NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Poll Result Related Article Now Published.

       இட ஒதுக்கீடு வழங்கலாமா? இல்லையா? என்பதை அரசும், நீதிமன்றங்களுமே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் தற்போதுவரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதன் அவசியத்தையும், இனி தொடரலாமா? இல்லை இடஒதுக்கீடு தொடரவேண்டிய சூழ்நிலை சமூகத்தில் மாறிவிட்டதா? எனும் காரணங்களையும் நாம் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.



        ஏனெனில் சாதி, சமய பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அடுத்த தலைமுறையிலாவது உருவாக்கும் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களான  நமக்கு மட்டுமே உண்டு. அதனால் இடஒதுக்கீடு குறித்து முழுமையான, ஆழ்ந்த அறிவு நமக்கு ஏற்படவேண்டியது அவசியம் ஆகும்.

         இடஒதுக்கீடு வழங்கலாம் என அதற்குறிய காரணங்களை நண்பர்கள் பலரும் கூறியிருந்தாலும், அவற்றில் முதல் அச்சாணியாக தனது கருத்துகளை மிக அழகாக கூறிய திரு. சுப்பிரமணி அவர்களுக்கு நாம் நன்றி கூறுகிறோம்.

         எவ்வளவு நண்பர்கள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வாதங்களை அடுக்கிணாலும், தன் தரப்பு வாதத்தை சற்றும் சளைக்காமல் மீண்டும், மீண்டும் பதிவு செய்துகொண்டே இருந்த திரு. ஆனந்தராஜ் அவர்களை நாம் மிகவும் பாராட்டுகிறோம்.

        அதிலும் திரைப்படத்தில் நாயகன் "நானும் மதுரைக்காரன் தாண்டா” என கூறுவது போல்” நீங்கள் இடஒதுக்கீடு கேட்கும் அதே சமூகத்தை சேர்ந்தவன் தான் நானும், ஆனால் இடஒதுக்கீடு வேண்டாம் என்பதே என் நிலை” என பஞ்ச் டயலாக் கூறியது மறக்க முடியாத வாசகம்.

      நம் நண்பர் திரு. ஆனந்த் ராஜ் நம் பாடசாலை வாசகர்கள் அனைவரையும் உடன்பிறந்த சகோதரர்களாக நினைத்து Calokial Language ஐ பயன்படுத்தியதாக உணர்கிறோம்.

      நாம் கடந்து வந்த சமூகம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது என்பது உண்மை. வாசகர் ஒருவர் கூறிய வாதம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. மற்ற வகுப்பினரில் பெரும்பாலோர்க்கு படிப்பதற்காக வீட்டில் தனி அறை, சகல வசதிகளுடன் இருக்கும். ஆனால் எங்களுக்கு வீடே ஒரு அறை மட்டும் தான் என்பது பொட்டில் அறைந்த வாசகம். அதனால் அவர்களைப் போன்றவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே அவர்களும் சமூகத்தில் சமதர்ம பொருளாதார நிலையை அடைய முடியும்.

        ஆனால் அதே சமயம் அனைத்து வகுபினரிலும் ஏழைகள் இருக்கிறார்கள். உயர் வகுப்பினர் என கூறி இடஒதுக்கீடு மறுக்கப்படும் ஒருசில வகுப்பினருக்கு வீடாக ஒரு அறை கூட இல்லாமல் வாடகை வீட்டிலும், அன்றாட உணவுக்கு அடுத்தவர் வழங்கும் தட்சனையை எதிர்பார்த்து அல்லல் படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.

        மேலும் ஒரு சமூகத்தில் ஒருவர் இடஒதுக்கீடு பெற்று உயர்வதன் மூலம் அவர் மட்டும் பயனடைவதில்லை. அவர் பொருளாதாரத்தில் நான்கு நபர்களை உயர்த்தவும், அந்த நான்கு நபர்கள் நாற்பது குடும்பங்களை உயர்த்தவுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

        12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாநகர மாணவர்கள் கூட பயிற்சி எடுத்து நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அனைத்து கல்வி வாய்ப்புகளையும் தாங்களே பயன்படுத்தி கொண்டதால் தான், கிராமத்து மாணவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தந்து அரசு கல்வியில் முன்னுரிமை கொடுத்தது. அதுவும் முழுமையாக குறிக்கோளை அடையவில்லை எனும் நிலை வந்தபோது நுழைவுத்தேர்வே தேவை இல்லை எனும் கொள்கை முடிவை அரசு எடுத்தது. இது மிகவும் நல்ல முடிவு. இந்த காரணத்தில் கிராமத்து மாணவர்களுக்காக இடஒதுக்கீடு வழங்கியது நியாயம் என்றால், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதும் நியாயமே ஆகும்.

    ஆனால் சமூகத்தில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது ”ஓட்டபந்தயத்தில் நல்ல ஆரோக்கியமான நபருடன் போட்டி போடும் மாற்றுத்திறனாளிக்கு அவரும் மற்றவர்களுக்கு சமமான வெற்றியை அடைய அவரை ஊக்கப்படுத்துவதாக நமது நடவடிக்கைகள் அமைய வேண்டுமே தவிர, முன்னால் ஓடுபரை இழுத்துப்பிடிப்பதன் மூலம் சமதர்ம வெற்றியை அளிப்பதாக இருக்க கூடாது.”



     முக்கியமாக நம் வலைதளத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 41 சதவீதத்தினர் இடஒதுக்கீடே தேவை இல்லை என வாக்களித்து இருப்பது இன்றைய சமூக அமைப்பின் மீது மக்களுக்கு இருக்கும் நியாயமான கோபத்தையே இம்முடிவு பிரதிபலிக்கிறது.

     ஆனால் ஒன்றை மட்டும் இறுதியாக கூறலாம். சாதி வாரியாக இட ஒதுக்கீடு சாதி, மத அடிப்படையில் வழங்க வேண்டும் என்பவர்களும் சரி, இட ஒதுக்கீடே தேவை இல்லை என்பவர்களும் சரி அனைத்து வகுப்பிலும் உள்ள வசதி வாய்ப்பு குறைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டால் அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

       இதன் மூலம் இடஒதுக்கீட்டில் தற்போது பயன்பெற்று வரும் பெரும்பாலான ஏழை வகுப்பினரும் பயன்பெறுவர். உயர் வகுப்பில் உள்ள ஏழை மக்களும் இடஒதுக்கீட்டினால் பயன்பெறுவர் என்பதை மறுக்க முடியாது.

       ஆனால் ஏழை மக்கள் என்பதை எவ்வாறு வரையறுப்பது? என்பதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது என்பது உண்மை. அதற்கு நடைமுறையில் உள்ள வறுமைக்கோட்டுக்கு மேல், கீழ் எனும் அளவு கோல் போதாது. மேலும் நுணுக்கமான, தெளிவான, உண்மைக்கு மிக நெருக்கமான முடிவை தரும் அளவுகோல் தேவைப்படும். அத்தகைய அளவுகோலை வரையறுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நிச்சயம் கல்வியாளர்கள், பொருளாதார மேதைகளை கொண்டு வரையறுக்க இயலும். அதை நடைமுறைப்படுத்தவும் முடியும். அதை உடனடியாக கொண்டு வர முயற்சிக்கவில்லை என்றாலும், அதற்கான முன் முயற்சிகளையாவது தற்போது எடுப்பது அரசின் கடமையாகும்.

      நமது அடுத்த வாக்கெடுப்பான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைக்க வேண்டாமா? அல்லது குறைக்க வேண்டுமா? என்பதில் 59 சதவீதத்தினர் குறைக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்.



குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்க வேண்டுமா? ஆம்.

       ஆனால் எவ்வாறு? மத்திய அரசின் சட்டவரைவில் உள்ள 60 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தகுதி பெற்றவராக கருதப்படுவர் என்பதில் உள்ள கருத்தை உடனடியாக மாற்றுவது என்பது சற்று சிக்கலான விசயம். ஆனால் அதே நேரத்தில் சாதி வாரியாக மதிப்பெண்னை குறைத்துக்கொள்ளலாம் என்பதை மாநில அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளதை பயன்படுத்தி கொள்ளலாம்.

       தகுதி தேர்வு வெற்றி பெற்றால் தான் ஒருவர் தகுதியான ஆசிரியர் என வரையறுக்க முடியாது. தகுதித்தேர்வு வெற்றி பெறா விட்டாலும் ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக கற்பிக்க இயலும் என்பதே உண்மை.

      ஆனால் நாம் பத்தாம் வகுப்பு பயிலும்போது நம்முன் டிப்ளமோ, ஐ.டி.ஐ., 11 ஆம் வகுப்பு சேர்க்கை என பல வாய்ப்புகள் தரப்பட்டது. அதில் நாம் 11 ஆம் வகுப்பு சேர்க்கையை தேர்ந்தெடுத்தோம்.

           12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் நம் முன் பல்வேறு துறை வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டன. அதிலும் நாம் தான் இந்த ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்தோம். வேறு வாய்ப்புகள் இல்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்காக இத்துறையை தேர்ந்தெடுக்கவில்லை என்பது உண்மை.

         அவ்வாறு இருக்க நாம் மிகவும் விரும்பி வந்த இத்துறையில் நாம் தகுதி பெறவில்லை என நம்மை எவரும் கூற விடக்கூடாது. நாட்டில் உள்ள மருத்துவர், பொறியியல் வல்லுனர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலரையும் உருவாக்கும் நாம் ஒரு தகுதித்தேர்வில் தோற்றுவிடகூடாது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். அதேநேரம் பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவது எவ்வாறு? என கற்றுத்தரும் நாம் தேர்வில் வெற்றிபெறாமல் போய்விடக்கூடாது. தற்போதிருந்தே அடுத்த தேர்வுக்கு உழைத்துப்படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணருங்கள். தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற பிறகு ஆசிரியர் பணி கிடைத்தபிறகு, அப்போது யோசியுங்கள் – ஆசிரியர் பணியை ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது ஆட்சியர் தேர்வுக்கு தயாராகலாமா? என. ஏனெனில் அதற்குறிய அனைத்து தகுதிகளும், திறமையும் நமக்கு உண்டு என்பதே உண்மை.

         இந்த வாக்கெடுப்பில் நடந்த விவாதங்கள் அனைத்தையும் நீங்கள் தற்போது வரை பார்த்திருப்பிர்கள். நீங்கள் ஏதேனும் ஒரு தரப்பை சேர்ந்தவர்களாக இருப்பீர்கள். வாக்களித்திருக்கலாம். விவாதத்தில் கலந்துகொண்டிருக்கலாம். இங்கு வாக்கெடுப்பில் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடைப்பதை விட இங்கு நடந்த விவாதங்கள் மூலம் நாம் எதிர் தரப்பு நியாயத்தையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்பது உண்மை. இப்போதும் கூட நம் தரப்பு 10 வாதங்கள் தான் உண்மை என நினைத்தாலும், எதிர் தரப்பில் உள்ள 1 வாதமாவது நியாயம் தான் என நாம் நினைத்தால் அதுதான் இந்த வாக்கெடுப்பின் வெற்றி!

      மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் ஜனநாயக ஆட்சி!

      நிச்சயம் நம் மக்களின் கருத்துக்கள் அரசை எட்டும், நடைமுறை மாற்றம் வரும். அதுவரை காத்திருப்போம்.

      தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்! என இறைவன் இயேசு கூறியுள்ளார்.

      எனவே தட்டுங்கள்! கேளுங்கள்! நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

     நமக்கு கல்வி செய்திகளை தெரிந்து கொள்வதில் மட்டும் அல்லாமல், சமூகத்தின் மீதும் அக்கறை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வாக்கெடுப்பு மற்றும் கலந்துரையாடலில் ஆர்வமாக கலந்து கொண்ட நம் பாடசாலை வாசகர்கள் அனைவருக்கும்
      நன்றி! நன்றி! நன்றி!

      அன்புடன் பாடசாலை




2 Comments:

  1. Respected Sir/Mam,

    TET pass mark 75 ahakalam. Merit base la job kodukanum.My register num is 13TE02204633. nalla hard work pannunan Tet answer key 80 mark than vanthiruku. job kadaikatalum pass ahayitomunu ulla satisfaction irukum. Next TET examla nalla mark score pannalamnu ulla nambikai varum

    ReplyDelete
  2. super article tn govt first should be removed waitage system.K.MUTHURAMAN THONDI

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive