Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெள்ளம் பாதித்த குடும்பத்துக்கு ரூ.6000: முதல்வர் ஸ்டாலின்

 1165764

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னதாக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜேசிபி இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் மழைக்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர்கள், 50-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.


சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 8-ம் தேதி வரை 3 வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பால் பவுடர் - 58,222 கிலோ, குடிநீர் பாட்டில்கள் - 9,67,000 எண்ணிக்கை, பிரட் பாக்கெட் - 2,65,000 எண்ணிக்கை, பிஸ்கட் பாக்கெட் - 10,38,175 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.


வெள்ளம் வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (நேற்று) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதன் அடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500-ல் இருந்து ரூ.17 ஆயிரமாகவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33% மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.22,500 ஆகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை ரூ.37,500 ஆகவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை ரூ.4,000 ஆகவும், சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கான நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை, முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000-ல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


குடும்ப அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசித்து பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரொக்கமாக ஏன்? 2015 மழை பாதிப்பின்போது நிவாரண தொகை ரூ.5,000 வங்கி கணக்குகளில் போடப்பட்ட நிலையில், இம்முறை ஏன் நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுகிறது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என வங்கிகள் சார்பில் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்கு இல்லை. அதனால், நிவாரண தொகையை ரொக்கமாக தர முடிவெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive