நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,2024-25 கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கிஉள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 20-ம்தேதிக்குள் செய்ய வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...