மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக வலியுறுத்திவரும் கனிவான வேண்டுகோள்:
click here to download
வாழ்வாதார கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி எவ்வித உள்நோக்கமும் இன்றி முற்றிலும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகளை மையப்படுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் 2019 சனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டார்கள் . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சனவரி 29 க்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டவுடன் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிவிட்டார்கள். ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்கள் என 6500 க்கும் மேற்பட்டோர் மீது தமிழக அரசால் 17 பி குற்றச்சாட்டுக்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 19 மாத காலமாக ஊதிய உயர்வு , பதவி உயர்வு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2020 சனவரி முதல் பணி ஓய்வு பெற்று வருபவர்களை 17 பி குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு இருப்பதால் Not Permitted to Retirement என குறிப்பாணையினை பிறப்பித்து ஓய்வு பெற அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் ஓய்வூதியக்கோப்புகள் இவர்களுக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது . பணப்பயன் இழப்பால் பிள்ளைகளின் திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொருளாதார பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் காலத்திலும் , மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் காலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
போராட்டங்கள் முடிந்தவுடன் போராட்டங்கள் நடத்தியவர்களை அழைத்துப்பேசி அவர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்து அரசுடன் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்களின் உறவினைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் எவ்வித உள்நோக்கமுமின்றி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்கள் நலனை மட்டுமே மையப்படுத்தி போராடிய இணைப்புச் சங்கங்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பியுள்ளோம். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுங்கள் , இணக்கமான அணுகுமுறையுடன் சுமூகத்தீர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பளித்திடுகிற வகையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான 17 பி குற்றச்சாட்டுக்களை இரத்து செய்து ஓய்வுபெற அனுமதிக்கப்படாதவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கும் , பணப்பயன்களைப் பெறுவதற்கும் உதவிடுமாறு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் மீண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...