துப்புரவு பணியாளர், தோட்டப் பணியாளர், கிராம
உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற
கடைநிலை பணிக்கும் எழுத்துத் தேர்வு நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டது. தேனி, காமயக்கவுண்டன்பட்டி உதயகுமார் தாக்கல் செய்த மனு:நான்
மாற்றுத் திறனாளி. 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 1998ல், தேனி வேலைவாய்ப்பு
அலுவலகத்தில், பதிவு செய்தேன். எனக்குப் பின், பதிவு செய்த சேகர்,
காமயக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இரவுக் காவலர் பணியில்,
2011ல் நியமிக்கப்பட்டார்.
ஒன்றிய செயல் அலுவலராக இருந்த ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பதால்,
சேகருக்கு சலுகை காட்டப்பட்டு, பணி வழங்கப்பட்டுள்ளது.சேகரின் நியமனத்தில்
விதிமீறல் நடந்துள்ளது. அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி
வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:சேகர், நியமனம், முறைகேடாக நடந்துள்ளது
என்பதற்கு, போதிய ஆதாரங்களை, மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. சேகரின்
நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நிராகரிக்கப்படுகிறது.
இதுபோன்ற பணி நியமனங்களில், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என தெரிய
வருகிறது. இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டப்
பணியாளர் போன்ற பணியிடங்களில், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டி, நியமனம்
மேற்கொள்ளப்படுகிறது.கிராம உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், இரவுக் காவலர்,
துப்புரவுப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள், நேர்முகத் தேர்வு
அடிப்படையில், நிரப்பப்படுகின்றன.குரூப் 4 மற்றும் கடைநிலை ஊழியர்கள்
நியமனம், அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் செல்வாக்கு, பரிந்துரை
அடிப்படையில் நடக்கின்றன; முறைகேடுகள் நடக்கின்றன. இது, மிகுந்த
மனவேதனையைத் தருகிறது.
இதுபோன்ற நியமனங்கள் பெறும், பொது ஊழியர்களிடம் இருந்து, எப்படி நேர்மையை
எதிர்பார்க்க முடியும்?பொது ஊழியர்கள் சுயமரியாதை, நேர்மையை பேண வேண்டும்.
திறனற்ற நிர்வாகம், நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும்புள்ளியாக
அமையும்.இதுபோன்ற ஊழியர்கள் நியமன நடைமுறைகளில், ஆணி வேர் வரை சென்று,
பிரச்னைக்கு தீர்வு காண, இந்நீதிமன்றம் விரும்புகிறது.பொது வேலைவாய்ப்பு
நியமனங்களில், வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அனைவருக்கும் சம
வாய்ப்பு அளிக்க வேண்டும்
துப்புரவு பணியாளர், தோட்டப் பணியாளர், கிராம உதவியாளர், சத்துணவு
அமைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடைநிலை பணி நியமனங்களை,
எழுத்துத் தேர்வு அடிப்படையில் செய்வதற்கான வழிகாட்டுதல்களை, தமிழக அரசின்
தலைமைச் செயலர் பிறப்பிக்க வேண்டும்.நேர்முகத் தேர்விற்கான மதிப்பெண்கள்,
15 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
அனைத்து அரசுத் துறைகளிலும், கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்தல் மற்றும்
நியமனங்களில், தமிழகம் முழுவதும் ஒரே சீரான நடைமுறையை பின்பற்றும் வகையில்,
வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்.இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து,
அரசுத் தரப்பில், ஜூலை, 24ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு
உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...