தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு கட்டுரை போட்டியில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு கட்டுரை போட்டி, 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவில், 130 ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், 20 ஆய்வு கட்டுரைகள், எட்டு மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து, ஐந்து பள்ளிகளை சேர்ந்த ஆய்வு கட்டுரைகள், மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
அதில், கூடலுார் புளியம்பாரா அரசு உயர்நிலைப்பள்ளி, ஜி.டி.எம்.ஓ., மேல்நிலைப்பள்ளி, கூடலுார் மாதிரி மேல்நிலைப்பள்ளி, நீலகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கேத்தி என்.எஸ்., ஐயா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகியவை மாநில அளவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
சாதித்த மாணவ, மாணவியரை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ உட்பட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.
அதில், என்.எஸ்., ஐயா நினைவு பள்ளி மாணவர்கள் புவனேஸ்வரி, பிருந்தா ஆகியோர் மேற்கொண்ட, காட்டேரி அணை நீரை துாய்மைப்படுத்தும் கட்டுரை அனைவரின் பாராட்டுகளை பெற்றது.
இந்த கட்டுரையின் சிறப்பு குறித்து மாணவியர் கூறுகையில், காட்டேரி அணைக்கட்டு சுற்றிலும் அமைந்துள்ள, 40 கேரட் கழுவும் நிலையங்களில் இருந்து, வெளியேறும் கழிவு நீர், அணையின் நீரை மாசுபடுத்துகிறது.
இந்நிலையில், கேரட் கழுவும் போது வெளி வரும் கழிவுகளை அகற்றும் நவீன கருவியை கண்டு பிடித்தால், தண்ணீரும் மாசுபடாத வகையில் இருக்கும் இதற்கு தேசிய அளவில் பாராட்டு கிடைக்கும் என நம்புகிறோம், என்றனர்.
சாதித்த மாணவியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் குமார் ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், தாளாளர் நாகேஷ் மற்றும் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் உட்பட, ஆசிரியர்கள் பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...