NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் - 17.03.2018, சனிக்கிழமை – சென்னை.

தலைவர் Vasanthi Devi, செயலர் JK  Krishnamoorthy Jayaraman  ச. மாடசாமி  கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி சுடர் நடராஜன், யூனிசெப்  அருணா ரத்தினம், CE கருணாகரன், AID India தோத்தாத்ரி, AAA  Uma Maheswari Gopal     ஆகிய 10 பேரும் காலை 10.30 க்குள் அடையாறு சாஸ்த்ரி நகரில் உதயம் அப்பார்ட்மென்ட்டில் தலைவரின் வீட்டில் ஒன்று  கூட இன்றைய ப.க.பா. இயக்க சந்திப்பு ஆரம்பமானது.
தரத்தை மேம்படுத்த பயிற்சிகள்
#####################
தலைவர் வசந்திதேவி நம் இயக்க முன்மொழிவுகளின் படி அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற அடிப்படையில் , எய்டு இந்தியா நிறுவன சார்பாக சில கருத்துகளை தோத்தாத்ரி பகிரப் போவதாகக் கூறினார். புதிய ஆன்ட்ராய்டு செயலி வழியாக, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கற்பித்தல் யுக்திகளை, காணொலி செயல்பாடுகளின் பாடப் பொருள்களைப் பயிற்சிகளாக பெருவாரியாக எடுத்துச் சென்றால் மக்களை சென்றடையும். இது சம்மந்தமாக பாலாஜி சம்பத் தன்னிடமுள்ள அறிவியல் சார்ந்த செய்திகளை செயலி வழியாகத் தருவது பற்றியும் பேசியுள்ளார் என்றார்.
அது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் , பாடப்பொருள் ஒரு பிரச்சனை அல்ல; ஆசிரியர் மாணவர் நல்லுறவை அடிப்படையாகக் கொண்டே தரமான கல்வி அமையும் என ஆணித்தரமாக, தனது கருத்தாக சில உதாரணங்களை முன் வைத்தார் அருணா ரத்தினம். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் வழியாகவும் (RMSA) அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) வழியாகவும் பல நாட்களுக்கான ஏராளமான பயிற்சிகள் வழங்குவதைக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் பயிற்சிகள் என்றாலே வெறுப்பாக இருக்கின்றனர் எனவும் கூறினார்,
அதையே மற்றவரும் ஆமோதிக்க, 3 வருடங்கள் முன்பே, எஸ்.சி.இ.ஆர்.டி(SCERT) வழியாக ICT பயிற்சி மாநிலம் முழுக்க 1500க்கும் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்றுள்ள இளம் ஆசிரியர்கள், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் எவரும் தங்கள் கைகளில் உள்ள ஆன்ட்ராய்டு அலைபேசியையும் , கணினிகளையும் பயன்படுத்தி மிக அதிக அளவில் மாணவரிடம் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கின்றனர். அதுவல்ல பிரச்சனை-இது மட்டும் தரமாகாது என்றார் உமா .
ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளில் தரமான கல்வியைப் பற்றியோ குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றியோ, பள்ளி வசதிகளைப் பற்றியோ துளியும் கவனம் செலுத்துவதில்லை; மாறாக தங்களது வரி குறைப்பு, வருமானம் இவற்றையே முதன்மைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறி சில கருத்துகள் பேசப்பட, அதற்கான சாட்சியாக தீக்கதிர் பத்திரிக்கையில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டி வருத்தப்பட்டார் தலைவர் வசந்தி தேவி.
தாங்கள் ஏற்கனவே செய்து வரும் பல செயல்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்களே திரும்பத் திரும்ப பயிற்சிகளை பள்ளிக்கு எடுத்துச் செல்வதும், மற்ற இடங்களில் அது ஒரு பெரும் சவாலாகவே இருக்கின்றது எனவும் பேசப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் வலிய மனதுடன் அனைத்து நல்லனவற்றையும்  பள்ளிக்காக  முன்னெடுக்க, எங்கெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் தரமான கல்வி சாத்தியம் என செயலர்  JK  கூற  விவாதம் நிறைவுற்றது.
துண்டறிக்கை / சுவரொட்டி :
##################
அடுத்ததாக  நாம் தயாரிக்கப் போகும் துண்டு பிரசுரங்கள் (Hand Bills) பற்றிய ஒரு விரிவானப் பகிர்தல் ஆரம்பமானது. தலைவர் வசந்தி தேவி, கல்வி சட்டம் சார்ந்து நாம் மேற்கொள்ளப் போகும் செயல்களில் முதன்மையானது – உதாரணமாக இதற்கு 100000 வரை துண்டு பிரசுரங்கள் (Hand Bills) அச்சடிக்கப்பட வேண்டும் என்றார்.
பாரதி புத்தகாலயம், நக்கீரன், அகரம், புதிய தலைமுறை கல்வி இதழ், மேன்மை இதழ், AID India, இது போல் நமக்குத் தெரிந்த 10 நிறுவனங்களிடம் உதவி கேட்கலாம் என்றார் ச.மாடசாமி. இதை வடிவமைக்கும் பொறுப்பு கருணாகரன், ச.மாடசாமி, மூர்த்தி, உமா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் CEK பேசுகையில் இரு விதங்களில் இதைப் பரவலாக்கலாம். முறையான குறும் படங்களாகவும், காணொலி ஆவணங்களாகவும், முகநூல், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த பிரசுரங்களை பரவலாக்கலாம் என்றார் .
அச்சு / காட்சி ஊடக உதவி
##################
நீலகண்டன், ஞானவேல், முருகேஷ், மகேஷ், சமஸ் போன்ற பத்திரிக்கைத் துறைகளில் உள்ளவர்களையும், திரைப்படத் துறைகளில் கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட சிலர் - சமுத்திரக்கனி, ரோஹிணி போன்றோரையும் ப.க.பா.இயக்க செயல்பாடுகளுடன் இணைக்கலாம். இவர்களுடனான சந்திப்புகள் ப.க.பா .இயக்கம் சார்ந்த மிகப் பெரிய பணிகளை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல ஏதுவானதாக இருக்கும் எனவும் கூறினார் ச.மாடசாமி.
தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து செய்து வரும் சிறு சிறு குழுக்களுக்கான செயல்பாடுகள் தான் வெற்றி பெற்றுள்ளன, ஆனாலும் அவை பரவலாகவில்லை என்ற கருத்துடன் குழுக்களின் பெயர்களைப் பதிவு செய்தார் நடராஜன். அதை ஆமோதித்து சிறு சிறு சந்திப்புகள் தான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன என்றார் ச.மாடசாமி, அதற்கு பல உதாரணங்களைத் தந்தார். திறமையானவர்களைத்  தேட வேண்டாம் என பவ்லோ ப்ரேயர் கூறியதாகக் குறிப்பிட்ட இவர், திறமையானவர்கள் தம் மீது விழும் புகழ் மாலைகளைத் தேடுபவர்களாக இருப்பர், நம்மோடு இணைந்து செயல்படுவர் எனக் கூற முடியாது என்றார்.
நம்மோடு இறுதி வரை இணைந்து செயல்படுவர்கள் மிகச் சாமானிய மனிதராகத்தான் இருப்பர். அவர்களை ஊக்கப்படுத்தி நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். எவர் ஒருவரைப் பற்றியும் நாம் எளிதாக எண்ணக் கூடாது; யாரிடமிருந்து எப்போது பெரிய மாற்றங்கள் உருவாகும் என கணிக்க முடியாது என்றார் ச.மாடசாமி. நடைமுறை வாழ்வில் சிலரை உதாரணங்களுடன் அவர் பகிர, தலைவர், செயலரும் அவரோடு இணைந்து  அவரவர் வாழ்வின் அனுபவங்களிலிருந்து புகழ் மாலையை நோக்கிச் சென்றவர்களைப் பற்றியும் பகிர்ந்தனர்.
அறிவொளியில் - வளர்மதியை என்னால் மறக்கவே முடியாது. - 2ஆவது பாடமே சமாதானம் என வைத்தோம். வெகு இயல்பாக ஆட்சியர் அலுவலகத்தில் வளர்மதி கூறியது இது... “சமாதானத்தை ஆரம்பித்த உடனேயே சண்டை, பிறகு drop out எனறார்”. இப்படித்தான் சிறு குழந்தைகளே நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகின்றனர் என்றார் ச.மாடசாமி.
தொடர்ந்து செயலர் JK தனக்கு அறிமுகமுள்ள ராணி கார்த்திக் என்ற நிருபர் News 7 இல் இருந்து கல்வி சார்ந்து பணிபுரிவதாகவும், அவர் ப.க.பா. இயக்கம் பற்றி கதையை செய்தியாகத் தனது பிரிவில் தருவதாகக் கூறியுள்ளார் எனவும்  ஸ்ரீகுமார், சரவண தாஸ், வள்ளிதாசன், காளிதாசன், கவின் மலர் போன்றவர்களையும் அழைத்து ப.க.பா. இயக்கத்தைப் பரவலாக்கி சாமான்ய மக்களின் கல்வியை, மக்கள் மனதில் கொண்டு செல்லலாம் என JK மற்றும் ச.மாடசாமி இருவரும் கூறினர்.
வகுப்பறையை உயிரோட்டமாகவும், அரசுப் பள்ளிகளின் பாதுகாப்புக்காக செயல்படுவது ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டது நாம் இணைந்திருக்கும் ப.க.பா. இயக்கம். பத்திரிக்கை ஊடகம், காட்சி ஊடகம் இரண்டிலும் நம் ப.க.பா. இயக்கம் எடுத்துச் செல்லும் முயற்சிகள் வெளிவர வேண்டும். ஏப்ரல் முதல் வாரத்தில் அதற்கான கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்கும் என்றார் ச.மாடசாமி.
வீடு, வகுப்பறை, மாணவர்களுக்கு மூன்றாம் இடம் என ஜான் ஹோல்ட் சொன்னார், ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு மூன்றாம் இடம் கேட்கிறார்கள் என்றார், ஆம்.. தாங்கள் செய்யும் பணிகளைப் பகிர்ந்து கொள்ள, தங்களது பள்ளி செயல்பாடுகளை மற்றவருக்குச் சொல்ல, தாங்கள் செய்த முனைவர் ஆய்வு பற்றி பேச ஒரு தளம் வேண்டும் என்கின்றனர். ஆகவே ஊடக நண்பர்களை அழைத்து நாம் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஆசிரியர் சந்திப்பும் உரையாடலும் தொடங்க வேண்டும், எங்கெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் பேச வேண்டும், ஒரு 20 ஆசிரியர்கள் இணைந்தாலும் பேசலாம், இங்குள்ள மூர்த்தி, நடராஜன், உமா யாவரும் ஆங்காங்கே பேச வேண்டும், அப்போதுதான் மாற்றங்கள் உருவாகும் என்றார் ச.மாடசாமி.
கல்வி கலைப் பயணம் :
################
மீம்ஸ், பத்திரிக்கை, டீவி, மீடியம் முக்கியம் எனவும் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் எனவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. அதோடு கடந்த மார்ச் 10 ஆம் தேதி AAA வழியாக நடத்தப்பட்ட கலைப்பயண அனுபவத்தை சற்று விளக்கமாகப் பகிர்ந்தார். 13 மாவட்டங்களிலிருந்து 65 ஆசிரியர்கள் வந்திருந்தனர் என உமா பகிர, மிகவும் ஆச்சர்யம் அனைவருக்கும்...இது சார்ந்து நம் இயக்கப் பிரச்சாரத்தைத் திட்டமிடவும் முடிவு செய்யப்படது.
வேலு சரவணன் நாடகத் துறையில் புதுச்சேரி/தமிழக பகுதியில் பல செயல்பாடுகளைப் புரிபவர். அவர் கூறுவது என்னவெனில், “மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்பவர் மிகச் சிறந்த கோமாளிகள்” என JK பகிர்ந்ததோடு, கோமாளிகள் என ஏன் கூறுகிறோம் என்ற விளக்கத்தையும் தந்தார். ஆம், சர்க்கஸில் சிங்கத்துடன் கூண்டுக்குள் வீரச் செயல் புரிபவர் வரவில்லை என்றாலும் அந்த வேலையைக் கோமாளிகளே செய்வர், வேறு என்னவானாலும் அப்பணிகளுக்கு மாற்று கோமாளிகளே, பல கலைகளைத் தெரிந்தவர்களே கோமாளிகளாகிப் பெயர் பெற்றனர். உதாரணமாக கலைவாணர் N.S.கிருஷ்ணன் மட்டுமே கோமாளியாக அடையாளம் காணப்பட்டார், மற்ற அனைவரும் நகைச்சுவை நடிகராகவே பெயர் பெற்றனர் என்றார் JK, மேலும் அதே போல் சார்லி சாப்ளினும் என்றார் ச.மாடசாமி.
தனது பயிற்சிகளில் கலகலவகுப்பறை சிவா   சிவா பற்றியும், அவரது மாணவர் முன் அவர் தனக்கான வேடமாக கோமாளி முகமூடியைத் தேர்வு செய்தது பற்றியும் பகிரப்பட்டது.  மதுரையில் ஒரு முறை சிவா நடத்திய பயிற்சியில் கூட ஆசிரியர்கள் தன் கை காசுகளைப் போட்டு தன்னார்வமாக வருவது ஆச்சர்யமாக உள்ளது என்றார்.
அதே போல 2016 மே மாதம் திருச்சியில் நடத்திய AAA ஆசிரியர் கூடல் விழாவிலும் கூட 3 நாட்கள் ஆசிரியர் தமது பொருட்செலவில் விடுமுறையில் கூட  வந்து கலந்து கொண்டதை உமா நினைவு கூர்ந்தார்.
மேலும் சிவா கல்வி சார்ந்த திரைப்படங்களின் தொகுப்பை வைத்து ஆசிரியர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அருணா பகிர்ந்தார்.
கலைகளை ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்வது மிக இன்றியமையாத விஷயம் தான், நம் நாட்டில் தான் உடல் பற்றிய பெரிய பிரக்ஞையில் வாழ்கிறோம். அசைவே இல்லை, வெளி நாடுகளில் அது போல இல்லை. நம் ஆசிரியர்களுக்கு உடல் அசைவுகள் மிகவும் தேவையான ஒன்று. ஆனால்  ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் இந்தக் கலை ஆர்வத்தை கற்பித்தல் உத்தியாக மட்டுமெ எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ச.மாடசாமி. இது மிகவும் குறிப்பிடத்தக்கது.
கலைப்பயணம் வழியாக ப.க.பா இயக்கம் பற்றி எடுத்துச் செல்ல வேண்டியவற்றை முனைவர் காளீஸ்வரன் மற்றும் முருகேஷ் ஐ முதன்மையாகக் கொண்டு ஆலோசித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர், செயலர், ச.மாடசாமி ஆகியோர் வலியுறுத்திய பிறகு அடுத்த தலைப்பிற்குள் சென்றோம்.
SC / ST / கள்ளர் பள்ளிகள் :
##################
தாய்த் தமிழ்ப் பள்ளி  கல்யாணி, ஆசிரியர் மஹாலட்சுமி, சுடர் நடராஜன், ஆசிரியர்கள் எழமலை, நாகராஜன், ஈரோடு V.P.குணசெகரன், கருப்பசாமி, தேனி சுந்தர் கள்ளர் பள்ளிகள் பற்றிய ஆய்வு செய்வதால், அவரும் இவர்களோடு இணைந்து தொடர் கலந்துரையாடலில்  இது சார்ந்த முயற்சிகள் நடக்கின்றன என JK பகிர்ந்ததைத் தொடர்ந்து, அதற்கான குழுவில் உரையாடல் பகிர்வு நடக்கின்றது என்றார் நடராஜன்.
நாமக்கல் விமலா வித்யா அனைத்து விதமான தீர்ப்பானைகள் பலவற்றையும் தருகிறார். முன்மொழிவுகள் என்ன வைக்க வேண்டும், தலித் அமைப்புகள் கல்விக்காக என்ன செய்கின்றன? என்ற வினாக்களை தலைவர் முன்வைத்தார்.
நாம் அரசுப் பள்ளிகளுக்காக பல வித முயற்சிகளையும் செய்வது ஒரு புறம் இருக்கட்டும், பழங்குடியினப் பள்ளிகள் மொத்தம் 312  உள்ள  நிலையில், சேலத்தில் மட்டும் அதிக பள்ளிகள் (55) உள்ளன. இவர்களுக்கு மட்டுமல்ல, இது போன்ற தமிழகத்தின் எந்தப் பள்ளிக்கும் ஆண்டாய்வு முதலான கல்வித் துறையின் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது; ஆசிரியர்கள் சரியாகப் பள்ளிக்குச் செல்வதேயில்லை; கற்பித்தல் நடைபெறுவதேயில்லை, வருமான வரித் துறையைச் சேர்ந்தவர் பள்ளியைப்  பார்வையிட வருகிறார் என்றும் சுடர் நடராஜன் கூறினார்.
இப்பள்ளிகள் கல்வித்துறையுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான பல முயற்சிகள் செய்தும் மாற்றங்கள் இதுவரை எதுவும் நிகழவில்லையே! பல போராட்டங்கள் நடத்தியாயிற்று, ஊடகங்களுக்கும் எடுத்துச் சென்று ஆட்சியாளர்கள் கவனத்திற்குப் பல முறை கொண்டு சென்றும் எவருமே அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
கிருஸ்துதாஸ் காந்தி ஈரோடு வந்த போது ஈரோடு முழுக்க பழங்குடியினப் பள்ளிகளை சுற்றிக் காட்டிய பிறகும், இது சில காரணங்களுக்காக தனித் துறையாகக் கொண்டு வரப்பட்டது, அது நடக்கவில்லை, அதற்காக இரு துறைகளையும் இணைக்க முடியுமா என்றும் கேட்கிறார். மேலும் பொறுமையோடு இருக்கக் கூறினார், தலித் மாணவருக்கு பணத்தைக் கையில் தாருங்கள், அரசுப் பள்ளிகளே வேண்டாம் என்கிறார், இது போன்ற கருத்துகள் தான் உள்ளன என்றும் பதிவு செய்தார் நடராஜன் .
அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் அடி மூட்டைதான் ST பள்ளிகள். இந்திய அளவில் SC - 72 %  ST 54% எழுத்தறிவு உள்ளவர்  எனக் கூறுகிறது அரசு விபரம்.. ஆனால் உண்மை நிலை பாதி மட்டுமே. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து தனிக்கவனம் செலுத்த வேண்டிய துறை, காவல்துறையைப் போல மிக முக்கியமாகப் பார்க்க வேண்டும் அரசு என்று கூறிய பிறகு, தனக்கு மிக நெருக்கமான மாவட்டத்தில் பழங்குடியினரின் பள்ளிகள் பற்றிய நிலைகளைப் பகிர்ந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 20 பள்ளிகள் உள்ளன, அங்கு ஆசிரியர்களின் பணியிடங்கள் 75 ஆனால் 32 பேர் மட்டுமே இருக்கின்றனர். பர்கூர் மலையில் உள்ள பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். அங்கு மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். ஆனாலும் அரசு கவனிக்க மறுக்கிறது. ஆசிரியர்களை நியமிக்கக் கூறி  போராட்டம் நடத்தினோம், ஒப்பந்த முறையில் போடலாம் என்கின்றனர். அரசு உறைவிடப் பழங்குடியினர் பள்ளியில் (GTR) ஆசிரியர் போடுங்கள் என்றால், எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்கின்றனர் கல்வித்துறை அரசியல் தலைவர்கள்.
ஆசனூரின் மேல்நிலைப் பள்ளியில் 25 வருடங்களாக ஆங்கில ஆசிரியர் நியமனம் செய்யப்படவே இல்லை. பழங்குடியின மக்கள் பள்ளியில் 20 கி.மீட்டர் நடந்து வரும் பெண் குழந்தைகள் உண்டு. முன்பெல்லாம்  சிறு வயதில் திருமணம் நடப்பது, பள்ளி இருப்பதால் தள்ளிப்போனது எனக் கூறி மகிழ்கின்றனர் அப்பகுதி வாழ் பெண் குழந்தைகள், முதலில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இருந்ததால் அந்த வயது வரை எங்களுக்குத் திருமண பயம் இல்லாதிருந்தது. இப்போது மேல்நிலைப் பள்ளியாகியதால் திருமண வயது இன்னும் தள்ளிப் போனது, ஆனால் பள்ளியின் கூரைகள் எங்களுக்குப் பாடம் சொல்லித் தருமா எனக் கேட்டனர் . இந்த பிரச்சனைகள் அரசியல் தலைவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், தலைவர்கள் தெளிந்த அறிவு பெற வேண்டும். தனித் தீவாக இருக்கிறது ST பள்ளிகள் என்றார் நடராஜன்.
மேலும் இது சார்ந்த மாணவிகளுடனான சந்திப்பைப் பற்றியும் அங்குள்ள உண்மை நிலைகளைப் பற்றியும் தலைவர் வசந்திதேவி அவர்கள் வருத்தப்பட்ட நிலையில, எதற்காக SC / ST பள்ளிகள் பிரிவு என்ற கேள்வியை முன் வைத்தார் CEK, நானும் இதையேக் கேட்கிறேன் என்றார் வசந்திதேவி, அதை இணைப்பதற்கு சிவகாமி செயலராக இருந்த போது முயற்சி செய்தார். ஆனால் கட்சி பிரச்சனைகள் காரணமாக இயலவில்லை என்றார் அருணா ரத்தினம்.
அருணா ரத்தினம் தனது யூனிசெப் பணி அனுபவத்தில் பழங்குடியினப் பள்ளிகளுடன் நெருக்கமான அறிமுகங்கள் நிகழ்வுகள் இருந்ததைப் பல உதாரணங்களுடன் பகிர்ந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஒன்று தான் GTR பள்ளி, சுற்றியுள்ள 15 கி.மீட்டருக்கு, நடராஜன் தோழர் சொல்லிய அதே கதை, அங்குள்ள மேல்நிலைப் பள்ளி தங்கும் விடுதி இருப்பதால் 12 ஆம் வகுப்பு வரை படிக்க முடிந்தது பெண் குழந்தைகளால் அவர்களின் திருமணம் தள்ளிப்போனது, ஒரே ஒரு கழிப்பறை தான் இருக்கும் இது போன்று பல செய்திகள் கூறினார்.
தமிழக மக்கள் தொகையில் 21% ST இருக்கின்றனர் , SC ஆசிரியர்கள் நியமிக்காதீர்கள் என்று மாணவரே கூறுகின்றனர்.- ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வேண்டாம்; சமையல்காரருக்குத் தர வேண்டும் என்கிறார்கள் மாணவர்கள், என்றார் தலைவர் .
கல்வித்துறையுடன் இப்பள்ளிகளை இணைப்பதை நீதிமன்றங்களின் வழியே கொண்டு செல்லலாம், இல்லை என்றால் எதையும் ஏற்க மாட்டார்கள் என்றும், நிர்வாகம் மட்டுமாவது கல்வித் துறையுடன் கொண்டு வர கோரிக்கை வையுங்கள் என்றும் முன்னால் கல்விச் செயலர் உதயச்சந்திரன் கூறியதாகவும் நடராஜன் பகிர்ந்தார். ஏப்ரல் மாதம் முழுக்க 3 நாள் பயணமாக பள்ளிகளுக்குச் சென்று ஒரு முடிவுக்கு வந்து SC / ST அமைப்புகளோடு ஒரு கலந்துரையாடலை மே மாதம் நடத்தவும் ஒரு யோசனையை முன் வைத்தார்.
மதுரை, தேனி மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகள் அமைந்து இருப்பதும் , அதற்காக இணை இயக்குநர் கல்வித் துறையில் நியமிக்கப்பட்டு இருப்பதும் என சில மேலோட்டமான தகவல்கள் மட்டுமே பேசப்பட்டன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் / கல்வி உரிமைச் சட்டம் :
######################################
அடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTI) தகவல்கள் என்னவெல்லாம் வாங்கலாம் என வசந்தி தேவி அவர்கள் கேட்க, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூர்த்தி அவர்கள் இது சார்ந்து பேச ஆரம்பித்தார். எவற்றை எல்லாம் விவரங்களாகப் பெறுவது என முன் வைத்தார். உடனடி கவனத்திற்கு உள்ளது ஆசிரியர் நியமனம் பற்றி RTI ACT படி கேட்கலாம். மிக முக்கியமான அரசின் பணியாகப் பார்க்கப்படுவது ஆசிரியர் நியமனம் மட்டுமே, 2010 இல் சட்டம் வந்திருந்தாலும் இன்னும் ஆசிரியர் நியமனம் RTE முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை,
உதாரணம்: காங்கேயம் ஒன்றியத்தில் 3 நடுநிலைப் பள்ளிகளில் ஒரே பாட (தமிழ்) ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனில் எவ்வாறு இன்றுள்ள மேம்பட்ட கணக்கு அறிவியல் கோட்பாடுகளை கற்பிக்க முடியும்? என்ற செய்திகள் பகிரப்பட்டன ,
இடையில் மேன்மை இதழ் மணி வர அறிவியல் இயக்க துளிர் இல்லம் பற்றி சிறிது நேரம் பேசப்பட்டது. கழிப்பறைகளும் மிக முக்கியமானப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது, அது பற்றிய பிரச்சனைகள் பேசப்பட்டது. கழிப்பறைப் பற்றிய விபரங்களை, அப்பள்ளி மாணவரது பெற்றோர் (அ) பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரிடம் இருந்து தகவல் சேகரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த விவரங்கள் சேகரிப்பதால் எல்லாப் பள்ளிகளும் மாற்றம் வந்து விடும் என சொல்ல முடியாது, ஆனால் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல, விழிப்புணர்வு தர ஒரு வழியாகக் கொள்ளலாம் என்றார் தலைவர் வசந்திதேவி.
மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் போன்றோருக்கே RTE ACT பற்றிய விழிப்புணர்வு இல்லை என்கிறார் மூர்த்தி. கோப்புகளில் இல்லாத தகவலை நாம் கேட்க முடியாது, ஏற்கனவே உள்ள தகவல்களை மட்டுமே தருவார்கள் என CEK கூறினார். இறுதியாக மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளில் தகவல்களை சேகரிக்க, தோழர் மூர்த்தி மற்றும் உமா இருவரும் பொறுப்பேற்றனர்,
தொடர்ந்து கலைப் பயணத்தை குறைந்த அளவு சில மாவட்டங்களிலாவது நடத்துவது என முடிவு செய்யப்பட்டது - தருமபுரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தங்கள் மாவட்டத்தில் செய்த கலைப் பயண அனுபவத்தைப் பற்றி மூர்த்தி பகிர்ந்தார்.
சிறப்பு பகிர்வு – CEK :
##############
CEK சில கருத்துகளை முன் வைத்தார். இந்த சமுதாயத்தில் பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன, அவை கல்வித் துறையில் அதிகமாக பிரதிபலிக்கின்றது. ஆகவே அதனை நல்விதமாக இச்சமுதாயத்துக்கு மாற்றம் பெற நாம் அனைவரும் அவ்வப்போது கூடுகிறோம். அறிவியல் ஆய்வுப்படி 90% மூளை வளர்ச்சி 5 வயதிற்குள் வளர்ந்து விடுகிறது, எனவே அந்த வயதிற்குள் மூளை எதை உள்வாங்குகிறதோ பிற்காலத்தில் அதையே பிரதிபலிக்கிறது. ஆகவே ஆய்வுகள் சொல்வது மூளை வளர்ச்சியினால் 5 வயதிற்குள் தர வேண்டியவற்றைத் தர வேண்டும். அமெரிக்காவில் ஒபாமா அவர்கள் இதை மனதில் கொண்டு முன்பருவக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தார்.
யூனிசெப் நிறுவனம் ASER நிறுவனத்துடன் இணைந்து செய்த ஆய்விலிருந்து இதே போல் 5 வயதிற்குள் மூளை செல்கள் வளர்ந்து விடுவதை உறுதி செய்துள்ளது. நம் நாட்டில் ஆய்வு முடிவுப்படி இல்லாமல் பொது புத்தியால் நிறைய முன்பருவக் கல்வி முறை முதன்மைப்படுத்தப்படுகிறது. க்ரஷ் முறையும் உண்டு, அங்கன் வாடி முறையும் உண்டு, இரு முறைகளிலும் அரசு பட்ஜெட் போட்டு முன்பருவக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது.. விளையாட்டுகளின் வழியே மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே உருவாக்க வேண்டும், கற்பித்தலே கூடாது.
பின்லாந்து நாட்டின் கல்வி முறை பற்றியும்  குழந்தை முன்பருவக் கல்வி முறை பற்றியும் பல கருத்துகளைப் பகிர்ந்தார்.  அங்கு 1 ஆசிரியருக்கு 5 குழந்தைகள் என்று பள்ளிகளில் பின்பற்றப்படுகின்றன எனவும்  கல்வி குறித்த ஆய்வுகள் பற்றி சில செய்திகளையும் பகிர்ந்தார்.
அலுவலகம் / லெட்டர் பேட் / மற்றவை :
##########################
பிரசுரங்கள், இயக்கத்திற்கான லெட்டர் பேட் போன்றவை தயாரிக்க மேன்மை மணி அவர்களிடம் பேசி திட்டமிடப்பட்டது. இந்த  அமைப்பை முறைப்படுத்தப்பட சில முயற்சிகள் பற்றி கலந்து பேசப்பட்டது. பள்ளி புதிதாக ஆரம்பித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என சில கருத்துகள் பேச ஆரம்பித்து, அதில் உள்ள சிக்கல்களும் பேசப்பட்டு, மாற்றுக் கல்வி வேண்டுமெனில் அந்தந்த ஊரில், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளைத் தத்தெடுத்துக் கொள்வதை செய்யலாம் எனவும் பேசப்பட்டது.மேலும் தோழர் மூர்த்தி அவர்கள் தனது சொந்த மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து ஒரு பெற்றோராக அனுபவம் பற்றியும் பகிர்ந்தார்.
ச.மாடசாமி தனது பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், முதலில் சொல்லிக் கொடுக்கும் பாடலே... வித்யாசமாக இருக்க விரும்பினால் இரு என்ற பொருள் தரும் ஆங்கிலப் பாடலைக் கூறி... சில உதாரணம் கூறினார், தலைவரும் தனது பேத்திகள் படிக்கும் பள்ளியில் தேடலுக்கான அத்துணை வழிமுறைகள் கையாளப்படுகின்றன, இங்கு மட்டும் ஏன் இந்த நிலை என சில உதாரணங்களைக் கூறி வருத்தப்பட்டார்.
ப.க.பா.இயக்க, தகவல் பரிமாற்றத்திற்கு CFS ஷ்யாம் அவர்கள் தனது அலுவலகத்தைக் கொடுப்பதாகக் கூறியிருந்தாலும் தற்சமயம் அவருக்கு சூழல் சரிவர இல்லாததால் குரோம்பேட்டில் உமா அவர்களின் இல்ல முகவரி தர முன்வந்ததால் அதையே அனைவரும் ஆமோதிக்க, மேன்மை மணியிடம் முகவரி தரப்பட்டது. தலைவர் தனது வீட்டில் ப.க.பா. இயக்கப்  பணிகளை மேற்கொள்ள எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனக் கூறினார்.
கூட்டம் தலைவர் வசந்திதேவி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றதால்  அவருக்கு உதவியாக இருந்த நாகம்மா எங்கள் அனைவருக்கும் காலை, மாலை தண்ணீர், டீ, காபி, கடுங் காப்பி, பலகாரங்கள் என அனைத்தும் தந்து உதவினார், அவருக்கு நன்றி கூறி அனுப்பினோம், அனைவரும் அடுத்த செயல்பாடுகளுக்குத் தயாராகி புகைப்படம் எடுத்துக் கொண்டு 4.30க்கு கிளம்பினோம்.
வசந்தி தேவி அம்மாவின் வீடு கலைக்கூடமாக இருந்தது. அவரது பேத்திகளின் கைவண்ணத்தில்  வீடு நிறைய கலைப் பொருட்கள் பார்க்க ஆனந்தமாக இருந்தது. ரசனை மிகுந்த முதிய இளையவர்.
முக்கிய முடிவுகள் :
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
* RTI க்கான வினாக்கள் தயாரித்து அனுப்ப மூர்த்தியிடம் பணி ஒப்படைப்பு
* Hand Bills தயாரிப்புப் பணி, மாடசாமி, மூர்த்தி, CEK, உமா இவர்களிடம் வடிவமைக்கப் பொறுப்பு ஒப்படைப்பு
* ஆசிரியர்கள் குறைந்தது மாவட்டத்திற்கு பத்துப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக்கு உமா மற்றும் மூர்த்தி பொறுப்பு
* கலைப்பயணம் சார்ந்து காளீஸ்வரன், முருகேஷ் இருவரிடமும் பேசுதல்
* சமுத்திரக்கனி, ரோஹினி ஆகியோரிடம் தேதி வாங்குதல்
* ஆசிரியர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்தல்
* தற்காலிகமாக ப.க.பா. இயக்கத்திற்காக கடிதத்தாள்கள் குறைந்த அளவு அச்சடிக்க ஏற்பாடு மேன்மை மணி வழியாக செய்யப்பட்டது.
* தொடர்ந்து, ஆர்வம் உள்ள யாரை வேண்டுமானாலும் ப.க.பா இயக்கத்தில் இணைத்தல்
முனைவர் வே. வசந்தி தேவி, தலைவர் அவர்களது அனுமதியுடன்
ஜெ. கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்  தந்த திருத்தங்களுடன் பகிர்வது
உமா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive