Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

243 - ஒரு சபிக்கப்பட்ட வரம்!

 

243 - ஒரு சபிக்கப்பட்ட வரம்!

அண்மையில் ஆசிரியர்கள் மத்தியில் விடாமல் நிகழும் பலதரப்பட்ட களேபரத்திற்கு மூலகாரணம் இரு தரப்பு ஆவார்கள். ஒருவர் அவ்வக்கால ஆட்சியாளர்கள். மற்றொருவர் ஆசிரியர்கள் சார்ந்துள்ள இயக்கவாதிகள். இதில் மூன்றாம் தரப்பு ஒன்று உள்ளது. அதாவது, முழு அரசியல் சாயம் பூசிக்கொண்டு உள்நோக்கத்துடன் உலா வரும் சங்கவாதிகள்.

புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழித்தல், ஊதிய முரண்பாடுகள் களைதல், பழைய ஊக்க ஊதியம் அளித்தல், நிறுத்தி வைத்துள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீள் வழங்குதல், ஆசிரியர் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்தல், கற்பித்தல் பணியில் மட்டும் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்துதல், காலமுறை ஊதியத்துடன் காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்புதல், நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்படாத வகையில் அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் பதவி உயர்வு அளித்தல் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை எளிதில் புறந்தள்ளி வைக்கும் முகமாக ஆட்சியாளர்களால் கேட்பாரின்றிப் போடப்பட்ட பூதாகர வெடிகுண்டுதான் அரசாணை எண் 243!

இது வெளிவந்த அடுத்த நொடியே ஆசிரியச் சமூகத்தினரிடையே நன்றாகப் பற்றிக்கொண்டு எரிய தொடங்கிவிட்டது. அதுவரை பல்வேறு சங்கங்களில் விரும்பியோ, விரும்பாமலோ இருந்து வந்தாலும் ஒருதாய் மக்களாக வாழ்ந்து வரும் பல்வகைப்பட்ட ஆசிரியர்களிடையே பெரிதாக பிளவுகள் பல வெடிக்க ஆரம்பித்து விட்டன.

இயக்க உறவுகளில் கசப்பு உணர்ச்சிகள்... தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் நட்பில் சரிசெய்ய முடியாத விரிசல்கள்... இணக்கம் குன்றித் தேவையற்ற பிணக்குகள்... வேற்றுமை பாராட்டாமல் எப்போதும் கைகுலுக்கும் தோழமை உணர்வுக்குள் புதிதாக மறைத்து வைக்கப்படும் குரூரங்கள்... சக ஆசிரியர்கள் மீது கருணை பொழியும் கண்களில் திடீரென வெளிப்படும் வக்கிர பார்வைகள்... பாதிக்கப்பட்டோர் மீதான கரிசனப் பேச்சுகளில் இப்போது ஓயாத சொற்போர்கள்... சமூக ஊடகங்களில் ஒத்த சமுதாய உணர்வு கடந்து ஒரே சண்டை சழக்குகள்... நீயா நானா போட்டிப் பொறாமை பொச்சரிப்புகள்... ஒப்பாரி புலம்பல்கள்... வன்மம் மிக்க ஏச்சுகள்... பிறரை வேண்டுமென்றே தாழ்த்தி இழிவுபடுத்தல்கள்... தொடர் ஓட்டத்தில் தமக்கு முன்னே செல்பவரைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு மிதித்து விரைந்தோடி முன்னேறும் ஆர்ப்பாட்ட கொக்கரிப்புகள் எனத் தொடரும் விரும்பத்தகாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கு ஆளில்லா சூழல் இருப்பது வேதனைக்குரியது.

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் அனைத்திற்கும் இது மற்றுமொரு மோசமான கருப்பு காலகட்டமாக இருக்கப் போகிறது. இந்த கொடும் காட்டாற்று வெள்ளத்தில் எப்படி இவை மீளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மிக எளிதாகப் பிரித்தாளும் அரசியல் சகுனியாட்டத்தில் ஒரு தாய் மக்கள் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழலை இஃது ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. குட்டை குழம்பி இருந்தால் தான் தமக்கான மீன்களை எளிதில் பிடித்து உணவாக்கிக் கொள்ள முயலும் சாணக்கியத்தனத்திற்கு இரையாகப் போகின்றோமா? வேடன் விரித்த வலைக்குள் விடுபட்டு ஒருமித்த பலத்தை மறுபடியும் நிரூபித்து மழுங்கடிக்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நீண்ட கால பயனுள்ள கோரிக்கைகளை வென்றெடுக்க எழப் போகின்றோமா? தெரியவில்லை.

ஆட்சி பீடத்தை எப்போதும் அசைத்துப் பார்க்கும் விலை மதிப்பற்ற ஆளுயர ஆடியில் எப்படியோ கீறல் ஒன்று விழுந்து விட்டது. இனி முழுதாக ஒட்ட வைத்து அழகு பார்ப்பது சிரமம். இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில ஆசிரியர் இயக்கங்கள் தேன் தடவிய ஆசை வார்த்தைகளைக் கட்டவிழ்த்துக் கரை சேர துடிக்கும் மற்றுமொரு கொடுமை அரங்கேறுவதையும் நன்றாகக் காண முடிகிறது.

உறுதிமிக்க ஆசிரியர் பேரினத்தின் ஒற்றுமையின்மீது ஓங்கி போட்ட ஒரே சம்மட்டி அடியில் தெறித்து விழுவதில் உனக்கொன்று; எனக்கொன்று என்னும் கூட்டுக் கயமைத்தனம் அப்பட்டமாக இதில் தெரிவதாகவே படுகிறது.

சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று வெறுத்தொகுக்கும் நிலைமையில் தான் இந்த ஒற்றை வழிப் பதவி உயர்வுகள் இருக்கப் போகின்றன. பணப் பலன்கள் பெரிதும் கிடைக்காத நிலையிலும் குடும்பத்தைத் துறந்து தொலைதூர இடங்களுக்குச் சென்று பணிபுரிய கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படும் நிலையிலும் இந்த மாநில முன்னுரிமை மற்றும் ஒற்றை வழிப் பதவி உயர்வை வெறுத்தொகுக்கும் காலம் விரைவில் வரவிருக்கிறது.

குறிப்பாக, கடந்த கால இரு ஊதியக்குழுவினரால் கடைநிலைக்கு வேண்டுமென்றே தள்ளப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை சிறப்புப்படி ரூ 2000 ஐ இழந்து அதைவிட குறைந்த சொற்ப ஊதியப் பணப்பலனைப் பெற்றுக்கொண்டு மாநிலத்தின் எந்த மூலை முடுக்கிற்கு பெட்டிக் கட்டிக்கொண்டு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் போக இருக்கின்றனர் என்று விளங்கவில்லை.

அட போங்கடா! நீங்களும் உங்கள் போங்கு பதவி உயர்வுகளும் என்கிற ஜென் மனநிலைக்குப் பலர் வருவது உறுதி. 60 ஆண்டு கால தொடக்கக்கல்வி வரலாற்றில் இல்லாத அரசியல் உள்நோக்கம் கொண்ட 90 விழுக்காட்டினருக்குப் பேரிடரை விளைவிக்கும் கருப்பு அரசாணை 423 ஆல் தகுதியும் திறமையும் அனுபவமும் வாய்ந்த மூத்தோர் பலரும் இதனால் பெரும் பாதிப்படைய இருப்பதை மறுக்க முடியாது. ஒப்புக்கு ஆயிரம் விளக்கம் கூறலாம்; சமாளிக்கலாம். நஞ்சில் தோய்க்கப்பட்ட அருநெல்லி ஒருபோதும் உடலுக்கும் உயிருக்கும் நல்லதாகவே படாது.

இதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் நேரடி நியமனம் மற்றும் குறுகிய காலத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் குறைந்த எண்ணிக்கையிலான நடுநிலைப்பள்ளிப் பட்டதாரித் தலைமையாசிரியர் பதவி உயர்வு இடங்கள் தமக்கு வெகுவிரைவில் கிடைக்கப் போகும் பெருங்கனவில் இப்போதே மிதக்கத் தொடங்கிவிட்டனர். ஒத்த வயதுடையவர்கள், தம்மைவிட வயது குறைந்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்தப் பணியிடங்கள் எப்போது காலியாவது? இலவு காத்த கிளி போல் ஏங்கித் தவிக்கும் இளையோர் எப்போது திண்ணையில் இடம் பிடிக்கப் போகின்றார்கள்? எல்லாம் மங்காத்தா ஆடும் சந்தர்ப்பவாதிகளுக்கே வெளிச்சம்!

பள்ளிக்கல்வித்துறையைப் பொருத்தவரை பணிநிரவல் என்பது இயல்பான ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது. தொடக்கக்கல்வித் துறைக்கு இது சாத்தியமற்ற ஒன்றாகவே இதுநாள்வரை இருந்து வந்தது. குறிப்பாக, தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6587 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் மூன்று மற்றும் நான்காம் நிலையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தலைமேல் புதிதாக ஒரு கூரிய கத்தி தொங்க இருக்கிறது.

இனி எந்தவொரு தங்கு தடையின்றி மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி இவர்களை ஈவு இரக்கமின்றி எந்த மூலைக்கும் தூக்கி அடிக்கலாம். இந்த குறுகிய நோக்கம் கொண்ட அரசாணையின் பெரும் திட்டம் (Master Plan) இதுவாகும் என்று கருத வேண்டியுள்ளது. இப்போது வரிந்து கட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் சூழ்ச்சியால் முளைத்த சந்தர்ப்பவாத திடீர் சங்கங்கள் இது நடவாது என்று உறுதி அளிக்க முடியுமா?

உங்களுக்கு மட்டுமேயான உங்கள் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளுக்காகத் தோளோடு தோள் கொடுத்துக் கூட நின்ற மூத்தோரை எக்கித்தள்ளி பீடத்தைப் பிடிக்கும் வேளையில் இனி என்ன கவலை எமக்கு என்று பாராமல் இருப்பது சரியா?

வேறு வழியின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமிக்கப்பட்டவர்கள், தம் சொந்த காரணங்களுக்காக இடம் பெயர்ந்து முன்னுரிமை இழந்தவர்கள் ஆகியோருக்கு வேண்டுமானால் விடியல் அரசின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடும். இது நிச்சயம் ஆப்பசைத்த குரங்கு கதை போல் தான் பெரும் துயரத்தில் முடியப் போகிறது.

ஏற்கனவே, ஊதிய முரண்பாட்டில் பேரிழப்பை எதிர்நோக்கி அகப்பட்டுத் தவிக்கும் 29418 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குரிய ஊட்டுப் பதவிக்கு ஒரேயடியாக வேட்டு வைத்ததில் பாதிக்கப்பட்ட 22831 தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களும் இதனை எளிதில் கடந்து சென்று விட முடியாது.

ஏனெனில், இனி நேரடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் அதனைத் தொடர்ந்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வும் இவர்களைப் பொறுத்தவரை கானல் நீர் தான். இந்த பிறவியில் இந்த பதவி உயர்வுகள் இனி இவர்களுக்கு இல்லை. இது உண்மை. இதுதான் இந்த அரசாணையில் காணப்படும் மாபெரும் பிழையாகும்.

அதேவேளையில், தற்போது நடைமுறையில் உள்ள ஒருங்கிணைந்த நடுநிலைப்பள்ளிப் பட்டதாரித் தலைமையாசிரியர் பதவி உயர்வில் எத்தனையோ நேரடி நியமனப் பட்டதாரிகள் பல்வேறு ஒன்றியங்களில் தேர்வுநிலை கடந்து பணிபுரிந்து வருவது எண்ணத்தக்கது. மேலும், ஐந்து ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஊட்டுப் பதவி காலத்துடன் கூடுதலாக 16 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் முப்பதாண்டு மொத்த பணிக்காலத்தை எட்டும் நடுநிலைப்பள்ளிப் பட்டதாரித் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு காத்துக் கிடக்கும் மூத்தோரையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வது நல்லது.

பின்நவீனத்துவக் காலக் கட்டத்தில் எல்லாவிதமான துறைகளிலும் அடையாள அரசியல் நோக்கும் போக்கும் வரவர அதிகரித்து வருகிறது. அவரவர் அடையாளங்கள்; அவரவர் முன்னெடுப்புகள் என்பதாக நவீன ஆசிரியர் சமூகத்துள் ஊடுருவத் தொடங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக வேற்றுமையில் ஒற்றுமை எனும் பணி சார்ந்த மானுட அறம் சிதைக்கப்பட்டு என் பிரச்சினை; என் உரிமை என்ற நிலையில் பிளவுபட்டு நிற்கும். போதாதற்கு அவ்வக்கால அரசியல் சூழல் இதற்குக் கூடவே இருந்து தூபம் போடும். பன்மைத்துவம் இனி வழக்கொழிந்து அழியும். இதனால் கிடைக்கப் பெறும் ஆதாயம் என்பது எலிப்பொறிக்குள் வைக்கப்படும் சுட்ட தேங்காய்த் துண்டு போன்றதாகும்.

இதில் கொடுமை என்னவென்றால், ஓங்கி முதுகில் குத்தச் செய்து விட்டு பின் ஒன்றும் தெரியாதது போல் ஓடிவந்து நீலிக் கண்ணீர் கூட சிந்தாமல், இஃது ஆனந்த வலி; அற்புத வலி; மகோன்னத வலி என்று சமூக ஊடகங்களில் பாதிப்புக்குள்ளானவர்களிடம் வெட்டியாய்ப் பிதற்றுவதை என்னவென்பது? இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்! யாரோ ஒரு சிலர் கொடுக்கும் ஊக்க வார்த்தைகளை நம்பி ஒட்டுமொத்த பேரினத்தைத் மீளாத் துயரில் ஆட்படுத்துவது என்பது அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும். 243 என்பது ஒரு சபிக்கப்பட்ட வரம் எண்ணாகும். அதற்குள் தான் பலரின் தலையெழுத்தும் அடங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகடைக் காய்கள் கிடைக்கக் கூடும். அவர்கள் தக்க வெற்றி எண்களைச் சாதகமாக உருட்டுவது என்பது ஒரு நல்ல உறுதியான பதிலில் அடங்கி உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

எழுத்தாளர் மணி கணேசன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive