Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


          வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.

                நேற்று முன்தினம், சக மாணவியை மாணவன் மதுசூதனன் கேலி செய்ததால், அம்மாணவி தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். பெற்றோரை அழைத்து வருமாறு, ஆசிரியை தெரிவித்துள்ளார். பெற்றோர் இல்லாமல், நேற்று பள்ளிக்கு வந்த மதுசூதனன், பையில் வைத்திருந்த அரளிவிதையை மென்று துப்பியுள்ளார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்கவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு, ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். தற்போது சிகிச்சையில் உள்ளார். மாணவனின் அப்பா மலைச்சாமி கூறுகையில்,""கூலி வேலை செய்கிறேன். இவன் மூன்றாவது பையன். ஏற்கனவே, பள்ளியில் மாணவியை கேலி செய்ததாக, மூன்று மாதத்திற்கு முன் ஆசிரியர்கள் தெரிவித்து, ஒருவாரம் பள்ளிக்குள் விடவில்லை. அடுத்தாண்டு வேறு பள்ளியில் சேர்க்கிறேன் என்று ஆசிரியர்களிடம் தெரிவித்தேன். நேற்று ஆசிரியர் திட்டியதால், அரளிவிதையை தின்றதாக, மருத்துவமனை வந்தபோது சொன்னார்கள்,'' என்றார்.

                 பெயர் கூற விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தவே பயமாக இருக்கிறது. திட்டினாலோ, கண்டித்தாலோ தற்கொலை மிரட்டல் விடுக்கின்றனர். திட்டக்கூடாது என்பதால், பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறுகிறோம். அதற்கும் இப்படி செய்தால், நாங்கள் எப்படித் தான் பாடம் நடத்துவது, மதிப்பெண் பெறவைப்பது, நல்ல சமுதாயத்தை உருவாக்குவது? மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு, நாங்கள் தான் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியுள்ளது, என்றனர். 12 நாட்களுக்கு முன், மதுரை பொய்கைகரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஏழுபேர், ஆசிரியை திட்டியதாக கூறி, பேன் ஒழிப்பு மருந்தை சாப்பிட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினர்.

                     அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை மிரட்டல் குறித்து, மதுரை மாவட்ட மனநல திட்ட அலுவலர் சிவசங்கரி கூறியதாவது:எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பது என்பது மாணவர்களின் நலனுக்காக இருந்தால், அதை அனுமதிப்பதில் தவறில்லை. யாரோ, எங்கேயோ ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் வன்முறையாக நடந்து கொண்டால், ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறைசொல்ல முடியாது. கிராமப்புற மாணவர்களிடம் தற்கொலை முயற்சி அதிகம் நடக்கிறது. மதுரை புறநகரில் 6 மாதங்களில் 10 மாணவர்கள் வரை, எலிமருந்து, பேன்மருந்து, அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதற்கு காரணம், பெற்றோர்கள் தான். குறிப்பாக, வீட்டில் சிறு பிரச்னை என்றாலும் "செத்து விடுவேன்' என பெண்கள் மிரட்டுகின்றனர். இதைக் கேட்கும் பிள்ளைகளும் தற்கொலையை ஆயுதமாக எடுக்கலாம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, சிகிச்சை அளித்தபின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்தால், இந்த உண்மை தெரியவரும். இதற்காகவே, தொடர்ந்து "கவுன்சிலிங்' செய்கிறோம். "நாம் என்ன சொன்னாலும் பெற்றோர் கேட்பர்' என்று, பிள்ளைகள் நினைக்கும் போது தான், "ஆசிரியர்கள் திட்டுகின்றனர்' எனக்கூறி, தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். ஆசிரியர்கள் திட்டுவது மாணவர்களின் நலனுக்காக என்பதை, பெற்றோர்கள் சிந்தித்து, பிள்ளைகளிடம் எடுத்துச் சொன்னால், இப்பிரச்னை வராது, என்றார்.




1 Comments:

  1. ஆசிரியர்கள் எல்லாம் அரக்கர்களோ,அசுரர்களோ அல்ல. ஊரார் பிள்ளைகளை அறிவூட்டி வளர்பவர்கள். குற்றம் செய்தால் இறைவன் தண்டிப்பான் என எண்ணும் பெற்றோர்கள், வரிசையில் (மாதா,பிதா,குரு,தெய்வம்) தெய்வத்திற்கு முன் இருக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பதும்,தண்டிப்பதும் நம் வாரிசுகள் நல்வழியில் வாழவே என ஏன் நினைப்பதில்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive