மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அன்று 1,028 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தாணேவில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வினாத்தாளின் சில பகுதிகள் கசிவு உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருந்த டெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 6 லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்வு நடைபெற்று இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. புதிய தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. வினாத்தாளைக் கசியவிட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். தேர்வுக்காக நேர்மையாக உழைத்தவர்களே இதற்கான விலையைக் கொடுக்கின்றனர்.
இவர்கள்தான் நாட்டில் பணிபுரியப் போகும் எதிர்கால ஆசிரியர்கள். இந்தியாவின் எதிர்காலத்தையே கையில் வைத்திருப்பவர்களும் இவர்கள்தான். ஆண்டுக்கணக்கில் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, படிவங்களைப் பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி, தொலைதூர தேர்வு மையங்களுக்குப் பயணம் செய்தவர்கள் புதிய தேர்வுத் தேதிக்காகக் காத்திருக்கின்றனர்.இந்த வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் விரைவில் புதிய தேர்வுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வரை கேட்டுக் கொள்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...