அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010-ம்ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசுஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.
இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.
இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லைஎன்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...