ஒரு மாதமாய் மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது
கரும்பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள
வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும்
விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்..
கல்வி அரும்புகளே
கட்டிக்கரும்புகளே
உங்கள் புன்னகைக்கூடம் நாளை முதல் இந்த பள்ளிக்கூடம்
ஒருபடி முன்னேற்றம் கண்ட உங்களுக்கு வெற்றிப்பூங்கொத்து..
தவறிய உள்ளங்களுக்கு தாங்கி தைரியம் சொல்லும் நம் பள்ளி உண்மையில் செம கெத்து
யாவும் உண்டு இங்கு
கல்வியோடு ஒழுக்கம் அறி
எதிர்கால வாழ்வுக்கு அது ஒன்றே சரி
அனைவரிடமும் அன்பு காட்டு
உலகம் உய்ய அதுவே உயர்நெறி
ஆசான்களே
புதுமைகளின் விளைநிலங்களே
ஓய்வறியா சூரியன்களே
அறிவால் அகிலமாள கற்பிக்கிற கற்பக தருக்களே
சிலையைத் துடைத்து பொலிவாக்குவதல்ல உமது பணி
உடைந்த கல்லையும் கலையாக்குவதே கல்விப்பணி
நேரம் தாண்டி உழைப்பதை உலகம் பெரிதனப் பேசாது
நேரம் தவறி பள்ளி வந்தால் விமர்சிக்கும் வாய்கள் கூசாது
காலம் அறிவோம்
கடமை உணர்வோம்
மாணவர்களின் கதாநாயகர்கள் நீங்கள்
உங்களிலிருந்தே
உயர் எண்ணச் சிறகுகளை மாணவர்கள் ஏந்தி பறப்பர்..
உங்கள் உள்ளங்களின் ஏழைகளின் வலியை ஏற்றி அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நல்வழிதனைக் காட்டுங்கள்..
இவ்வாண்டு
பயணம் புதிது பார்வை புதிது
பழமைகளைப் புறந்தள்ளி புதுமைகளை படைக்க காத்திருக்கும் உங்களுக்கும் என் நெஞ்சம்நிறை வாழ்த்துகள்..
இயந்திர உலகில் இதயங்களோடு பேசுகிற நீங்களே பாக்கியவான்கள்
புதிய உலகம் பிறக்கட்டும் உங்களில் இருந்து..
இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்
சீனி.தனஞ்செழியன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...