NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை - தினமணி தலையங்கம்

 

பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை - தினமணி தலையங்கம்

 

பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!

பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது.

இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டது. இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.முதலில் மத்திய அரசு இத்திட்டத்தை தனது புதிய ஊழியா்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்தது.

இத்திட்டத்துக்கு அரசு ஊழியா்களிடையே இயல்பாகவே எதிா்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.புதிய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக ஊழியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும்.

தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா். ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொகை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு வட்டி ஈட்டப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகையை வட்டியுடன் பெறலாம். அல்லது, அவா்கள் வருடாந்திரத் தொகையை நிா்ணயித்துக்கொண்டு குறிப்பிட்ட பெருந்தொகையை வருடந்தோறும் பெறலாம்.

அதாவது புதிய ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியத்துக்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகையை அளிக்கிறாா்கள். அத்தொகை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்சியே அத்தொகையின் மதிப்பை நிா்ணயிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியா்கள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகையை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது. இது அனைவராலும் ஏற்கப்பட்ட திட்டம்.

சா்வதேச தொழிலாளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்ட 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களது கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டு) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்கள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது.

ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தொழிலாளா்களுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்களே வகிக்கின்றனா்.

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துறை (அரசு சாா்பு) ஊழியா்கள் 4 % தான் உள்ளனா். 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்களும் உள்ளனா். இவா்களில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்களை மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பாதிக்கும்.

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைத் தட்டிக் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்கள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்தும் கடமையும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. நாட்டின் மக்கள்தொகையில் இவா்களின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்திருக்கிறது.

நமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுமல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா்ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறைசாா்ந்த தொழிலாளா்களுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்கள் எவ்வாறு அதனைப் பெற முடியும்?

தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வான எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கள்.

தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.

இதனை தொழிலாளா் ஈட்டுறுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்துடன் ஒப்பிட்டுப் பாா்க்கலாம். லட்சக்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டத்தில் ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களது ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையானது ஒட்டுமொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே.

இபிஎஃப் ஓய்வூதியத் திட்டம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சம் ரூ. 3,250 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற முடியும்.

ஒரு காலத்தில், இத்தொகை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்கள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்கள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொகையை ரூ. 1,000 ஆக்கியது.

ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தைவிட அச்சமயத்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு, அவா்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதையே காட்டுகின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது.

அரசு இதற்கு முன் ஊழியா்களுக்கு அளித்துவந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

கட்டுரையாளா்:

பொருளாதார நிபுணா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive