பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு ஜூன் 25 முதல் 29-ம் தேதிவரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 10 லட்சத்து 19,751 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 52,007 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து பட்டதாரிகள் தங்கள் முடிவுகள் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தேர்வு எழுதியவர்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு 54,885 பேரும், ஜேஆர்எப் உதவித்தொகைக்கு 5,269 பேரும், பிஎச்டி படிப்புக்கு ஒரு லட்சத்து 28,179 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 88,333 பட்டதாரிகள் (25%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மதிப்பெண் சான்றிதழையும் பட்டதாரிகள் மேற்கண்ட வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...