மாணவர்களின் புத்தக வாசிப்புக்குப் இந்த முறையைக் கையாளலாமே!

புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.  இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.
 என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.
முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.
புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.  முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.
பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.
 ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.  ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.
பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.

வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive