NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? ஏன்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் 5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த அஞ்சல் தலைகளை திடீரென அதிகளவில் வாங்கிச் செல்வதே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 



இது குறித்து அஞ்சல் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “நாசிக்கில் அச்சிடப்பட்டு வரும் அஞ்சல் தலைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் வரும். தேவைக்கு அதிகமாக நுகர்வு இருக்கும் போது இது போல தட்டுப்பாடு ஏற்படும். தற்போதும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் காரணத்தால் தான் இந்த தட்டுப்பாடா? என்பது தெரியவில்லை. தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம்” என்றனர்.



இது குறித்து புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு சங்கரிடம் கேட்டபோது, “அவ்வப்போது இப்படி தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். உடனே அவை சரி செய்யப்படும். தாங்கள் குறிப்பிடும் இந்த தகவல் குறித்து விசாரணை செய்யப்படும்” என்றார். தொடர்ந்து, விழுப்புரம் நகர அஞ்சலகங்களில் 5 ரூபாய் அஞ்சல் தலைகளை வாங்க வந்த தனியார் பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, “ஒவ்வொருவரும் 10 ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் வாங்கி வந்து, அதை ஒரு தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்துடன் இணைத்து ‘public council of India - New Delhi 94’ என்ற முகவரிக்கு அனுப்பினால், ‘டேப்லெட் பிசி’ ஒன்றை இலவசமாக அனுப்பிவைப்பார்கள் என்று எங்கள் பள்ளியில் தெரிவித்தனர். அதனால் இதை வாங்குகிறோம்” என்று கூறினார்.



இது குறித்து விழுப்புரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் கேட்டபோது, “public council of India’ என்ற தனியார் அமைப்பு, பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் பிசி வழங்கப்படும் என்ற அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். தனியார் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித கல்வி உபகரணங்களையும் அரசு வழங்குவதில்லை. இந்நிறுவனம் 10 ஐந்து ரூபாய் போஸ்டல் ஸ்டாம்ப்தானே கேட்கிறார்கள் என்பதால் மாணவர்களிடம் இதனை சேகரித்து அனுப்ப பரிந்துரை செய்வோம். அந்த தனியார் அமைப்பு அனுப்பியதில், நீல நிற படிவம் தலைமை ஆசிரியருக்கு, சிவப்பு நிற படிவம் மாணவர்களுக்கானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி நாங்கள் மாணவர்கள் கொடுக்கும் ஸ்டாம்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து, சாதாரண தபாலில் அனுப்புகிறோம். மேலும் விவரங்களுக்கு 93194 85303 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘sub code M2A5R004’ என்று குறிப்பிட்டு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு www.pcoi.org.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் அந்த விண்ணப்பத்தில், மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தையின் தொழில் உள்ளிட்டவைகளுடன் 10 ஐந்து ரூபாய் அஞ்சல் தலைகளை இணைக்கச் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் குறிப்பிடும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டால், தொடர்பு செல்லவில்லை. அவர்கள் குறிப்பிடும் இணையதள முகவரியும் தவறாகவே இருந்தது. மாணவர்களிடையே தேவையற்ற ஒரு ஆசையைத் தூண்டி, அவர்களை அலைக்கழிப்பதாகவே இதை உணர முடிந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் இதுபற்றி கேட்ட போது, “தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலரை விட்டு உடனே விசாரிக்க சொல்கிறேன்’‘ என்று தெரிவித்தார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே இந்த 5 ரூபாய் அஞ்சல் தலை மோகம் இருந்து வரும் நிலையில், இவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு மாணவரும் ‘டேப்லெட் பிசி’ பெற்றதாக இதுவரையில் தகவல் இல்லை. மொத்தத்தில், ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடையே ஆசை காட்டி, அவர்கள் சார்ந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஏதோ ஓரு அமைப்பு திரட்டி வருவது உறுதியாகிறது. இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட இணையவழி கல்வியில் சேர ஆசை காட்டலாம். அடுத்த உயர்கல்விக்கு அணுகும் ஏஜென்சிகள் மாணவர்களின் இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



தனியார் நிறுவனம் அனுப்பிய
விண்ணப்பப் படிவ மாதிரி.

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், பொதுமக்களின் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, எப்படி வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பணமாக்கப்படுகிற்து என்பது விவரிக்கப்பட்டு இருக்கும். அதுபோலவே மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எல்லாம் சரி.. தரமான தனியார் பள்ளிகள் இதற்கு ஏன் உடன்பட வேண்டும்? இதுபோல மாணவர்கள் தன்னிச்சையாக செய்வதை அறிந்தால், பள்ளிகளே ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டி மாணவர்களை நல்ல முறையில வழி நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களே இதை ஏன் ஊக்குவிக்குகின்றனர்?” என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive