சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை படிப்பு
களுக்கான பாடத்திட்டங்களை பல ஆண்டுகளாக மாற்றவில்லை என்பது தெரிய
வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இளநிலை படிப்புகளுக்கான பாடத்திட்ட விவரங்கள் பல்கலைக்கழக
இணையதளத்தில் வெளியிடுவதே இல்லை என்றும், அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கும்
முதுநிலை, எம்.ஃபில். படிப்புகளுக்கான பாடத்திட்ட விவரங்களை பார்க்கவோ
அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலை
காரணமாக, மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவது கேள்விக்குறியாகி வருவதாக
பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில்
பட்டப் படிப்புகளின் பாடத்திட்டத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில்
மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பாடத்திட்டத்தை மாற்றுவது அல்லது
மேம்படுத்துவதுதான் ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கியப் பணி.
இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகள் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு
ஒருமுறையும், இளநிலை பொறியியல் படிப்புகள் என்றால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு
முறையும் மாற்றம் செய்யவேண்டும். இவ்வாறு மாற்றம் செய்யப்படும்
பாடத்திட்டத்தை மாணவர்கள், பேராசிரியர்கள், இணைப்புக் கல்லூரிகள்
பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட
வேண்டும்.
அந்த அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான
பாடத்திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைப்பதோடு,
மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அனைவரும் பார்த்துத் தெரிந்துகொள்ளும்
வகையில் இணையதளத்திலும் வெளியிட்டு வருகிறது.
ஆனால், தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகமாக
விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம், முறையாக பாடத்திட்டங்ளை
மாற்றியமைப்பதில்லை எனவும், பாடத்திட்ட விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளன.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் 70-க்கும் மேற்பட்ட துறைகளில் இந்திய
வரலாறு, ஆங்கிலம், மேலாண்மை, ஊடகவியல் போன்ற ஒரு சில துறைகளைச் சேர்ந்த
முதுநிலை, எம்.ஃபில். படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டும் அண்மையில்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மிக முக்கியமான அறிவியல் துறைகளில் பல ஆண்டுகளாக பாடத்திட்டம்
மாற்றியமைக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக கணினி அறிவியல் துறையில் கடந்த 9
ஆண்டுகளாக பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை எனவும், பிற அறிவியல்
துறைகளில் 4 முதல் 5 ஆண்டுகளாக பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை
எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இணையதளத்தில் வெளியிட வேண்டும்: இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
பல்கலைக்கழகம் பல துறைகளுக்கான பாடத்திட்டத்தை பல ஆண்டுகளாக மாற்றியமைக்கவே
இல்லை. குறிப்பாக, கணினி அறிவியல் துறை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த
நிலை காரணமாக, சென்னையில் உள்ள பல தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளில்
பிசிஏ, பி.எஸ்சி. போன்ற இளநிலை கணினி அறிவியல் பட்டப் படிப்புகளில் 9
ஆண்டுகள் பழைமையான பாடங்களே நடத்தப்பட்டு வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், கலை-அறிவியல் பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
எட்டாக் கனியாகிவிடும். எனவே, இளநிலை பட்டப் படிப்புகளுக்கான
பாடத்திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை சென்னைப்
பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் பல ஆண்டுகளாக வெளியிடுவதே இல்லை. முதுநிலை
மற்றும்
எம்.ஃபில். படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை மட்டுமே பல்கலைக்கழகம்
வெளியிட்டிருக்கிறது. அதுவும் திறந்து பார்க்க முடியாத நிலையில் உள்ளன.
இளநிலை, முதுநிலை என அனைத்து படிப்புகளுக்குமான பாடத் திட்டத்தை
இணையதளத்தில் வெளியிடுவது பல்கலைக்கழகத்தின் கடமை. அப்போதுதான், தாங்கள்
என்ன படிக்கப் போகிறோம் என்பதை மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள
முடியும் என்றனர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:
பல்கலைக்கழகத்தின் பல துறைகளில் பாடத் திட்டங்கள்
மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. கணினி அறிவியல் போன்ற ஒரு சில அறிவியல்
துறைகளில் மட்டும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வில்லை. இந்த நிலையில்,
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும், வேலைவாய்ப்புத் திறனை
அதிகரிக்கக் கூடிய வகையிலும் பாடத்திட்டங்களை மாற்றியமைக்குமாறு
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியிருக்கிறது.
எனவே, அதற்கான பணிகளை பல்கலைக்கழகம் இப்போது மேற்கொண்டு வருகிறது. வரும்
2020-21-ஆம் கல்வியாண்டில் அனைத்துப் படிப்புகளுக்குமான பாடத்திட்டங்களும்
மாற்றியமைக்கப்பட்டு விடும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...