Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்களும்

 
         கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

      பழைய நோட்டுகள்: இதற்காக, 'பழைய நோட்டுகளை, மக்கள், வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிகம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள்:

* எந்த ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து எடுக்கப்படுகின்றன? அவை என்னிடம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
 
        கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து எடுக்கப்படும். வரும், மார்ச் 31ம் தேதிக்குப் பின், வங்கிகள் இவற்றை, புழக்கத்தில் விடக் கூடாது. 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, ஏப்ரல், 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, வங்கிகளை அணுகலாம். ஜூலை, 1ம் தேதி முதல், 10க்கும் மேற்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்ற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர், அடையாள சான்று மற்றும் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

* கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்பதை, எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது?
 
        ரூபாய் நோட்டின் பின்புறத்தில் (காந்தி படம் உள்ள பக்கத்திற்கு மறுபக்கம்), கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு குறிக்கப்பட்டு இருக்கும். இல்லை என்றால், அது, 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டு.

* இந்த ரூபாய் நோட்டுகள், மார்ச், 31ம் தேதிக்கு பின் செல்லாதா?
 
          இல்லை. 'இந்த ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத் தக்கவையே' என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஆனால், வங்கிகளில் புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு மட்டுமே இவை செல்லுபடியாகும். தினசரி செலவுகளுக்கு, வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல், இவற்றை பயன்படுத்த முடியாது.

கட்டளை: ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டியது, வங்கிகளின் கடமை. வங்கி வாடிக்கையாளர்களாக அல்லாதவர்களுக்கும், ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றி கொடுக்க வேண்டும் என்பது, ரிசர்வ் வங்கியின் கட்டளை.

* ஒரே நாளில், பல்வேறு வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை, ஒரே நபர் மாற்ற முடியுமா?
 
          ஒரு நபர், ஒரே நாளில், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில், ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, கட்டுப்பாடு கிடையாது.

* ஏ.டி.எம்., மையங்களில், 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் வர வாய்ப்பு உள்ளதா; வந்தால் என்ன செய்வது?
 
        வங்கிகளிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான பணியை, ரிசர்வ் வங்கி ஏற்கனவே செய்து வருகிறது. அதனால், பழைய நோட்டுகள், ஏ.டி.எம்., மையங்கள் மூலம் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான். தவறி வந்துவிட்டால், அதை வங்கியில் மாற்றிக் கொள்வதை தவிர, வேறு வழியில்லை.

* வழக்கமாக, இத்தகைய நடவடிக்கைக்கு, ரிசர்வ் வங்கி, பொதுமக்களை அணுகுவது இல்லையே...
 
             பழைய வடிவமைப்பில் உள்ள ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்து விலக்குவது, சாதாரண நடவடிக்கை தான். இதுநாள் வரை, வங்கிகள் மூலமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையும் தாண்டி, மீதியுள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்கவே, பொதுமக்களை, ரிசர்வ் வங்கி நாடியுள்ளது. 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்பதால், இந்த நடவடிக்கை, பொதுமக்களை பாதிக்காது என்றே, ரிசர்வ் வங்கி கருதுகிறது.

* இந்த நடவடிக்கைக்கு, ஏன் அவசரம் காட்டப்படுகிறது?
 
         'இதில் அவசரம் ஏதும் இல்லை' என்றே, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பழைய நோட்டுகளை, வங்கிகள் வாங்க, கடைசி தேதி அல்லது காலக்கெடு எதையும், ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவில்லை. எந்த வங்கி கிளையிலும், எப்போது வேண்டுமானாலும், பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். அதனால், பழைய நோட்டுகளின் மதிப்பு குறையப் போவதில்லை. இது குறித்து, 'மக்கள் பீதி அடைய வேண்டாம்' என்றே, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

* வரி ஏய்ப்பாளர்கள் சிக்குவர்?
 
         ஜூலை, 1ம் தேதிக்கு முந்தைய, பண மாற்று நடவடிக்கைகளை, வருமான வரித்துறை ரகசியமாக கண்காணிக்கலாம் என, கூறப்படுகிறது. அதற்கு பிந்தைய காலத்தில் நடைபெறும், பண மாற்று நடைமுறையில், 'பான்கார்டு' போன்ற அடையாள சான்றுகளை காண்பித்து, வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றிக் கொள்ளும் போது, வருமான வரித்துறை, அந்த வாடிக்கையாளரின் பண பரிவர்த்தனையை, நிச்சயம் கண்காணிக்கும் என, கூறப்படுகிறது.

விவரங்கள்: அதிக தொகையில், ரூபாய் நோட்டுகளாக மாற்றும்போது, அது குறித்த விவரங்களை, வங்கிகள் மூலம் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி' போட்டு, பண விவரத்தை, வருமான வரித்துறை கேட்டுப் பெறும் என, வங்கி மற்றும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, வருமான வரி ஏய்ப்பாளர்களை, வங்கிகள் அளிக்கும் சில தகவல்களை வைத்து, வருமான வரி விதிப்பிற்குள் கொண்டு வரும், வருமான வரித்துறை, இந்த, ரூபாய் மாற்றும் நடவடிக்கை மூலம், மேலும் பல, வருமான வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்கவும், அவர்களை, வருமான வரி விதிப்பிற்குள் கொண்டு வரவும் முயற்சிக்கும். வங்கியின் சேமிப்பு கணக்கில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு மூலம், ஓராண்டில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனை செய்பவர்களையும், வருமான வரித்துறை, தன் வரி விதிப்பு வலைக்குள் கொண்டு வருகிறது. இப்போது, இந்த வரிசையில், அதிக தொகையிலான, ரூபாய் நோட்டு மாற்றும் நடைமுறையும் வரும் என, தெரிய வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive