Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை: நடவடிக்கையும், எதிர்வினைகளும்!

1307309

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தையொட்டி, பாஜக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினை ஆற்றியுள்ளன.

அமைச்சர் அன்பில் மகேஸ்: ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் உள்ள அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் பேசிய கருத்துகள், மூடநம்பிக்கையை முன்வைத்து சர்ச்சைக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.


மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்: தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்.எஸ்.பாரதி: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இதை திட்டமிட்டு யாரோ செய்கின்றனர்? மாநிலக் கல்வித் தரம் குறித்து விமர்சித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கும், அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவுக்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது. அதை அறிந்து, புரிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுபோன்ற செயல்கள் நடக்கக் கூடாது. இதுபோல சில புல்லுருவிகள் ஆங்காங்கே வருவார்கள். அதை அரசு கவனித்து 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல இனிமேல் நடக்காமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் சிலநேரங்களில் அரசின் கவனத்துக்கு வராமல் கூட நடக்கலாம். அமைச்சரின் பேட்டி மற்றும் துறை செயலரின் கடிதங்களைப் பார்க்கும்போது, இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் எங்கேயும் நடக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.

தமிழகம் கல்வியிலே சிறந்து நிற்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் பெற்றிருக்கிறது. இதை ஜீரணிக்க முடியாத சில சக்திகள், இதைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். பெரியார் பிறந்த, அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட, கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட, முதல்வர் ஸ்டாலினால் தலைமைத் தாங்கி நடத்தப்படுகிற இந்த மண்ணில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள், தவறான கருத்துகள் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிக: மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக் கல்வித் துறை முயல்வது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்வு நடத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ள கருத்து அவரை விட வயதில் சிறியவரான மகாவிஷ்ணு கொண்டுள்ள முதிர்ச்சி கூட அமைச்சருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு ரவுடி பேசுவதைப் போல அமைச்சர், மகா விஷ்ணுவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கதக்கது.


கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகின்றனர். இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானது. திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது,” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’ என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துகளை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார். இதே சொற்பொழிவாளர் மாணவிகள் நிறைந்த மற்றொரு பள்ளி நிகழ்வில் பேசும் போது பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

பெண்கள் அழகின்றியும், மாற்றுத் திறனாளிகளாவும் பிறந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசி அவமதித்துள்ளார். இந்த பொறுப்பற்ற, மூடத்தனமான பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்த மாணவர் அமைப்புகளின் முறையீடுகள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் முட நம்பிக்கை கருத்துகளுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்: ஆசிரியர் தினத்தில் நடந்த சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்

 கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive