வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி ஊழியர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம்.
மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் யாவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு திரும்பப் பெறப்படும் வரை பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு 25.03.2020 முதல் தற்போது வரை முழுமையாகத் திரும்பப்பெறப்படவே இல்லை. இடையிடையே தளர்வுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. மேற்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலமே இது என்பதால் தற்போதும் மேற்படி அரசாணைப்படி சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டு.
முதல் அலையின் போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் என்பது அரசின் வழிகாட்டல்படி அதிகபட்சமாக 14 நாள்கள். இதன் காலத்தை ஊழியரின் வசிப்பிடப் பகுதிக்கான மருத்துவ அலுவலரே முடிவு செய்வார். அதற்கான சான்றளிக்கும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததே.
மொத்தத்தில் கொரோனா பாதித்த நபர் & அவருடைய குடும்ப உறுப்பினருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். இதற்கான தீர்க்கமான காலவரையறை என்பது ஏதுமில்லை.
மேலும், தொற்று பாதித்த நபர் / குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் சிகிச்சை அறிக்கையின் நகல் / வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...