Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.ஐ.டி.,யில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்? - FAQ


          அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

         நான் மதுரையில் பி.இ. இயந்திரவியல் படிக்கிறேன். அமெரிக்காவில் எம்.எஸ். வான்வெளிப் பொறியியல் அல்லது வானூர்திப் பொறியியல்(M.S. Aerospace Engineering or Aeronautical Engineering) படிக்க விரும்புகிறேன். எம்.ஐ.டி.யில் எம்.எஸ். படிக்க வேண்டும் என்பது என் கனவு. அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சேருவது தொடர்பான வழிகாட்டுதல் தேவை. பி.இ. முடித்தவுடன் நான் செய்ய வேண்டியது என்ன? அமெரிக்காவில் படிப்பதற்கான நிதியுதவி தொடர்பாகவும் ஆலோசனைகள் கூறவும்.
பி. ராம்நிவாஸ், மதுரை


          அமெரிக்காவில் எம்.ஜ.டி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகங்களிலும் எம்.எஸ். படிப்பதாக இருந்தால், GRE (Graduate Record Examination) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கிலத் தகுதித் தேர்வுகளான TOFEL (Test of English as Foreign Language)  அல்லது IELTS (International English Language Testing System) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான பிரிவுகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய, பீட்டர்ஸன் வழிகாட்டுதலை (www.petersons.com, http://www.petersons.com) நாடலாம். பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பற்றிய தகவல்களை அறிய www.chea.org, http://www.chea.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

          பொதுவாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை, ஓராண்டுக்கு முன்பே விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கிவிடும். எனினும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தைப் பொருத்தும் அது வேறுபடலாம். 2014 இலையுதிர்காலத்தில் (ஆகஸ்ட், செப்டம்பர்) நீங்கள் சேரவேண்டுமானால், இந்த ஆண்டே (2013) உரிய தகுதித் தேர்வுகளை எழுதி, தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களுக்கு அவை அறிவித்துள்ள கால வரம்புக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

          மாணவர்கள் படிப்புக்கான நிதியுதவி என்பது ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து வேறுபடும். ஸ்காலர்ஷிப், கல்விக் கட்டணத்தில் முழுமையாக அல்லது பாதி விலக்கு, உதவித் தொகை, ஃபெல்லோஷிப் போன்ற பல வகையான நிதியுதவித் திட்டங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன. இத் திட்டங்கள் பற்றிக் கூடுதலாக அறிய, காண்க: http://www.educationusa.info/5_steps_to_study/graduate_step_1_identify_types_and_sources_of_financial_aid.php#top http://www.educationusa.info/5_steps_to_study/graduate_step_1_identify_types_and_sources_of_financial_aid.php.
அமெரிக்காவில் படிக்கச் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வது மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதலுக்கு USIEF (USIndia Educational Foundation) மையத்திலுள்ள EducationUSA பிரிவை நாடலாம். USIEF மையத்தை 04428574423/4134 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது usiefchennai@usief.org.in <mailto:usiefchennai@usief.org.in> என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். www.Facebook.com/EducationUSAChennai <http://www.Facebook.com/EducationUSAChennai> என்ற முகநூல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு காண்க: www.usief.org.in <http://www.usief.org.in>

* அமெரிக்காவில் இருக்கும் என் மகளுக்கு இந்தியப் பணத்தில் 5 கோடி ரூபாயும், மகனுக்கு 10 கோடி ரூபாயும் அனுப்ப விரும்புகிறேன். அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்காகவே இந்தப் பணத்தை அனுப்புகிறேன். தயவு செய்து, அதற்கான நடைமுறைகள் என்ன என்று தெரிவிக்கவும்.
ஏ.வி. கிருஷ்ணதேவராஜன், கோயம்புத்தூர்

          இந்தியக் குடியுரிமையாளர்களுக்கு அன்னியச் செலாவணி வசதியை மேலும் தாராளமாக்கவும் எளிமைப்படுத்தவும் உரிய நடவடிக்கையாக 2004ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய ரிசர்வ் வங்கி தாராளமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தின்படி, இந்தியர்கள், ஒரு நிதியாண்டில் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 1 கோடி ரூபாய்) வரை அனுப்பலாம். கூடுதல் தகவலுக்கு, காண்க:<http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=66.
 
          அத்துடன் வாஷிங்டன், டி.சி.யில் மேரியாட் வார்டமன் பார்க் ஹோட்டலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 1, 2013 வரை நடக்கும் முதலீட்டு வாய்ப்பு குறித்த SelectUSA மாநாட்டில் கலந்துகொண்டு கூடுதல் விவரம் அறிய பரிந்துரைக்கிறோம். இந்த மாநாடு உங்களைப் போன்ற முதலீட்டாளர்களுக்கும் அரசு பொருளாதார வளர்ச்சி அலுவலகங்களுக்கும் இடையே தொடர்பை உருவாக்க வழிவகுக்கும். அதன் மூலம், அமெரிக்காவில் தொழில் வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய முடியும்.

* பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்களை அழித்துவிட்டுத்தான் அமெரிக்கர்கள் குடியேறினார்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறதே, அது உண்மையா?  இல்லையெனில், செவ்விந்தியர்கள் இன்னமும் அங்கு வாழ்கிறார்களா? இது குறித்து விளக்கம் தேவை.
ஜே. சுந்தரமூர்த்தி, சென்னை

         அமெரிக்காவின் முக்கியமான அங்கமாக பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள். உண்மையில் சொன்னால், அவர்களின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 5.2 மில்லியன் மக்கள், அமெரிக்க இந்தியர்கள் மற்றும் அலாஸ்கா பூர்வீகக்குடிகளாக தனியாகவோ அல்லது ஒன்று அல்லது மேற்பட்ட இனத்துடன் சேர்த்தோ அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

          பல பூர்வீக அமெரிக்கர்கள் தங்களுக்குச் சொந்தமாக நிலம் (அமெரிக்க ஆங்கிலத்தில் ரிசர்வேஷன்ஸ் என்று சொல்லப்படுகிறது) வைத்திருக்கிறார்கள். அந்நிலங்கள் அவர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட, அமெரிக்க ஃபெடரல் அரசின் நிர்வாகத்திலுள்ள 326 நிலப் பகுதிகள் உள்ளன. எனினும், அமெரிக்க இந்தியர்களில் பாதிப்பேர், நாடு முழுவதும் மற்ற மக்களுடன் இணைந்து நகரங்களிலும் இதர பகுதிகளிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்கள். பலர் தங்கள் பூர்வீக ஊருக்கு, சொந்தபந்தங்களைப் பார்க்கவும், உறவினர் இல்ல விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களில் கலந்துகொள்வதற்கும் வந்து போகிறார்கள். மதம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் பங்கேற்க அல்லது பூர்வீகக்குடி நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற, தொழில் செய்ய, பூர்வீகக்குடிகளுக்கான தேர்தலில் வாக்களிக்க அல்லது தேர்தலில் போட்டியிட மற்றும் தங்கள் இறுதிக் காலத்தைக் கழிக்க சொந்த மண்ணிற்குத் திரும்புகிறார்கள்.

* கியூபாவைப் போல, அமெரிக்காவில் ஏன் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க முடியவில்லை? ஒரு ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லையா?
கேசவன், திண்டுக்கல்

          அமெரிக்காவில், மழலையர் கல்வி முதல் 12ம் வகுப்பு (இந்தியாவில் பிளஸ் 2 படிப்புக்குச் சமமானது) வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. அமெரிக்கா என்ற தேசம் உருவானதிலிருந்தே இலவசப் பொதுக் கல்வி என்பது நிறுவனமயமாகி வருகிறது. பொதுக் கல்வி முறை ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள தனிப்பட்டக் கல்வி மாவட்டங்கள் பலவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயிலிருந்து நிதியாதரவு தரப்படுகிறது. அமெரிக்காவில் அரசு நிதியாதரவு பெறும் பல பல்கலைக்கழகங்களும் உள்ளன. பல்கலைக்கழக அளவில் இலவசக் கல்வி இல்லாவிட்டாலும், உயர்கல்வி வாய்ப்பு அதிகபட்ச மக்களுக்கு கிட்டுவதற்கு ஏதுவாக, லட்சக்கணக்கான அமெரிக்க மாணவர்களுக்கு கடனுதவி மற்றும் மானியம் வாயிலாக அமெரிக்க அரசு நிதியாதரவு அளித்து வருகிறது.

* அமெரிக்காவில் குடிநீர் வளம் (ஆற்று நீர்) எந்த அளவுக்கு உள்ளது?  தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான வாய்ப்பு உண்டா?
வனிதா, தருமபுரி
           குடிநீர் மட்டுமின்றி, பெட்ரோலியப் பொருள்கள், எரிவாயு, மரம், கனிமங்கள் மற்றும் இதர இயற்கை வளங்கள் தாராளமாகக் கிடைப்பது அமெரிக்காவின் வரப்பிரசாதம். நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை ரீதியாக முடுக்கிவிடுவதில், இந்த வளங்கள் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக, ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கங்களிலிருந்து மிகுதியான, சுத்தமான குடிநீர் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

           இந்த வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலான நீடித்த குடிநீர் பற்றாக்குறை அமெரிக்காவில் ஏற்பட்டது கிடையாது. எனினும், நாட்டின் சில பகுதிகள் குறுகிய கால வறட்சியை சந்தித்ததுண்டு. அமெரிக்காவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில மாகாணங்கள், எதிர்காலத்தில் அவை தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று கணித்துள்ளன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அமெரிக்க அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து தேசிய அளவிலான நீர் சேமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவை பற்றிக் கூடுதலாக அறிய, காண்க: http://www.epa.gov/oaintrnt/water/.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive