி, எல்லாருக்கும் பொதுவாக ஆனது.
அறிவியலிலும் கணிதத்திலும் நிபுணத்துவம்பெறும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட்டது. உலகெங்கும் மக்களாட்சி பரவத் தொடங்கியதும் அதே காலகட்டத்தில்தான். இதன் பலனாக, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சமூக முதலீட்டில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டது. பள்ளிக் கல்வியில் செலுத்தப்படும் முதலீடு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்பட்டது. அது இன்றைக்கும் தொடர்கிறது.
‘குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, பள்ளிக் கல்வியில் செய்யப்படும் முதலீடு, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கு நீண்ட காலத்துக்கு நன்மை பயக்கிறது’ எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதன் பின்னணி இதுதான்.
நாமும் கடந்த நூறாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். பள்ளியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் வகையில் மதிய உணவு, இலவச சைக்கிள், மடிக்கணினி போன்ற திட்டங்களை நமது அரசுகள் செயல்படுத்தி வந்துள்ளன. இதன் விளைவாக, தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட மாநிலமாகத் திகழ்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்சேர்க்கைக்குக் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரத்தில், கடந்த இருநூறு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் கல்வி முறை இனிவரும் காலத்துக்குப் பொருந்துமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
பாடக் கல்விக்கு அப்பால்...
மாறிவரும் இன்றைய சூழலில், பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வியைவிட்டு விலகி, ஆழ்ந்த அறிவையும் திறன்களையும் வளர்க்கக்கூடிய கல்வியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் நடத்திவரும் தொழிலதிபர் கணேஷ் கோபாலனோடு நிகழ்ச்சி ஒன்றில் உரையாடியபோது, அவர் சொன்ன செய்தி மிக முக்கியமானது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அளவில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற ஒருவர், பொறியியல் பட்டம் முடித்துவிட்டுப் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டபோது அதில் மோசமாகத் தோல்வியுற்றார். அதேவேளை, பொறியியல் படிப்பு படிக்காத - இளங்கலைப் பட்டதாரி ஒருவர் எளிதாகத் தேர்ச்சிபெற்றார். தர்க்கரீதியான சுயசிந்தனையுடன், கற்பனை வளமும் படைப்பாற்றலும் கொண்டிருந்ததுதான் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது.
மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டதற்கு மிக முக்கியக் காரணம், அவனுடைய கற்பனை வளம். கற்பனையில் விளைந்ததைச் சக மனிதர்களிடம் புனைவாகச் சொல்லக்கூடிய வல்லமைதான் மனிதனைத் தனித்தன்மை கொண்ட உயிரினமாக மாற்றியது என்று ‘சேப்பியன்ஸ்’ புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி கூறியுள்ளார். கல்வி எனப்படுவது குழந்தைகளின் மூளைக்குள் செய்திகளைத் திணிப்பதல்ல. அது, அவர்களின் அறிவைத் தூண்டும் கருவி. அதற்கு ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது.
ஆசிரியர்களின் முக்கியத்துவம்:
உலக அளவில் பள்ளிக் கல்வியில் முன்னணியில் உள்ள நாடு பின்லாந்து. நீண்ட கால உத்தி சார்ந்த திட்டங்களின் காரணமாகக் கடந்த 40 ஆண்டுகளில் இவ்வளர்ச்சியை அந்நாடு அடைந்துள்ளது. அந்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வது கடினமானது. ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்றால், அந்நாட்டின் எட்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு படித்திருக்க வேண்டும். நுட்பமான பாடத்திட்டம், தீவிரப் பயிற்சி ஆகியவற்றுக்குப் பின்னரே ஆசிரியர் என்று அந்நாட்டில் தகுதி அளிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர்கள் குழந்தை உளவியலை ஆழமாக உள்வாங்கியிருக்க வேண்டும்.
இதுபோன்ற மாற்றங்களைத் தமிழ்நாடும் முன்னெடுக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போல ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அவர்களது செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கற்பித்தலைப் புதுப்பித்துக்கொண்டுள்ளனரா எனக் கண்டறிய வேண்டும். தொடர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாநில பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்குப் பெரும் பங்கு நிதி ஒதுக்க வேண்டும்.
கல்வி பரவலாக்கப்பட்டு எல்லாருக்கும் சமமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்போது - கல்வி இலவசமாகக் கிடைக்கும்போது, மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை பொருளாதாரச் சுமை குறையும். தனியார் பள்ளிகளின் பிடி தளரும். முக்கியமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மாநிலப் பாடத்திட்டத்துக்கு மாணவர்கள் திரும்புவார்கள்.
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பதைவிட, பொதுவான வழிகாட்டுதலோடு, அந்தந்தப் பகுதிகளுக்குத் தக்கவாறு பள்ளிக்கூடங்களே வடிவமைத்துக்கொள்வது சிறந்தது. மாணவர்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என 2016 யுனெஸ்கோ ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்வடிவம் தர வேண்டும். கற்றல் என்பது தனிமனிதப் பயிற்சி என்பதை மாற்றி, கூட்டு முயற்சியாக்கும்போது மாணவர்களிடம் பேராற்றல் வெளிப்படுகிறது.
அரசின் கடமைகள்:
பள்ளிக் குழந்தைகளின் உடல்நலமும் மனநலமும் மிகவும் முக்கியம். அதைக் கண்காணிக்க அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைப் பரிசோதிக்க வழிவகுக்க வேண்டும். தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களைக் குறித்து அரசிடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில், ஏழாம் வகுப்பு வரும்போது மாணவர்களின் விருப்பம் எதை நோக்கி அமைந்திருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக, துல்லியமாகக் கணிக்க வேண்டும். பிறகு, அவர்கள் விரும்பும் துறைக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.
பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், கலை என மாணவர்களின் பல்வேறுபட்ட விருப்பங்களின் புள்ளிவிவரக் கணக்கு இருக்க வேண்டும். இதெல்லாம் இன்றைக்கு விரல் நுனியில் அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு மென்பொருள் துறை வளர்ச்சி பெற்றிருக்கிறது. அரசு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தத் துறையில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உள்ளன, உருவாக்கப்படவிருக்கின்றன என்கிற தகவல்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்போது, அதற்குத் தக்கவாறு மாணவர்கள் அந்தந்தத் துறைகளில் படித்துவிட்டு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எல்லாரும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே துறையில் படித்து, பின்னர் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் இவற்றைச் சரிசெய்துவிட்டால், புதிதாக எழும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஏராளமான மாணவர்களை உருவாக்கலாம்!
- தொடர்புக்கு: olivannang@gmail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...