NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக பிஎட் படிக்கலாம்!


         பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேரடியாக நான்கு ஆண்டு கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பையும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


தரமான கல்வியியல் படிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டதுதான் ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் எனப்படும் மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், மைசூர் ஆகிய இடங்களில் இந்த மண்டல மையங்கள் உள்ளன. மைசூரில் உள்ள மண்டல மையத்தில் உள்ள கல்வியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு பிஎஸ்சிஎட் என்ற ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளையோ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளையோ, தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளையோ எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வுகளில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பிஏஎட் என்ற நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலம், பிராந்திய மொழிப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் இரண்டு பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இதுதவிர, இந்தக் கல்வி நிலையத்தில் எம்எஸ்சிஎட் (இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில்) என்ற ஆறு ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் படிப்பும் உள்ளது.

பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்து குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரலாம்.

இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதமதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகளைப் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மைசூர் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். எம்எஸ்சிஎட் படிப்புக்கு அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும். பிஎஸ்சிஎட், பிஏஎட் படிப்புகளுக்கு தென் மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்கள். இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு. அனைத்துத் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கும், 50 சதவீதபிற மாணவர்களுக்கும் மாதம் ரூ.800 முதல் ரூ.1200 வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.250 வீதம் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே விடுதி வசதி உள்ளது. இந்தப் படிப்புகள் அனைத்தும் ஆங்கில மீடியத்தில் மட்டுமே நடத்தப்படும்.

இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்  'Principal, Regional Institute of Education, Mysore' என்ற பெயருக்கு மைசூரில் மாற்றத்தக்க வகையில் ரூ.500க்கான டிமாண்ட் டிராப்ட் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.350க்கான டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும். 26 செமீ து 12 செமீ நீளமுள்ள உறையில் ரூ.10 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி சுயவிலாசத்தை எழுதி, டிராப்ட்டை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கல்வி நிலையத்தில் நேரடியாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'Section Officer (academic), Regional Institute of education, Mysore - 570006' என்ற முகவரிக்கு ஜூலை 2ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சிஎட் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது. பிஎஸ்சிஎட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. பிஏஎட், எம்எட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. மைசூர், ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், ஷில்லாங், புதுதில்லி ஆகிய இடங்களில் எம்எஸ்சிஎட் நுழைவுத் தேர்வு நடைபெறும். பிஎஸ்சிஎட், பிஏஎட், எம்எட் நுழைவுத் தேர்வுகள் மைசூரிலுள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் கல்வி நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமான கல்வியியல் படிப்புகளைப் படிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மைசூரில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன். இந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.riemysore.ac.in

மேலும் சில படிப்புகள்
இந்தக் கல்வி நிலையத்தில் எம்எட் ஓராண்டு படிப்பில் சேர பிஎட், பிஎஸ்சிஎட், பிஏஎட் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில்  5 சதவீதம் சலுகை உண்டு. முதுநிலைப் பட்டத்துடன் பிஎட் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் தென்மாநில மற்றும் யூனியன் பிரதேச மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பும் இங்கு உள்ளது. இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படுகிறது. இந்தத் தொலைநிலைப் படிப்புக்கு வரும் செப்டம்பர், அக்டோபரில் அட்மிஷன் நடைபெறும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive