தமிழக உயர் கல்வித் துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள், 34 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 392 தனியார் கல்லுாரிகள் இயங்குகின்றன.
நடப்பு கல்வியாண்டு முதல், டிப்ளமா தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்தது. கல்லுாரி முதல்வர்கள் உட்பட பல தரப்பினரிடமும், இதுகுறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.
அப்போது, 'தற்போதைய டிப்ளமா தேர்வு நடைமுறையில், தீர்வுகளின் ஒவ்வொரு படிநிலைகளுக்கும், மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. முழுதும் எம்.சி.க்யூ., வடிவில் தேர்வு நடத்தினால், தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் ஏற்படும்' என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவற்றை மனதில் வைத்து, டிப்ளமா தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, டிப்ளமா செமஸ்டர் தேர்வு மூன்று மணி நேரம் நடக்கிறது.
புதிய நடைமுறையில், தேர்வு காலம், இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வடிவமைப்பை பொறுத்தவரை, எம்.சி.க்யூ., வடிவில், ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 கேட்கப்படும்.
எழுத்து தேர்வு வடிவில், இரண்டு மதிப்பெண் வினாக்கள் எட்டு கேட்கப்படும். அதில், மாணவர்கள் ஏதேனும் ஐந்துக்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல், எழுத்து தேர்வு வடிவில், 10 மதிப்பெண் வினாக்கள் ஐந்து கேட்கப்படும். அதில், மாணவர்கள் ஏதேனும் மூன்றை தேர்வு செய்ய வேண்டும்.
மொத்தமாக, 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். அகமதிப்பீட்டு வடிவில், 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்ய, அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...