மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரேசன் பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்க பீகார் அரசு முடிவெடுத்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், பள்ளி இடைநிறுத்தத்தை
தவிர்க்கவும் மதிய உணவு திட்டம் மிகவும் உதவியது. மதிய உணவு திட்டத்தால்
பெரும்பாலான மாணவர்கள் அதிக பலனடைந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா
பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும்
பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வறுமையில் வாடும் மாணவர்கள்
உணவுக்கே சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போதிய ஊட்டச்சத்து
கிடைக்காமல் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்
வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பீகார் அரசு எடுத்துள்ள ஒரு முடிவு அனைவரது மத்தியிலும்
வரவேற்பை பெற்றுள்ளது.பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ரேசன்
பொருட்களும், உதவித்தொகையும் வழங்க மாநில பள்ளிக்கல்வித்துறை
முடிவெடுத்துள்ளது. மதிய உணவு திட்டத்தின் கீழ், 1 முதல் 5ம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு 8 கிலோ ரேசன் மற்றும் 358 ரூபாய்
வழங்கப்படவிருக்கிறது. அதே போல் 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு 12 கிலோ ரேஷன் மற்றும் ரூ.536 வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பான உரிய பணிகளை தொடங்குமாறு மாநில கல்வித்துறை மாவட்ட
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்களுக்கு
ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
அரசு தெரிவித்துள்ளது. ரேசன் பொருட்கள் மாணவர்களின் பெற்றோருக்கு
வழங்கப்படும் என்றும், உதவித்தொகை ஆன்லைன் மூலம் பெற்றோரது வங்கிக்
கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே ரூ. 378 கோடி மாணவர்களின்
கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பீகாரில் 12,125
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...