Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘டெங்கு’ காய்ச்சலை கண்டறிவது எப்படி? - அறிகுறிகள், தீர்வுகள் - முழுத்தொகுப்பு


உயிரை காவு வாங்கும் டெங்கு காய்ச்சலை கண்டறிவது எப்படி? என்பது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி விளக்கி கூறியுள்ளார்.
‘டெங்கு’... தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் அபாய குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. பெரிய மிருகங்களுக்கு அஞ்சும் மக்களுக்கு தற்போது சிறிய கொசுவை கண்டாலே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டுள்ளனர். லேசான காய்ச்சல், சளி, உடல் வலி ஏற்பட்டவுடன் பயத்தில் சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் படை எடுத்து வண்ணம் உள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதில் காய்ச்சல் குணமாகாமல் தொடர்காய்ச்சல் இருப்பவர்கள் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்பது ஒருவகை வைரஸ் நோயாகும். ஏடிஸ் என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் வளரும். பகலில் மட்டுமே கடிக்கும் தன்மை உடையது. பொதுவாக டெங்கு அறிகுறி என்பது திடீர் காய்ச்சல் ஏற்படும். கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி ஏற்படுவது, கடுமையான தசை மற்றும் மூட்டுவலி, குமட்டல், வாந்தி, தோல் அரிப்பு, சொறி மற்றும் தடித்தல் ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல் இருக்கும். காய்ச்சல் தீவிரமாகி விட்டால் குறைந்த ரத்த அழுத்தம், வயிற்றில் நீர்கோர்ப்பு, வலிப்பு, குறைந்த இதயதுடிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
காய்ச்சல் ஏற்பட்ட உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும். கண்டிப்பாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். டாக்டரின் ஆலோசனையின்பேரில் சிகிச்சைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறாமல் தனியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. 
காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். நாம் வசிக்கும் வீடு, வீட்டை சுற்றிலும் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கொசு ஒழிப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்படாமல் இருக்க நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள தேங்காய்மட்டை மற்றும் தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும். வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் பின்பகுதியில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைக்க வேண்டும். தேங்கி உள்ள தண்ணீரை வாரம் இருமுறை கழற்றி அப்புறப்படுத்த வேண்டும். வீட்டு கூரையின் வடிகால், பராமரிக்கப்படாத தண்ணீர் தொட்டி, கழிப்பிட கோப்பை போன்றவற்றில் கொசுப்புழுக்கள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் கொசுப்புழு உருவாகாமல் தடுக்க வேண்டும்.
கொசுப்புழுக்கொல்லி மருந்து போட வரும் சுகாதார பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொசுக்களை அழிக்க கொசு புகை மருந்து அடிப்பதற்கு முன் உணவு உள்ள பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். புகை மருந்து அடித்த பின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் குறைந்தது 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். குடி தண்ணீரை நன்கு காய்ச்சி பின்னர் குடிக்க வேண்டும். வீடுகளில் தண்ணீரை பயன்படுத்தும்போது 1,000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பிளச்சிங் பவுடர் கலந்து பயன்படுத்த வேண்டும். 200 லிட்டர் பேரலுக்கு 1 கிராம் பிளச்சிங் பவுடர் கலக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலும் திருப்பூர் மாநகர் முழுவதும் ஆங்காங்கே நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைவரும் வாங்கி குடிக்கிறார்கள்.
டெங்கு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 14 பள்ளிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்டன. மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மூலமாக மாணவ-மாணவிகள் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இதுபோல் அரசு அலுவலக பகுதிகளில் ஏடிஸ் கொசுப்புழு வளராத வகையில் குடிநீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. டயர், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் குவளைகள், சிமெண்ட் தொட்டிகள், பாலித்தீன் பைகள், வீணான பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அலுவலக குடிநீர் தொட்டிகள் பிளச்சிங் பவுடரால் சுத்தம் செய்யப்பட்ட நாள் குறிப்பிடப்பட்டது. 
இதை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று வழங்கினார்கள். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகளிலும் இதுபோன்று சான்றை மருத்துவ அதிகாரிகள் வழங்கினார்கள். இந்த சான்று கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல் வியாழக்கிழமைதோறும் விழிப்புணர்வு பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive