இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலெப்பர் டிரைனிங் புரோகிராம் என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கூகுள் பிளே,யூனிட்டி மற்றும் முன்னணி கேம்துறையினர் இணைந்து வழங்கும் சிறப்பு திறன் பயிற்சியாகும். இது கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகிய தொழில்நுட்ப திறன்களை வழங்கும். குறிப்பாக கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதியாண்டு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கும் மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.
இலவச யூனிட்டி லைசென்ஸ், இலவச பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு, உரையாடல் வாய்ப்பு மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்பு கிடைக்கும். முதற்கட்டமாக 250 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது, ஒவ்வொரு மாணவருக்கும் தலாரூ.32,000 மதிப்புடைய யூனிட்டி லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி, சான்றிதழ் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ.80,32,500 ஆகும்.
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள் மற்றும் யூனிட்டி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கூகிள் பிளே பார்ட்னெர்ஷிப்ஸ் இயக்குநர் குணால் சோனி, கூகுள் இந்தியா பிளாட்பார்ம்ஸ் மற்றும் டிவைஸ், அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கை பிரிவு அதிகாரி அதிதி சதுர்வேதி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...