பள்ளி மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சென்னை ஐஐடி, தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை இலவசமாகச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரத்து 702 புத்தகங்களை ஐஐடி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.சீனிவாஸ் கூறுகையில், “சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக ‘பாப்புலர் சயின்ஸ்’ திட்டம் அமைந்துள்ளது.
9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இவை ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது.
மாணவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றி தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. 2026-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...