அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, பெயர் பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையில், ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகள், விதிமீறல்களை சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
கடிவாளம் : இதன் ஒரு கட்டமாக, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், கடிவாளம் போடப்பட்டுஉள்ளது. 

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பாடத்திட்ட இணைப்பு அந்தஸ்தை மட்டும் பெற்றால் போதாது; தமிழக அரசின் விதிகளின் படி, பள்ளிக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் இல்லாவிட்டால், அந்த பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது.அதேபோல், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும். 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை : இந்நிலையில், மற்றொரு அதிரடியாக, அனைத்து பள்ளிகளும், தங்களின் அங்கீகார விபரங்களை, பள்ளி பெயர் பலகை மற்றும் நோட்டீஸ் பலகையில் நிரந்தரமாக எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., பள்ளிகள் போன்ற அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். 
அறிவிப்பு பலகை : இந்த பள்ளிகள், தாங்கள் சார்ந்த பாடத்திட்டம், அதற்கான இணைப்பு எண், தமிழக அரசிடம் பெற்றுள்ள அங்கீகார எண், அதற்கான ஆண்டு உள்ளிட்ட விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive