இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு
பெண் விஞ்ஞானி உள்ளிட்ட 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. திங்கட்கிழமை மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின்னுக்கு ((Arthur Ashkin)) சரிபாதியும், ஜெரார்டு மூரு ((Gérard Mourou)) மற்றும் டோனா ஸ்டிக்லேண்டுக்கு ((Donna Strickland)) மற்றொரு பாதியும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. லேசர் இயற்பியல் துறையில் மிக அடிப்படையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆர்தர் ஆஷ்கின்னுக்கு ஆப்டிக்கல் ட்வீசர்ஸ் ((optical tweezers)) என்ற கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் கற்பனையை உண்மையாக்கிய கண்டுபிடிப்பு என இது வர்ணிக்கப்படுகிறது. அணு அடிப்படை துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவை தொடர்பான ஆய்வில் இது பயன்படுகிறது.
புரோட்டீன்கள், மூலக்கூறுகள், டிஎன்ஏ உள்ளிட்டவை தொடர்பான அதிநுட்பமான உயிரியல் நிகழ்முறைகளை ஆய்வு செய்வதற்கும் ஆப்டிக்கல் ட்வீசர்கள் உதவுகின்றன. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் உயிருள்ள செல்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் அவற்றை ஆய்வு செய்வதிலும் இது பயன்படுகிறது. சிர்ப்டு பல்ஸ் ஆம்ப்ளிஃபிகேஷன் ((chirped pulse amplication)) என்ற கண்டுபிடிப்புக்காக ஜெரார்டு மூருவுக்கும், டோனா ஸ்டிக்லேண்டுக்கும் கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகச்செறிவான, மிகச்சிறிய லேசர் துடிப்புகளை உருவாக்கும் இந்த நுட்பம், தொழிற்துறை மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கும் புதிய ஆய்வுத்துறைகளுக்கும் வித்திட்டுள்ளது. அதிஉயர் துல்லியத்தில், உலோகங்களிலும், உயிரினங்களிலும் துளைகள் இடுவதற்கு இது பயன்படுகிறது. கூர்மையான லேசர் கற்றைகளை பயன்படுத்தி, ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...