என் அறிவுக்கண்ணைத் திறந்த யுவாஷினி!
முனைவர் மணி கணேசன்
இன்றைய சூழலில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் மிகவும் எச்சரிக்கையோடும் பொறுப்புணர்வோடும் நடக்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, அண்மையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்தியாவில் முதல்முறையாக பள்ளி மாணவர்களுடன் உலவ வந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான ஐரிஷ் போல் பகுத்தறிவு படைத்த ஆசிரியப் பெருமக்கள் நடந்து கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதில் ஆண் ஆசிரியர்களின் நிலை துயரமானதும் துக்ககரமானதும் ஆகும்.
குறிப்பாக, பெண் குழந்தைகளிடம் கூட எட்ட நின்று பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இதில் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆண் ஆசிரியர்கள் பலரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் பணிபுரிந்து வருகின்றனர் என்பது மிகையாகாது. ஏதேனும் சொல்லிக் கண்டிக்கப் போய் தம் பதின்பருவ வயது கோளாறு காரணமாகத் தவறிழைக்கும் பெண் பிள்ளைகள் தம் தவறை மறைக்க நல்லது சொல்லும் ஆசிரியர்கள் மீது பொய்யாக போலியாக புனையப்பட்ட கதைகளால் எங்கே தம் மேல் போக்சோ சட்டம் பாய்ந்து விடுமோ என்கிற பயத்தில் ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வேலை செய்வது என்பது கவலை கொள்ளத்தக்கது.
அதற்காக தம் மனிதத்தன்மையைக் கழட்டி வைத்துவிட்டு ஒரு மனித எந்திரமாக குழந்தைகளுடன் வாழ முடியாது. நம் மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை என்கிற வாழ்வியல் கருத்திற்கேற்ப இத்தனை நெருக்கடியையும் செவ்வனே சமாளித்து ஒரு தந்தை உள்ளத்துடன் உளப்பூர்வமாகப் பணிபுரிவதை வழக்கமாகக் கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன்.
குழந்தைகள் எப்போதும் குதூகலம் மிக்கவர்கள். அதுமட்டுமின்றி விசித்திரமானவர்கள். அவர்கள் உலகம் என்பது தனி. அதில் எந்தவொரு பெரியர்களுக்கும் சொந்த தாய் தந்தையர் ஆனாலும் கூட இடமில்லை. இது புரியாமல் பலரும் இங்கு இன்றைய சூழல் குழந்தையாகத் தம்மைப் பாவித்துக்கொண்டு நடித்து வருவது வேடிக்கை.
என்னைப் பொறுத்தவரை ஓர் ஆகச் சிறந்த குழந்தை இலக்கியத்தை நிச்சயம் அவ்வக்கால குழந்தையால் மட்டுமே உருவாக்க முடியும் என்று திடமாக நம்புபவன் நான். இதற்காக குத்தீட்டிகள் பல என் மேல் பாய்ந்தாலும் கவலையில்லை. உறுதியான உண்மை அதுவேயாகும். ஏனையவை அனைத்தும் போலச் செய்தலே ஆகும்.
கடந்த கால குழந்தையின் இலக்கியம் நிகழ்கால குழந்தைக்கு ஒருபோதும் அணுக்கம் ஆகாது. அப்படியிருக்க, நிகழ்காலப் பெரியவர்களின் கடந்த கால குழந்தையின் தற்கால இலக்கியம் எவ்வாறு ஈடாகும்? ஏனெனில், குழந்தைகளின் மனம் புதிர் நிறைந்தது. அவர்களது உலகில் சரி தவறாகும்; தவறு சரியாகும். பிழை அழகாகும்; நேர்த்தி அருவருப்பாகும். எந்நேரமும் பலவகைப்பட்ட குழந்தைகளுடன் ஒன்றித்துப் பழகும் ஆசிரியர்களாலேயே ஒரு குழந்தையின் மனத்தை முழுதாக அறிய முடிவதில்லை. ஓரளவிற்கு முயற்சிக்க முடியும்! அவ்வளவே.
இதில் மூன்றாம் தரப்பினர் முழுதாக அறிந்துணர்ந்து விட்டதாக அளந்து விடும் அலப்பறைகள் அனைத்தும் அபத்தமேயாகும். ஏனெனில், என் முப்பதாண்டு ஆசிரியர் பணியில் இப்போதுவரை குழந்தைகள் சூழ் உலகில் எந்நேரமும் உழன்று உயிர்மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு குழந்தையின் ஆன்மாவையும் உண்மையாக உணர்வதில் ஓராயிரம் உளச்சிக்கல்கள்.
அதற்கு, வயது முதிர்ச்சியும் அனுபவ அறிவும் நம்மையும் அறியாமல் குழந்தைகள் முன் முந்திக்கொண்டு வந்து தடைகளாக இருந்து வருவதை உணர்தல் நல்லது. ஆதலால்தான், நான் எப்போதும் இதுகுறித்து உறுதியாகச் சொல்வேன். குழந்தைகளை நான் இந்த நொடி வரை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று.
என் எட்டாம் வகுப்பு மாணவர்களும் சரி. மாணவிகளும் சரி. என்னிடம் எளிதில் நெருங்கி வர யோசிப்பார்கள். அதற்காக நான் பயங்கரமான கண்டிப்பான நெருங்கி வர முடியாத ஆளும் கிடையாது. அஃது அவர்களது இயல்பாகக் காணப்படுகிறது. முடிந்தவரை என்னை நான் மாணவர்களின் ஆசிரியராகவே நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருபவன் ஆவேன்.
அதேவேளையில், ஒன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் எந்தவொரு கூச்சமும் துளி அச்சமும் இல்லாமல் ஓடிவந்து உரசி ஒட்டிக் கொள்வதும் வாய் ஓயாமல் ஏதேதோ சொல்ல முற்படுவதும் எனக்கே பெரும் வியப்பாகும். இத்தனைக்கும் நான் அவர்களது வகுப்பாசிரியரும் கிடையாது; பாட ஆசிரியரும் கிடையாது. மாலை வேளையில் கிடைக்கும் அந்த சொற்ப நேரத்தில் ஒருவர் மீதான ஒருவரின் புகார்களைக் கேட்க இரண்டு காதுகள் போதாது.
தவிர, அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. நம்மை விலக்கி வெளியே தான் வைத்திருப்பார்கள். இந்த சிறுவர் உளவியலில் காணப்படும் நடப்பைப் புரிந்து கொள்ளாதப் பிறவிகள், 'நான் குழந்தை ஆயிட்டேனே!' என்று பிதற்றுவதைப் பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது. குழந்தையாக இயல்பாக வாழ்தலுக்கும் பாவனை கொண்டு நடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒன்றாம் வகுப்பு யுவாஷினி என்னை அப்படித்தான் அவள் விளையாடும் விளையாட்டிலிருந்து வெளியே தள்ளிவைத்து ஆடிக் கொண்டிருந்தாள். ஓர் ஆட்டுமந்தையினை மேய்ப்பவர் எவ்வாறு மிக லாவகமாக அதன் திசையைத் திருப்பி விடுவதைப் போல் குழந்தைகள் தம் கிராமத்து எளிய விளையாட்டுகளை எங்கே யார் எப்படி மாற்றியது என்று தெரியாமல் புதியதொரு விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பதை அறிந்திலர் யாரும் கிடையாது.
முன்பனிக் காலத்தில் தொடங்கிய சிறுமிகளின் சில்லுக்கோடு விளையாட்டானது பின்பனிக் காலத்தில் தட்டாங்கல் ஆட்டமாக உருமாறி நிற்கிறது. இதனைப் பாண்டிக்கல் என்றும் கூறுவர். ஒரே மாதிரியான உருண்டையான சிறுசிறு கருங்கற்களையோ கூழாங்கற்களையோ கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் இந்த விளையாட்டு சங்க காலத்தில் தெற்றி எனப்பட்டது.
கிடைக்கும் இடைவேளையின் போதெல்லாம் எட்டு வகுப்பு முடிய உள்ள சிறுமிகள் இந்தத் தட்டாங்கற்களை எடுத்துக் கொண்டு குறைந்தபட்சம் இருவராக உட்கார்ந்து விடுகின்றனர். அன்று யுவாஷினியும் அப்படித்தான் மாலை வழிபாட்டுக் கூட்டத்திற்கான அழைப்பு மணி அழைக்கும் வரை விளையாட தனுஶ்ரீயை கூட வைத்துக் கொண்டாள்.
இதில் அவர்களுக்கிடையில் நான் புகுந்தது பெரும் குற்றம். பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். ஆனாலும், அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னை ஓர் அந்நிய ஆளாகவும் நினைத்தது மாதிரி தெரியவில்லை. தனுஶ்ரீயிடம் வழக்கம் போல் வேடிக்கை செய்து விளையாடிக் கொண்டிருந்தேன். எனக்கு நேர் எதிரே யுவாஷினி குட்டிக் குட்டிக் கற்களுக்குப் பதிலாக ஏதோ ஒரு சிறு பளிங்கு உருண்டையைப் போல பளபளப்பாக எதையோ வைத்திருந்தாள்.
புது எவர்சில்வர் உருண்டை. என்னையும் விட்டு வைக்கவில்லை. ஈர்த்தது.
"கொடு! பார்க்கலாம்" என்றேன். அதிகாரத் தொனி அதில் இல்லை. இலேசான கெஞ்சல் மட்டுமே தொக்கி நின்றது. இன்னொன்று சிறுவர் சிறுமியரிடம் அதிகாரம் செலுத்தி எதையும் பெற முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும்.
எளிதில் கொடுத்து விடுவாள் என்று தான் நினைத்தேன். அதற்காக எந்தவொரு மெனக்கெடலும் என்னிடமில்லை. நானும் காட்ட விரும்பவில்லை. ஆனாலும் அவள் அதை என்னிடம் கொடுக்க மறுத்து விட்டாள்.
"தா புள்ளே! நம்மச் ச்சாரு எடுத்துக்க மாட்டாரு!"
சிபாரிசு செய்தாள் தனுஶ்ரீ. அவளோ அதற்கும் மசியவில்லை. இப்போது என் நெஞ்சில் இலேசான ஒரு கீறல் கோடு போடத் தொடங்கியது.
"நா எடுத்துக்க மாட்டேன். தா! பார்த்துட்டு தந்துடுறேன்!"
உறுதிமொழி கொடுத்தேன். ஏமாற்றம் உள்ளே எதுவோ செய்தது. முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டேன்.
அவள் எதற்கும் மசியவில்லை. கூட இருந்த அவளது சிநேகிதி ஆட்டம் தடைபட்ட வெறுப்பில் கத்திச் சொன்னாள்.
"அடச்சீ! குடுடீ! சாரு சாமி சத்தியமா பார்த்துட்டு தந்துருவாங்க."
கூட சேர்ந்து அதற்கு நானும் ஒப்புக்கு ஆமாம் என்பது போல தலையாட்டினேன். வெட்கத்தை விட்டு.
கெட்டியாக அதை உள்ளங்கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு முடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் யுவாஷினி. வாய் நிறைய புன்னகைப் பூத்துக் குலுங்கியபடி மண்டையைக் கோணல்மாணலாக ஆட்டிக்கொண்டு.
"சாரு எடுத்துகுவாங்க! அதுனால நான் தரமாட்டேன்!"
மீண்டும் மீண்டும் இதையே அவள் உறுதிபட கூறிக் கொண்டிருந்தாள். எப்படியோ அங்கு வந்து சேர்ந்த பெரிய பிள்ளைகள் எனக்காக வாதாடிக் கெஞ்சினர். கொஞ்சம் கூட அவள் மசியவில்லை. மாறாக தன் கையைக் கெட்டியாக மூடிக் கொண்டாள்.
எனக்கு அழுகை முட்டியது. வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அரை நூற்றாண்டு வயதும் அதில் முக்கால்வாசி ஆசிரியர் பணி அனுபவமும் குறைந்தபட்ச நேர்மை உணர்வும் முடிந்தவரை கொடுக்கும் இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற வைராக்கியமும் ஒரு சின்னஞ்சிறு சிறுமி முன் இப்படி மண்டியிட வைத்து விட்டதே என்கிற எண்ணம் என்னைக் கொன்று தின்றது.
அங்கு குழுமியிருந்த அனைவரையும் கண்களால் போகச் சொன்னதற்கு பின்_
"யுவா! சாரு அது என்னன்னு பார்த்துட்டு உடனே தந்துடுவேன்!"
கண்ணீர் மட்டும் தான் வரவில்லை.
"போங்க சார்! நீங்க தரமாட்டீங்க!"
சிணுங்கினாள். பிஞ்சு முகம் சுருங்கிப் போயிருந்தது.
"அப்பனா ஒன்னோட டூஊ...!"
அவளிடம் பதிலில்லை.
இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருந்தோம். யாரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை. அவ்வளவு சத்தத்திற்கு இடையிலும் கடிகாரத்தின் துடிப்புடன் இதயத்துடிப்பும் இணைந்து கொண்டது போல் ஓர் உணர்வு.
"சரி. அப்பனா நீங்களே இதை வச்சுக்கோங்க!"
அலுத்தபடி உள்ளங்கையை என்முன் விரித்துக் காண்பித்தாள். அந்த வெள்ளி உருண்டை ஈரம் பட்டு பல்லிளித்தது. மேலும் அவளது பிஞ்சுக்கை ரோஜாவாக சிவந்து கிடந்தது.
"ஓ! இதுவா? சரி சரி. இதை நீயே வச்சுக்கோ. வாயிலே எக்காரணம் கொண்டும் போட்டுடக் கூடாது! புரிஞ்சுதா?"
அதைத் திரும்பக் கொடுத்ததும் அவளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. எங்கே அவள் நினைத்தது போல் நான் அதை எடுத்துக் கொண்டு விடுவேனோ என்கிற தவிப்பு அவள் கண்களில் பளிச்சிட்டது.
வழிநெடுக இது குறித்தே நான் யோசித்தபடி வந்தேன். குழந்தைகளிடம் பெரியவர்கள் அவர்களது உடைமைகள் மீது ஒருபோதும் உரிமை கொண்டாடுவதில்லை என்கிற நம்பிக்கை ஊட்டுவது மிகவும் அவசியம் என்பது இப்போது எனக்கு நன்கு புரிந்தது.
வகுப்பு தொடரும்...
நன்றி : திறவுகோல் பங்குனி மாத இதழ் 2024
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...