Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

           அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
 
         ஆனால், இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்
 
             இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலக துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் வரும்காலத்தில் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
 
      அதுமட்டுமின்றி கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி இதுநாள் வரை அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1,923 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) சிறப்புத்தேர்வுகள் மூலம் உடனடியாக நிரப்புமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
             இதில் 1,107 ஆசிரியர் பணியிடங்கள், 79 மருத்துவப் பணியிடங்கள், 259 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்
 
        தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் என்று பார்த்தால், 5,053 தொடக்கப் பள்ளிகள், 1,556 நடுநிலைப்பள்ளிகள், 633 உயர் நிலைப் பள்ளிகள், 1,165 மேல்நிலைப் பள்ளிகள், 42 ஆசிரியர் பயிற்சி நிறு வனங்கள், 139 கலை அறிவியல் கல் லூரிகள், 14 கல்வியியல் கல்லூரிகள், 3 பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.
தமிழக அரசின் புதிய உத்தரவை தொடர்ந்து, மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், அலுவலக பணியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு வரவேற்பு
 
             தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என். தீபக் கூறும்போது, “தமிழக அரசின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக டயோசீசன் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
 
           மாற்று திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு ரோஸ்டர் முறை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கண்காணிக்க உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive