NEET Coaching 2022

Maazter - The Learning App

ஆட்சியராக இருந்தபோது அடிக்கடி அரசு பள்ளிகளை ஆய்வு செய்வேன்: உ.சகாயம் ஐ.ஏ.எஸ்

       படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக் கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார்.
 
         புதுவை பல்கலைக்கழகத்தில் சமூகப்பணித்துறை சார்பில் உலக சமூகப்பணிதின கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. சமூகப்பணித் துறைத் தலைவர் டாக்டர் நளினி வரவேற்றார். டாக்டர் ஷாகின் சுல்தானா சமூகப்பணி தினம் குறித்து விளக்கினார். டாக்டர் இப்திகார் ஆலம் சமூகப்பணி தின உறுதிமொழியை வாசித்தார்.விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:

          அரசுப்பணிக்கு வந்த 22 ஆண்டுகளில் 22 பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். என்னை விட அதிகளவு பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளும் இந்தியாவில் உள்ளனர். நாட்டில் முக்கியப் பிரச்னை லஞ்சம்.
 
          நாமக்கல் ஆட்சியராக இருந்தபோது மது அருந்தி வாகனம் ஓட்டிய இரு இளைஞர்கள் சாலையில் செல்லும்போது பிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மது அருந்திய நிலையிலும் ரூ. 100 லஞ்சம் என்னிடம் தர வந்தனர். மது அருந்திய நிலையிலும் லஞ்சம் தந்தால் தப்பிக்கலாம் என்ற எண்ணம் மனதில் பதிந்துள்ளது தெரிந்தது.
 
         ஆட்சியராக இருந்தபோது அடிக்கடி அரசு பள்ளிகளை ஆய்வு செய்வேன். ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள். பல ஏழைக்குழந்தைகள் அரசு பள்ளிகளில் நன்கு படித்து நல்லமதிப்பெண் பெற்று உயர்நிலைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த மதுரை ஆட்சியராக தேர்தல் ஆணையம் என்னை 2011ல் தேர்வு செய்து நியமித்தது. நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பல தரப்பினரையும் அணுகினேன். ஒத்துழைப்பு இல்லை. இறுதியில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் பேச தொடங்கினேன். அதற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து நீதிமன்ற வழக்கு, உடன் பணியாற்றியோர் அளித்தபுகார் என பல விசயங்களையும் தாண்டி நேர்மையாக பணியாற்றினேன்.
 
         அதேபோல் கிரானைட் குவாரி தொடர்பான விசயத்தில் விவசாயிகள் புகாரைத்தொடர்ந்து ஆய்வுகளை தொடங்கினேன். பணியிடமாற்றம் வந்தது. இதையடுத்து 3 நாளில் எனது ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பினேன். அதையடுத்து பல ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பான விசாரணை நடந்தது.
 
           பணியில் பணியிடமாற்றம் இருந்தபோதிலும் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கதான் செய்கிறது. இளையோர் பலரும் சூழல்களினால் மனமாற்றம் அடைந்து விடக்கூடாது. தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எப்படி இச்சூழலில் இயங்குகிறீர்கள் என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். அதற்கு, நான் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று பதிலை கூறுகிறேன்.
 
           தற்போது கோ ஆப்டெக்ஸில் பணியாற்றத்தொடங்கியுள்ளேன். லாபத்தில் நிறுவனம் இயங்குவதால் நெசவாளர்கள் பயன்கிடைக்கிறது. இதற்கும் மாணவ, மாணவிகள் ஆடைகளை வாங்குவது ஓர் காரணம். படிக்கும் காலத்தில் இலக்கு நிர்ணயித்து கொள்வது முக்கியம். அதனால்தான் நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு மாறியதுடன் இரு தேசிய விருதுகளை கோ- ஆப்டெக்ஸ் வென்றுள்ளது. திட்டமிட்டு நேர்மையாக விடாமுயற்சியுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.
 
          நாட்டில் முக்கியப்பிரச்சினை லஞ்சம். லஞ்சம் தேச முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. அதை தடுக்க மனஉறுதி முக்கியம். மனஉறுதியுடன் எதிர்க்காவிட்டால், சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். நண்பருக்காகவோ, உறவினருக்காகவோ என லஞ்ச விசயத்தை அணுகக்கூடாது. லஞ்சம் மனித மாண்புக்கு எதிரானது, தவறானது, சுயமரியாதைக்கு எதிரானது என உறுதியாக எண்ணுவது அவசியம்.

                    பணியாற்றுவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. இருவரும் இச்சமூக சூழலில் ஒரே வித பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. உண்மையில் பெண்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாக வந்தால் லஞ்சத்தை அதிகளவில் கட்டுப்படுத்த இயலும். அதனால் பெண்கள் ஐஏஎஸ் தேர்வு எழுத முன்வரவேண்டும் என்றார் சகாயம்.
2 Comments:

  1. Hands off to you sir hon' sagayam sir. U r respectful person. I am really proud of u sir. ........ nagaraj

    ReplyDelete
  2. நல்லவர்களை கடவுள் சோதனை செய்வான். ஆனால் கைவிடமாட்டார்.நம்பிக்கையுடன் இருங்கள் ஐயா, ஒரு விசயத்தில் சமரசம் செய்தால் கூட நம்முடைய கொள்கையே அடிப்பட்டுவிடும்.
    எண்ணித்துணிக!-நடராசன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive