Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசியல் தீக்குண்டத்தில் அப்பாவிக் குழந்தைகளை ஆகுதி ஆக்காதீர்!

 



கல்வியில் கறை படிவதும் காவி படிவதும் நல்லதல்ல. வெறுப்பு அரசியலின் விளைநிலங்களாக அண்மைக் காலங்களில் பள்ளிகளை ஆக்கும் முயற்சிகள் நடந்தேறி வருகின்றன. சாதி, மத, இன, மொழி பிரிவினைவாதிகளுக்கு அரசியல் செய்ய இங்கு ஆயிரம் போக்கிடங்கள் உள்ளன. கல்விக் கூடங்கள் இதுபோன்ற பாவிகளின் காலடித் தடங்கள் படிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஏற்கவும் முடியாது.

பிஞ்சு குழந்தைகளின் இதயங்களிலும் சரி, மூளைகளிலும் சரி நஞ்சை விதைப்பதை மானுடம் போற்றும் எந்தவொரு மனிதராலும் சகித்துக் கொள்வதற்கில்லை. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பது தான் மனித அறம். இதற்கு மநுநீதி இடம் தராமல் போனாலும் அது மாபெரும் அநீதியே ஆகும். சனாதனம், சமதர்மம் இரண்டையும் அவர்கள் தம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமேயன்றி திணிப்பு அறவே ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த 18 ஆவது மக்களவைக்கான அறிவிக்கை மூலம் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்து வ்த சூழலில் தேர்தலின் பொருட்டு தம் கட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடும் முக்கிய நபருக்கு ஆதரவாக ஆள் திரட்டிக் கொண்டு தம் சொந்த உள்நோக்கம் மிக்க விருப்பத்தைக் காண்பிக்க பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளைச் சாலையில் நிறுத்தி வைத்த துணிவு இவர்களுக்கு யார் தந்தது?

குடி கெடுக்கும் குடிக்கும் கோழி பிரியாணிக்கும் ஆளாகப் பறக்கும் வாடகை மனிதர்களை மந்தைகள் போல் கிடைத்த வாகனங்களில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் மனிதர்கள் கூட இத்தகையதொரு செயலைச் செய்ய விரும்ப மாட்டார்கள். பள்ளி பிள்ளைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று விட்டு விலகிப் போகும் சூழலில் கல்விச் சாலைக்கு அவர்தம் பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தலைவாரிப் பூச்சூடி அனுப்பி வைத்த பிள்ளைகளைச் சுட்டெரிக்கும் தார்ச்சாலையில் யார் வருகைக்கோ காக்க வைக்க இவர்கள் யார்?

அதுபோல், முக்கியமான அரசுப் பள்ளிகளில் குறிப்பாக, பதின்பருவ பெண் குழந்தைகள் அதிகம் படிக்கும் இடங்களில் தன்னம்பிக்கை மற்றும் தன்முனைப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எனும் போர்வையில் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகளுக்கு ஒவ்வாத, புறம்பான பழைமைவாத, அடிப்படை, மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் சனாதனவாதிகளைச் சிறப்பு விருந்தினராகப் பள்ளிக்கு அழைத்து வந்து எதிர்கால தலைமுறையினர் இடத்து நஞ்சை விதைப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறிய கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.

இக்குற்றங்கள் பள்ளிகளில் நிகழ பிற்போக்குத்தனமும் சமூகநீதிக்கு எதிரான ஆதிக்க எண்ணம் கொண்ட வலதுசாரி மனப்பாங்கும் குறுகிய உள்நோக்கம் கொண்டு செயல்படும் மையப்புள்ளியாக ஆசிரியர் சமூகம் இருப்பது என்பது மிகவும் வெட்கக்கேடு. பள்ளிகள் வழிபாட்டு தலங்களை விட மேலானது. உயர்வானதும் கூட. சாதி, மத, இன, மொழி முதலான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான முடைநாற்றம் கொண்ட சாக்கடையைப் பாய்ச்சுவது ஆகாது.

அதுபோல, நன்கொடை எனும் பெயரில் இதுபோன்ற பொதுமக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மூளைச்சலவை செய்வதையே பெரும் வியாபாரமாக கடைவிரித்த மூடநம்பிக்கை சொற்பொழிவாளர்களைப் பள்ளி வளாகங்களுக்குள் சிவப்புக் கம்பளம் விரித்து வயது வித்தியாசம் இல்லாமல் மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை உணராத மாக்கள் பலர் அக்கயமை படைத்தவர் காலில் ஆட்டு மந்தைகளாக விழுந்து வணங்குதல் என்பது சகிப்பதற்கில்லை.

நாடெங்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்ட இந்த சூழ்நிலையில் மகளிர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொய்யான போலியான ஆன்மீகவாதிகளை அழைத்துக் கைகட்டி நிற்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஆசிரியர்களுக்குப் பாத வழிபாடு நடத்துதல், அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகுப்பறையில் மூடநம்பிக்கைகளை முற்றிலும் விளைவிக்கும் சோதிட புரட்டுகளைப் பரப்புரை செய்தல், அனைவருக்குமான பொது இடங்களில் குறிப்பிட்ட மத உணர்வைக் கிளர்த்தும் பாடல்களை ஒலிக்கச் செய்து பள்ளி மாணவ, மாணவிகளைச் சாமியாடச் செய்தல் முதலான மானுட அறம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவற்றை பன்மைத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் அனுமதிக்க முடியவே முடியாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு பெரும் தவறை யாரும் செய்யத் துணியவோ, நடத்திக் காண்பிக்கவோ கனவிலும் கூட நினைத்துப் பார்க்காதவாறு அரசின் கொள்கை முடிவுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குதல் காலத்தின் கட்டாயமாகும்.

பொதுமக்கள் வரிப்பணத்தில் ஊதியம் உள்ளிட்ட இதரப் படிகளும் சலுகைகளும் பெறும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களும் அதன் நிர்வாகமும் பணியாளர் நன்நடத்தை விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதையும் அக்குற்றத்தைத் தண்டனைக்குரிய குற்றம் என்று ஒத்துக்கொள்ளாமல் ஏதேதோ பூசி மெழுகி நியாயம் கற்பிக்க முயல்வதையும் எளிதில் கடந்து சென்று விட முடியாது. தற்காலிக தீர்வாகப் பணியிட மாற்றம் மட்டும் இருந்துவிடக் கூடாது. தற்காலிக பணியிடை நீக்கம் அதனைத் தொடர்ந்து பணியிலிருந்து கட்டாய ஓய்வு உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதே சாலச்சிறந்தது.

இதுபோன்ற தவறுகள் மக்கள் மன்றங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த கட்சி அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்தாலும் சாமானிய மக்களின் கடைசித்துளி நம்பிக்கையாகத் திகழும் நீதிமன்றங்கள் நன்கு திட்டமிட்டு வேண்டுமென்றே ஒரு சார்பான உள்நோக்கத்துடன் தவறிழைத்த எப்பேர்ப்பட்ட குற்றவாளிகளும் சட்டத்தின் ஓட்டைகளான இருட்டுப் பக்கங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தப்பித்திட கருணையே காட்டக் கூடாது.

மேலும், சொந்த உள்நோக்கத்திற்காகவும் சுய இலாபத்திற்காகவும் கல்வி சார்ந்த அறங்கள் அனைத்தையும் மீறி யார் கத்தி எடுத்தாலும் தவறு தான் என்பதை நிலைநிறுத்த விருப்பு வெறுப்பில்லாமல் நீதியின் பக்கம் மட்டுமே நின்று நியாயம் வழங்குவதைச் சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதி செய்வதும் அவ் அறத்தின்பால் யாவரும் நிற்பதும் அதற்காகக் குரல் கொடுப்பவர்களைக் காப்பதும் இன்றியமையாதக் கடமைகளாகும். இத்தகைய பொய்யான போலியான பகட்டான எதிர்கால வாக்கு அரசியல் நிகழ்வுகளுக்குத் தற்காலத்திய தவறான நிகழ்வு பிள்ளையார் சுழி போட்டது போலாகும். 

இனி, ஆசிரியர்கள் வெளிப்படையாக அரசியல் செய்வார்கள்; பள்ளிகளில் நல்ல கல்வி காணாமல் போகும். ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வலியுறுத்தும் கலைத்திட்டம் கலகத்தை வழிநடத்தும் திட்டமாகும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பேணும் பாடத்திட்டம் சக மனிதர் மீதான வெறுப்பை வளர்த்தெடுக்கும் திட்டம் ஆகும். வகுப்பறைகளில் எண்ணும் எழுத்தும் இருக்காது;  வெறுப்பும் கலவரமும் மட்டுமே எஞ்சும். கரும்பலகையிலிருந்து சாக்கட்டிச் சாம்பல் உதிர்வதற்கு பதில் சக மனித உதிரம் காய்ந்த குருதிப் படிவுகள் உதிரக் கூடும்.

முன்பெல்லாம் மறைவாகவும் மறைமுகமாகவும் கல்விக் கொள்கைகளில் கலைத்திட்டங்களில் பாடப்பொருள்களில் கற்பித்தல் முறைகளில் கதர் அரசியல் மெல்ல படிந்திருக்கும் நோக்கும் போக்கும் நுணுக்கமாக ஆராய்பவருக்கு மட்டுமே தெரியும். ஆனால், சனாதனமும் பாசிசமும் கைகோர்த்து நடக்கும் அண்மைக் காலங்களில் இவையனைத்திலும் அப்பட்டமாக வேண்டுமென்று வலிந்து மேற்கொள்ளப்படும் மனித குலத்திற்கே எதிரான பெரும் நாசம் விளைவிக்கும் திணிப்புகள் பாமர மக்களும் எளிதில் அறியத்தக்கனவாக இருப்பது வேதனைக்குரியது. உண்மையாகவே நாட்டுக்கு உழைத்த தியாக சீலர்களின் தியாக வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதும் மக்களிடையே அடிப்படை மற்றும் பழைமைவாத நச்சுக் கருத்துகளைத் தொடர்ந்து விதைத்த நாசகார மனிதர்களை உயர்வாகப் போற்றி அடையாளப்படுத்துவதும் அரங்கேறி வரும் சூழலில் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் தனித்துவம் மிக்க மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த இறையாண்மையில் குல நாசம் விளைவிக்கும் கரையான்களை ஊடுறுவ அனுமதிப்பது என்பது முளையிலேயே கிள்ளியெறியப் படுதல் நல்லது.

ஏனெனில், தேசத்தின் பேரிடராகத் திகழும் பாசிசவாதிகளால் உண்மையான வரலாற்றில் பொய்யான திரிபுகளும் கடந்த காலங்களில் நடந்த மெய்யான நிகழ்வுகளில் போலியான புரட்டுகளும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வலியுறுத்தும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத புராணக் கதைகளும் வெறுப்பு அரசியலை மட்டுமே வளர்க்கும் ஒரு சார்புடைய கருத்துகளும் சமத்துவம் மற்றும் சமூகநீதியைக் கேள்விக்குட்படுத்தும் சனாதன கருத்தாக்கங்களும் நாட்டின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவித்த நபர்களை முன்னிறுத்தித் துதிபாடும் தொடர் அத்துமீறல்களும் மலிந்து விட்டது என்பது நாடறிந்த உண்மையாகும்.

மேலும், நாட்டுக்கு உண்மையாகவே உழைத்த நல்லோர் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களை நீக்குதல் அல்லது சேதப்படுத்துதல், மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட புல்புல் பறவையிலேறிப் பறந்தவர்களையும் விடுதலைப் போரில் வேடிக்கைப் பார்த்தவர்களையும் விடுதலை வேள்வியில் நீந்திய தலைவர்களாகச் சித்திரித்து அதற்கு ஈடாக உண்மைக்குப் புறம்பான வரலாற்றுச் செய்திகளைச் சேர்த்தல் போன்றவை ஒன்றிய கல்வி வாரியத்தின் பாடப்புத்தகங்களில் திணித்துள்ள கொடுமைகள் குறித்து எழுந்த இன்றளவும் அடங்காத எதிர்ப்புக் குரல் நினைவுகூரத்தக்கது.

பள்ளிக்கூடமானது மனிதப் பிழைகளைத் திருத்தும்; பிளவுகளைச் சரிபடுத்தும்; பிணக்குகளை ஒழுங்குபடுத்தும்; மூடத்தனத்தை ஒழிக்கும்; பகுத்தறிவை வளரச் செய்யும்; மொத்தத்தில் மனிதத்தன்மையை வளப்படுத்தும். மேலும் மேம்படுத்தும். அதுபோல், ஆசிரியர்கள் என்பவர்கள் குழந்தைகளின் குற்றம் களைபவர்கள்; கூளங்களைக் கொட்டுபவர்கள் அல்லர். அறிவைப் புகட்டுவார்கள்; அருவருக்கத்தக்க அசிங்கத்தை நிரப்புபவர்கள் அல்லர். நன்நடத்தைகள் பலவற்றை வளர்ப்பவர்கள்; நடத்தைக் கெட்டுத் திரிபவர்கள் அல்லர். அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; அரசியல் செய்பவர்கள் அல்லர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'இங்குள்ள சட்டங்கள் அனைத்தும் உமக்கே; எமக்கு அல்ல' என்பது போல் இறுமாப்பு கொண்டு திமிறி அலைகிற எண்ணத்தைத் திராவிட மாடல் அரசு முளையிலேயே கிள்ளி எறிவது மிக நல்லது. இல்லாவிடில் அது முதலுக்கே மோசம் செய்தது போல பிற்பாடு முடியக்கூடும். இதுகுறித்த விழிப்பு அவசியம். மேலும், இஃது அவசரம். பசுத்தோல் போர்த்திய சாதியச் செறிவும் மதவெறியும் ஒருசேர ஊட்டப்பட்ட சக மனிதனின் குருதி குடிக்கும் ஓநாய்கள் ஒருதாய் மக்களாக வாழும் மனிதக் கூடாரத்திற்குள் மெல்ல புகுந்து விட்டதைக் கண்டறிந்து களையெடுப்பதும் கட்டுப்படுத்துவதும் இன்றியமையாதது.

ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் கட்சிகளுக்கான அரசியல் போட்டிகள் இங்கு நடைபெறவில்லை. இருபெரும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தத்தில் அரசியல் கட்சிகள் களமிறங்கி உள்ளன. பற்றி எரியும் இந்த அரசியல் தீக்குண்டத்தில் ஒன்றுமறியாத, நல்ல கல்வி கற்பதற்காக தவமிருக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் அப்பாவிக் குழந்தைகளை நிறுத்திப் பலிகொடுத்து விடாதீர்கள்!

எழுத்தாளர் மணி கணேசன் 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive