நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், முதல் முறையாக பழங்குடியின மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், அக்னி தற்காப்பு கலை எனும் திட்டத்தின் கீழ், பழங்குடியின மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கான, கராத்தே பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலை பள்ளியில், நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார்.
மாவட்ட எஸ்.பி., நிஷா பயிற்சி லோகாவை வெளியிட்டு பேசியதாவது:
பெண்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். அதேபோல் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் பிரசனைகளும் அதிகரித்து வருகிறது. அதில், தனியாக வீடுகளில் இருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் சமீபகாலமாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற நேரங்களில் தங்களை தற்காத்து கொள்ள, தற்காப்பு பயிற்சி என்பது முக்கியத்துவம் ஆகும்.
இதற்காக, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், முதல் முறையாக தேவாலா அரசு பழங்குடியின பள்ளியில் மாணவிகளுக்கு இந்த பயிற்சி துவக்கி வைக்கப்படுகிறது. எனவே, பயிற்சி முறையாக கற்று, தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பயிற்சியாளர்கள் மூலம், முதல் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், தனிப்பிரிவு எஸ்.ஐ., திருக்கேஸ்வரன், ஆசிரியர் தவமுரளி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போலீசார், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...