Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும் - தினமலர்


         நல்லாசிரியர் ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.


          தனது கிராமத்தைச் சேர்ந்த எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கைகாசை செலவழிப்பது மட்டுமல்ல, கடன் வாங்கிகூட செலவழித்துக் கொண்டு இருக்கிறார் எழுபத்தைந்து வயது முன்னாள் தலைமையாசிரியர் ஒருவர்.
அவரது பெயர் டி.கே.ராமசாமி.
 
         கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி காரமடை ஊராட்சி ஒன்றியம் திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த அமரர்களாகிவிட்ட கொதியப்பா-நஞ்சம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர்.

         என் அம்மா ஒரு தெய்வமுங்க, அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கவேண்டும் என்றாலே பல கிலோ மீட்டர் தூரம் தள்ளி உள்ள பள்ளிக்கூடம் போகவேண்டும், ஆனாலும் போய் நல்லா படி ராசா நான்தான் கைநாட்டா போய்விட்டேன், நீ அப்படி இருக்கக்கூடாது, நல்லா படிக்கணும், நல்லா படிக்கிறது மட்டுமில்ல நாலு பேரை படிக்க வைக்கணும் என்று சொல்லி, சொல்லியே என்னை வளர்த்தார்.

                பள்ளிக்கூடம் போவதற்காக 1952ம்வருடம் 52 ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், அந்த 52 ரூபாய் கடனை அடைக்க மூணு வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டார், அதிகாலை மூணு மணிக்கு எழுந்து மாட்டுத் தீவன புல்லைப் புடுங்கி, அலசி எடுத்துக்கொண்டு, பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து சென்று மேட்டுப்பாளையம் போய் காலணா, அரையணா காசிற்கு விற்று சம்பாதித்த காசில், சைக்கிள் வாங்கிய கடனை அடைத்தார்.
 
           அந்த கஷ்டத்திலேயும் எனக்கு பிடிச்ச கல்லப்பொரியை வாங்கி மடியில் கட்டிக் கொண்டு வந்து எனக்கு கொடுத்து, நான் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்த என் அம்மாவிற்கு நான் செலுத்தும் காணிக்கையே தற்போது ஏழை மாணவர்களை தேடிப்பிடித்து படிக்கவைப்பது.

               1961ல் பள்ளி ஆசிரியராக சேர்ந்து 1998ல் தலைமையாசிரியராக பணி ஒய்வு பெற்றேன் நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் மாணவ, மாணவியரை என் சொந்த பிள்ளைகளாகத்தான் பார்ப்பேன், பள்ளி கட்டிடங்களை எனது வீடாகவே பாவித்தேன், கிராமத்தில் எந்த குழந்தையும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்து செயல்பட்டேன்.
 
             பள்ளி மற்றும் அதனைச் சார்ந்த இடங்களில் மரம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினேன், அப்படி நான் சிறுமுகை பள்ளியில் பணியாற்றும் போது வைத்து வளர்த்த தேக்கு மரங்கள் இன்று பல லட்சம் பெறும் என்பதை எண்ணும்போது சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு ஊரில், தெருவில் மரம் நடக் கிளம்பி விடுவேன் அந்த வகையில் இன்று இலுப்பம்பாளையம் கிராமம் சோலை போல இருக்கிறதே என்றால் நானும் எனது பிள்ளைகளும் அன்று வைத்த மரங்களே காரணம்.

               நான் படித்து, பணியாற்றி, ஒய்வு பெற்ற இலுப்பம்பாளையம் அரசு பள்ளி எனக்கு விருப்பமான சொர்க்கமான இடம். அரசு சார்பில் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுத்த போது அந்த சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்கள், தேசிய விலங்கு, தேசிய மலர், மழைநீர் சேமிப்பின் அவசியம் மரங்களின் முக்கியம் போன்றவைகளை முப்பாதாயிரம் ரூபாய் செலவழித்து ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். இதை தவறாமல் தினமும் பார்க்கும் குழந்தைகள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும்.
 
          98ல் பணி ஒய்வு பெற்ற பிறகு சமூகப்பணியாற்றுவதில் இன்னும் தீவிரமாக இறங்கினேன், எனது பென்ஷன் பணம் 17 ஆயிரத்தில் எனக்கும் என் மனைவிக்குமான குடும்ப செலவிற்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீதம் 11 ஆயிரம் ரூபாயை பொதுக்காரியத்திற்கு செலவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளேன்

              அதிலும் பெரும்பகுதி பணத்தை கிராமத்து பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடை வாங்குவதற்கு செலவிட்டுவிடுவேன், பள்ளி ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கூடுதலாக செலவாகும் அதைப்பத்தி கவலைப்படாம கடன் வாங்கி பிள்ளைகளுக்கு செலவழிச்சுடுவேன், அப்புறம் பென்ஷன் பணம் வந்த பிறகு அதில் இருந்து கடனை கொடுத்து சமாளிச்சுடுவேன்.
       
           இது போக ஊரில் உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பது, கோயில் காரியங்களை எடுத்துச் செய்வது, உடம்பிற்கு முடியாதவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறவைப்பது, சுற்றுச்சுழல், கல்வி, தனிமனித ஒழுக்கம் பற்றி பள்ளிகளில் போய் இலவசமாக பாடங்கள் நடத்துவது, உயர்கல்வி படிப்பதால் பிறந்த மண்ணிற்கும் வீட்டிற்கும் உனக்கும் கிடைக்கும் பெருமைகள் இவை என்று மாணவ, மாணவியரிடம் எடுத்துச் சொல்லி உயர்படிப்பில் நாட்டம் கொள்ளச் செய்வது, நர்சிங், என்ஜினியரிங் போன்ற படிப்பு படிப்பவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என்று என்னால் முடிந்தவரை இந்த 75 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
 
           நான் பணியில் இருக்கும் போது செய்த காரியங்களை பாராட்டி மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்கள், விருதுக்காக நான் எப்போதும் வேலை செய்ததது இல்லை, என் மனசாட்சிக்காக, "நீயும் நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும் என்று என் தாய் சொன்ன சொல்லுக்காக' என்னால் முடிந்தை அப்பவும் செய்தேன், இப்பவும் செய்கிறேன், என் ஆயுள் உள்ளவரை எப்பவும் செய்வேன் என்று பெரிவயவர் ராமசாமி சொல்லி முடிக்கும் போது வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
 
           இந்த மழை ராமசாமி என்ற நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்த மழையாகும்.
 
           ராமசாமி தொடர்பான பிற படங்களை போட்டோ கேலரி பகுதியில் பார்க்கவும், அவரது தொடர்பு எண்: 9443779252. அவருடன் பேசுபவர்கள் அவரது கேட்கும், மற்றும் கிரகிக்கும் திறன் சற்று குறைவு என்பதை மனதில் வைத்துக்கொண்டு பேசவும், நன்றி!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive