Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

A1,A2 பால் என்றால் என்ன?உண்மை அறிவோம்.

நகரங்களில் இருப்பவர்கள் வாங்குவது முதலில் அது மாட்டு பாலா செயற்கைப்பாலா என்பதும் நாமறிந்த மாட்டுப்பால்,ஆட்டுப்பால்,எருமை பால் ஆகியவையும் ஒருபுறம் இருக்கட்டும்.

அது என்ன A1, A2 பால்? A2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், A1 பால் சீமை மற்றும் கலப்பினப் பசுவின் பால் என்றும் கூறப்படுகின்றதே? உண்மையா? A2 பால் சிறந்ததென்றும், A1 பால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றதே. ஏன்?

பாலில் சர்க்கரை, புரதம், கொழுப்பு, தாது உப்புகள் மற்றும் இன்னப்பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாலில் பத்துக்கும் மேற்ப்பட்ட கேசின் புரதங்கள் உள்ளன. அவற்றில் உள்ள பீட்டா கேசின் என்னும் ஒரு புரதத்தின் இரு மாறுப்பட்ட வடிவங்களே A1 மற்றும் A2 என்பன. ஒரு புரதத்தின் மாறுப்பட்ட வடிவத்திற்கு காரணம் அது தன்னகத்தே கொண்டுள்ள அமினோ அமிலங்களின் தொகுப்பில் உள்ள  வேறுபாடேயாகும்.  அமினோ அமிலங்களின் வேறுபாட்டிற்கு காரணம் அதை உற்பத்தி செய்ய மூலக்காரணியாக இருக்கும் மரபணுவில் உள்ள வேறுபாடேயாகும். பசுவினத்தின் மரபணுவில் உள்ள வேறுபாட்டிற்கு காரணம் இயற்கையில் நடைபெறும் மரபணு பிறழ்வே (Mutation) ஆகும்.

பசுவின் மடித் திசுவில் பீட்டா கேசின் புரதத்தை உற்பத்தி செய்வதற்கு மூலக்காரணமாக இருக்கும் மரபணுவில் ஏற்பட்ட மரபணு பிறழ்வே A1 மற்றும் A2  பீட்டா கேசின் புரதத்தின் தோற்றத்திற்கு காரணமாகும். இதை தான் சுருக்கமாக A1 மற்றும் A2 பால் என்று கூறுகிறோம். ஆரம்ப நாட்களில் அதாவது பலநூறு சந்ததிகளுக்கு முன்னால் அனைத்து வகையான பசுவினமும் A2 வகை பீட்டா கேசின் புரதத்தை மட்டுமே தோற்றுவிக்கும் மரபணுவை தான் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் நடைபெற்ற மரபணு பிறழ்வால் சீமைப் பசுக்கள் A1 பீட்டா கேசின் புரதத்தை உற்பத்தி செய்பவையாக மாற்றம் கொண்டன. இந்த மரபணு பிறழ்வு பசுவின் பால் உற்பத்தியை எதிர் மறையாக பாதிக்காமல் இருந்ததால் இவற்றின் முக்கியத்துவம் பல வருடங்களாக அறியப்படாமல் இருந்தது.

பன்னெடுங்காலமாக சீமைப் பசுக்கள் பால் உற்பத்திக்காக மட்டுமே தெரிவு செய்து இனவிருத்திக்கு உட்படுத்தப்படுவதால் A1 பீட்டா கேசின் புரத உற்பத்திக்கு காரணமான மரபணு தொடர்ச்சியாக அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு இன்று முழுவதுமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டு பசுவினங்களில் மேற்கூறிய மரபணு பிறழ்வு நடைபெறாததாலும், நம் நாட்டு பசுவினங்களை பால் உற்பத்திக்காக முறையாக தெரிவு செய்து இனவிருத்திக்கு உட்படுத்தப்படாத காரணத்தினாலும் இவை A2 பீட்டா கேசின் புரதத்தை தொடர்ச்சியாக அடுத்தடுத்த சந்ததிகளில் உற்பத்தி செய்கிறது. இந்த ஒரு பண்பைத்தான் நாம் சீமைப் பசு A1 பாலை தருகிறதென்றும், நாட்டுப் பசு A2 பாலை தருகிறதென்றும் கூறுகிறோம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியதென்னவென்றால் பசுவின் மடித் திசுவில் மரபணு பிறழ்வு என்பது பீட்டா கேசின் புரத மரபணுவில் மட்டும் நிகழ்வது அல்ல. மரபணு பிறழ்வு என்பது பசுவினத்தின் மொத்த மரபணுவின் எந்த ஒரு இடத்திலும் நிகழ கூடியதே. இவ்வாறு நிகழும் போது அது சார்ந்த அமினோ அமில உற்பத்தியிலும், பின்னர் அது சார்ந்த புரத உற்பத்தியிலும், பின்னர் அது சார்ந்த உயிர் வேதிவினைகளிலும், பின்னர் அது சார்ந்த உடற்செயல், பண்பு மற்றும் அமைப்பிலும் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. சுருங்க கூறுவதென்றால் பசுவினங்களுக்கு இடையே உள்ள சந்ததி வழி வேறுபாட்டிற்கு அடிப்படை காரணம் மரபணு பிறழ்வேயாகும். பீட்டா கேசின் புரத உற்பத்தியில் பசுவினங்களுக்கிடையே உள்ள வேறுபாடு சந்ததி வழி வேறுபாடேயாகும்.

A1, A2 பாலின் செரிமானத்திலுள்ள வேறுபாடு

பசுவினத்தால் உற்பத்தி செய்யப்பட்டப் பாலை கறந்து மனிதனால் உண்டப் பின்னர் பாலில் உள்ள புரதம் வயிற்றில் செரிமானத்திற்கு உட்பட்டு, பின்னர் சிறுகுடலை சென்றடைந்து அங்கு உட்கிரகிக்கப்பட்டு இரத்த நாளங்கள் மூலம் உடலில் பல்வேறு பாகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு செல்களில் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறு A1 மற்றும் A2 பீட்டா கேசின் புரதம் செரிமானத்திற்கு உட்பட்டு பீட்டா கேசோ மார்பின் 21 (BCM 21), பீட்டா கேசோ மார்பின் 13 (BCM 13), பீட்டா கேசோ மார்பின் 9 (BCM 9), பீட்டா கேசோ மார்பின் 7 (BCM 7) என்று வெவ்வேறு சிறு சிறு அமினோ அமில தொகுப்புகளாக (பெப்டைட்) சிறு குடலில் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் BCM 7 எனும் பெப்டைட் A1 பீட்டா கேசின் புரத செரிமானத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுகிறது. A2 பீட்டா கேசின் புரத செரிமானத்தின் போது BCM 7 வெளிப்படுவதில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் A1 பீட்டா கேசின் புரதத்தை தன்னகத்தே கொண்ட A1 பாலை சுரக்கும் சீமைப் பசுவின் பாலை அருந்தும் போது BCM 7 எனும் பெப்டைட் பால் அருந்தியவரின் சிறு குடலில் வெளிப்படும். மாறாக A2 பீட்டா கேசின் புரதத்தை தன்னகத்தே கொண்ட A2 பாலை சுரக்கும் நாட்டுப் பசுவின் பாலை அருந்தும் போது BCM 7 எனும் பெப்டைட் பால் அருந்தியவரின் சிறு குடலில் வெளிப்படுவதில்லை.

BCM 7-ம், உடல் நல கோளாறும்

A1 பாலை அருந்திய பின்னர் சிறு குடலில் BCM 7 உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலம் உடலில் பல்வேறு பாகங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் இந்த  BCM 7 என்னும் பெப்டைட்டிற்கும் சர்க்கரை நோய், இதய நோய், மூளை வளர்ச்சி குறைபாடு, இன்னப்பிற தொற்றா நோய்களுக்கும் கணிசமான ஓர் தொடர்பு உண்டு என்பதே ஆகும். ஆனால் இவ்வளவு பெரிய விடயத்தை சந்தேகத்திற்கு இடமில்லாத முறையில் நிரூபிக்கப்பட்ட எந்த ஒரு ஆய்வும் இதுவரை நம்ப தகுந்த சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. மேலும் மேற்கூறிய தொற்றா நோய்களுக்கு ஓராயிரம் காரணங்களுண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒற்றை காரணத்தை பிடித்துக்கொண்டு வணிக நோக்கத்திற்காக BCM 7 ஐ காரணம் காட்டி A1 பாலை தரும் சீமைப் பசுவை புறந்தள்ளுவதோ, நாட்டுப் பசுவை அதீதமாக தூக்கிப்பிடிப்பதோ கூடாது. அது அறமாகாது.

உண்மையிலேயே மேற்க்கண்ட பிரச்சனைகளுக்கெல்லாம் BCM 7 தான் மூலக்காரணமாக இருப்பின் ஐரோப்பிய கண்டத்தில் வாழும் மக்களுக்கு பல வகைகளில் தொந்தரவுகளை ஏற்ப்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் ஆண்டாண்டு காலமாக A1 பாலை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் கள நிலவரமோ வேறு. எப்படியெனில், A1 பாலை அதிகம் உட்கொள்ளாத இந்தியர்களாகிய நமக்குத் தான் மேற்க்கண்ட பிரச்சனைகள் அதிக அளவில் உள்ளது. அப்படியே BCM 7 மூலம் ஏதேனும் மிக மிக குறைந்த அளவில் பிரச்சினைகள் இருப்பினும் அதன் பொருட்டு நாம் பயம் கொள்ளலாகாது. ஏனென்றால் ஐரோப்பியர்களைப் போல அரை லிட்டர் பாலை தினந்தோறும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

கடந்த முப்பது வருடங்களாகத் தான் நம் மக்கள் பாலை கணிசமாக உணவில் சேர்த்து வந்து கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் கறவை மாடுகளில் கலப்பினச் சேர்க்கை எனும் இனவிருத்திக் கொள்கையே ஆகும். இந்த கலப்பினச் சேர்க்கை கொள்கையை அமல்படுத்தப்பட்டதில் சீமைப் பொலிக் காளைகளின் பங்கு மிக மிக முக்கியமானதொன்றாகும். வரலாறு இப்படி இருக்க BCM 7, A1 பால் போன்ற சாக்குகளை கூறி சீமைப் பசுக்களையும், கலப்பினப் பசுக்களையும் தீயவைகளாக சித்தரிப்பது கற்றறிந்தோர்க்குப் பெருமை சேர்க்கும் விடயமாக இருக்க முடியாது. கலப்பினச் சேர்க்கை எனும் கொள்கையால் நாம் எதிர்ப்பாராத சில அல்ல அல்ல பல இடர்பாடுகளை சந்தித்தது,  சந்தித்துக் கொண்டிருப்பது உண்மையே. மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றிற்கு காரணம் கொள்கையை அமல்ப்படுத்துவதில் மேற்கொண்ட தவறான சில முடிவுகளே தவிற A1 பாலுக்கான காரணமாக இருக்கும் சீமைப் பசுவோ, சீமை பொலிக் காளையோ அல்ல.

மனதிற் கொள்ள வேண்டியவை

நாட்டுப் பசு A2 பாலையும், சீமை மற்றும் கலப்பினப் பசு A1 பாலையும் சுரக்கிறது.
A1 பால் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கக் கூடியது என்பதற்கு நம்பத் தகுந்த, சந்தேகத்திற்கு இடமற்ற ஆதாரங்கள் இல்லை. எனவே A1 பால் கெட்ட பால் என கூறுவதில் அர்த்தமில்லை.

S.ஹரிநாராயணன்
முதுகலை உயிரியல் ஆசிரியர்
அ.மே.நி.பள்ளி.தச்சம்பட்டு.
திருவண்ணாமலை மாவட்டம். 






3 Comments:

  1. A1 பாலை செரிப்பதற்கு இரு விசேஷமான நொதிகள் வெள்ளையர்களுக்கு சுரக்கின்றன என்பதே உண்மை. இவை இந்தியர்களுக்கு சுரப்பதில்லை என்பதால் நமக்கு பிரச்சனைகள் அதிக அளவில் உள்ளது.

    ReplyDelete
  2. Beautiful Explanation. Thank you sir

    ReplyDelete
  3. Then why A1 milk is not used by government?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive