Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...

IMG_20240505_092742

      இந்திய ஒன்றிய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் (Contributed Pension System or New Pension System) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணி, அரசு கல்வி மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் உள்ளோர் மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்திய இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 1, 2004 முதல் ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 01.01.2004-க்கு முன்பு ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவம், துணை இராணுவப் படைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய ஒன்றிய அரசைப் பின்பற்றி அதன்பின் பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருவது எண்ணத்தக்கது.

அதன்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி மட்டும் உள்ளடக்கிய மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத ஓய்வூதிய வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் மேற்குறித்த வைப்பு நிதிக் கணக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தம் பங்காகச் செலுத்தி அவற்றிற்குரிய அவ்வக்கால வட்டியும் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கணக்குச்சீட்டு வழங்கி வருகின்றன. புதிய ஓய்வூதிய திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை நிர்வகித்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நிதியை மாநில கணக்காயர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிலையாக்கப்படாத பணியாளர்கள் அனைவருக்கும் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் புதிய கணக்கு எண் மற்றும் கணக்குச்சீட்டு வழங்குதல், கணக்குகள் பராமரிக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேமிக்கும் மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் இதற்கான வட்டித் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.

தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டித் தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தம் பணிக்காலத்தில் சேமித்த தொகையுடன் அதற்கு ஈடாக அரசின் பங்களிப்புத் தொகை, அவற்றிற்குரிய வட்டி ஆகியவை முறையே கணக்கிடப்பட்டு முழுவதும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விடுகிறது.‌ இதுதவிர, ஒன்றிய அரசு வழங்குவது போல் பணிக்கொடை இவர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை.

ஓராண்டு பணிக்கு 15 நாட்கள் சம்பளம் பணிக்கொடையென்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்துள்ளாரோ அதற்குரிய தொகையை பணிக்கொடையாக வழங்கவேண்டும் என்பது விதியாகும். இதன் உச்சவரம்பு 20 இலட்சமாக தற்போது வரை இருக்கின்றது. இந்த பணிக்கொடை தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவரவர் பணிபுரிந்த பணிக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், அண்மையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 50 விழுக்காட்டைக் கடந்ததையொட்டி ஒன்றிய அரசு தம் பணிக்கொடை உச்சவரம்பை 20 இலிருந்து 25 இலட்சமாக உயர்த்தி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்றிய அரசுக்கு இணையாக ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு சலுகைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் நடைமுறையைக் கடைபிடித்து வரும் திராவிட மாடல் அரசு பணிக்கொடை உயர்வையும் கவனத்தில் கொள்வது நல்லது.

மேலும், ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அத்திட்டத்தின் முழு பலனையும் சலுகைகளையும் அனுபவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி இன்னமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது.

இதுகுறித்து பலகட்டமாக தனித்தும் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்தும் இயக்கங்கள் பழைய ஓய்வூதியம் மீட்புப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறாமல் இல்லை. அப்போதெல்லாம் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு உறுதிமொழி அளிக்கப்படும் நிகழ்வுகளும் இங்கு நடந்தேறி வருவதும் அறியத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை ஒரு விடிவும் கிடைத்தபாடில்லை. நெருக்கடி சூழ்நிலையைச் சமாளித்து இயல்பு நிலை திரும்ப ஒப்புக்கு குழு அமைப்பதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது.

மீண்டும் பழைய ஓய்வூதியம் நிறைவேற இதுவே நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசாக தற்போதைய விடியல் அரசு உள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், அவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியம் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும் என்று போராட்ட காலகட்டத்தில் நேரிலும் அதன் நீட்சியாக தேர்தல் அறிக்கையிலும் நம்பிக்கையுடன் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

இனியும் காலம் கடத்துதல் சரியாகாது. ஏனென்றால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தள்ளப்பட்ட பலபேர் தம் பணி நிறைவு காலத்தை எட்டவிருக்கின்றனர். இவர்களுள் பலர் 40 வயதிற்கு மேல் பணிக்கு வந்தவர்கள். பணி ஓய்வின்போது இவர்கள் பெறப்போகும் பணப்பலன்கள் பெரிய அளவில் இருக்கப் போவதில்லை. அதில் வீட்டுக்கடனை அடைப்பதா? பிள்ளைகளை உயர்கல்வி படிக்க அனுப்புவதா? பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பதா? பணிக் காலத்தில் சீதனமாகப் பெற்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவச் செலவுகள் பார்ப்பதா? என்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று திசை தெரியாமல் விழிபிதுங்கிக் கிடப்பதை அறியமுடிகிறது.

இத்தகைய நிலையில் ஒன்றிய அரசு முன்மொழிந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தாம் சேர்க்கப்பட்டிருந்தால்கூட பங்களிப்பு ஓய்வூதியத் தொகையுடன் பணிக்கொடையும் கிடைத்திருக்குமே என்று அங்கலாய்ப்பதையும் ஆதங்கத்தில் முணுமுணுப்பதையும் ஊன்றிக் கேட்க முடிகிறது. கந்தலான வாழ்க்கையில் பட்டு வேட்டி கனவாக இருந்தாலும் நான்கு முழ கதர் வேட்டி கிடைப்பதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

அதுபோல், இந்த பழைய ஓய்வூதிய மீட்பு சிக்கலை அரசுடன் சுமுகமாகப் பேசித் தீர்க்க புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்போர் எத்தகைய முக்கிய பதவி வகித்தாலும் சற்று விலகிக்கோண்டு வழிவிடுதல் காலத்தின் கட்டாயமாகும். நல்லதோ, கெட்டதோ எந்த முடிவாக இருப்பினும் அஃது பாதிக்கப்பட்டோர் கூடி முடிவெடுப்பது தான் சாலச்சிறந்ததாக அமைய முடியும். மூன்றாம் நபர் தலையீடு என்பதும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதென்பதும் பிற்காலத்தில் பல்வேறு விரும்பத்தகாத பின்விளைவுகளையே தரும். இஃது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்களுக்குள் உள் முரண் மற்றும் உட்பகைக்குக் காரணமாக அமையக்கூடும்.

எனினும் ஒரு சில முன்மொழிவுகளை முன்வைப்பது தவறில்லை என்று படுகிறது. முதலாவதாக இருபதாண்டு கால நெடுங்கனவையும் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் பொருட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து மார்ச் 31, 2023 இல் நடைமுறையில் இருந்து வந்த பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதாகவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரால் சேமிக்கப்பட்ட தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்பட்டு அது முறையே வருங்கால வைப்பு நிதியாகப் பேணப்படும் என்றும், பணிநியமன நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருப்புத் தொகையில் 75 விழுக்காட்டைத் தற்காலிக முன்பணக் கடன் பெற இயலும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருதரப்பு சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு கொள்வது நலம் பயக்கும்.

இரண்டாவதாக, மாநிலத்தில் காணப்படும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி வேறுவழியின்றிக் கை விரிக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு வலியுறுத்துவது போல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி முழுவதையும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்து ஜனவரி 1, 2004 முதல் பணப்பலன் சலுகைகள் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒன்றிய அரசு தம் பணியாளர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் பெறத் தகுதி வாய்ந்தவர்களாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மேம்படுத்துதல் இன்றியமையாதது.

மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 25,000 தொகைக்குக் குறையாமல் வாழ்வாதார ஓய்வூதியம் இவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்தல் இன்றியமையாதது. இந்த முடிவுகள் அனைத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அரசும் கூட்டாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். சம்பந்தப்படாதவர்கள் தேவையின்றி இப்பிரச்சினையில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து மறைமுகமாக உதவிகரமாக இருப்பதே உத்தமம்.

தற்போது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பயனாளிகள் தம் வருமானவரி சேமிப்பு சலுகையில் கழித்து வந்த கூடுதல் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை ரூ 50000 ஐயும் கடந்த ஆண்டு முதல் கழிக்க முடியா அவலநிலை உள்ளது வருந்தத்தக்கது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ஏனெனில், இது வருமான வரி கழிவிற்கு உகந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராது என்று கூறப்படுகிறது.

அரசுக்குத் தம் தரப்பு நியாயங்களைக் கோரிக்கையை முன்வைத்து உரிமையுடன் கேட்பவர்கள் முன் எடுத்துரைக்க எப்படி எல்லா உரிமையும் இருக்கின்றதோ அதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலைச் செவிமடுத்துக் கேட்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதை ஒருக்காலும் தட்டிக் கழிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளத்தக்கது. இஃது ஆகவே ஆகாது என்று எடுத்த எடுப்பிலேயே ஆயிரமாயிரம் காரணங்களை முடியாததற்கு அடுக்குவதில் காட்டும் அக்கறையில் ஏற்கத்தக்கதே என்று முடிவெடுக்க நல்லதொரு காரணத்தைப் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிய வல்லுநர் குழு மூலம் ஆராய்தல் கோடி புண்ணியம்.

அரசியல் கிணற்றுக்குள் பல்லாண்டுகள் மூழ்கிக் கிடக்கும் இறுகிய பாறாங்கல்லைப் போன்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீள எடுத்து வந்து பாவ விமோசனம் அளித்து சுமார் ஆறு இலட்சம் குடும்பங்களின் கண்ணீர் துடைக்கவும் கௌரவமான முறையில் வாழ்க்கை வாழவும் மனிதாபிமானத்துடன் அரசு முன்வரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். தற்போது பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளதாக அறியப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இடம்பெற வேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, வேண்டுதலும் கூட.

எழுத்தாளர் மணி கணேசன்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive