மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நன்னடத்தை விதிகளில் தேவைக்கு ஏற்ப சிறு சிறு திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் மூலம் தற்போதைய நடப்பில் உள்ள விதிமுறைகளை தெளிவாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட நன்னடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்படி அரசுக்கு கருத்துகளை அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட சங்க பொறுப்பாளர்கள் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். பதிவு பெற்ற சங்கங்கள் தெரிவிக்கக் கூடாது உட்பட உரிமைகளை பெறுவதற்காக, ஜனநாயக வழியில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை முடக்கும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நசுக்கும் செயல்
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கமான, எஸ்.எஸ்.டி.ஏ.,வின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:
அனுமதியின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் தலைமையகத்தில் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தக் கூடாது என்பது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு முரணானது. அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தக்கூடாது என்பது ஜனநாயக நாட்டில் வழங்கப்பட்ட உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் சுயதேவை, பிரச்னைகளை தீர்க்க சங்கமாக ஒன்று கூடும் நேரங்களில், அவர்கள் அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்பது சரியான முறையல்ல.
அரசின் தவறான அரசாணைகள், உயர் அதிகாரிகளின் தவறு, ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் போராட அனுமதி கிடைத்தது. ஆனால், தற்போது போராடக்கூட அனுமதியில்லை என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. திருத்தப்பட்ட விதிகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...