தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தையல் ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக முறையான பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், 2016-ஆம் ஆண்டு அரசு இதற்காக ஒரு குழுவை நியமித்து, அதனடிப்படையில் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், முறையாக மாணவர்களின் கைகளுக்குக் கொண்டு சேரும் வகையில் புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை.
சிறப்புப் பாடங்களுக்கான வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஆசிரியர் பயிற்சிபடிப்பின்போது வழங்கப்பட்ட தையல், ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கான சில கையேடுகளை வைத்து மாணவர்களுக்குப் பாடங்களை இது நாள்வரை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறையால் மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டே சிறப்புப் பாடங்களுக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது தற்போது தெரியவந்துள்ளது. சிறப்பு பாடங்களுக்கான புத்தகங்கள் சில PDF வடிவில் சமூக வலைதளங்களில் தற்போது உலா வருவதன் மூலம் இது தெரியவந்திருக்கிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்புப் பாடங்களைக் கற்பிக்க 2,500 முழுநேர ஆசிரியர்களும், 12,000 பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பேசும் தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், சிறப்புப் பாடங்களைக் கற்பிக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றும் சூழ்நிலையில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ள விவரம் தற்போதுதான் தெரியவந்துள்ளதாகக் கூறுகின்றார்.
ஏன் சிறப்பு பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் முழுவதுமாகக் கொண்டுவரப்படவில்லை என்று அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...