அரசு பள்ளிகளில் "இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறக்கும்

           அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் துவக்கப்பட்டுள்ளது.

           புதுச்சேரியில் அமைந்துள்ள, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
           பள்ளிக்கு வராமல் "ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ஆரம்பத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறந்தது. அடுத்தக்கட்டமாக, விடுமுறை, சிறப்பு வகுப்பு, பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
 
                  தற்போது, தினசரி தேர்வு விபரங்கள், படிக்க வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், எஸ்.எம்.எஸ்., மூலமாகவே பெற்றோர்களுக்கு தினசரி தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
           பள்ளிக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்த விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிவதால், இந்த திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
           இந்த திட்டத்தை, அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.
 
              இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன் முறையாக, ஏனாம் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
           இந்த திட்டத்தை, கல்வித் துறை செயலர் ராகேஷ் சந்திரா, துவக்கி வைத்தார். மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ., ஏனாம் மண்டல நிர்வாகி கணேசன், சர்வ சிக்ஷா அபியான் திட்ட அதிகாரி ராமராவ், பள்ளிக் கல்வி இயக்குனரின் பிரதிநிதி சாய்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
           முதற்கட்டமாக, ஏனாம் நகரப் பகுதியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, தரியல்திப்பா, நாராயணன் அரசு உயர்நிலைப் பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா' செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
 
             சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் உதவியில் செயல்படுத்தப்படும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுக்கும், படிப்படியாக விரிவுப்படுத்தபட உள்ளது. இதற்கான சாப்டுவேரை, தேசிய தகவல் மையம் உருவாக்கி தந்துள்ளது.
 
               இதுகுறித்து, கல்வித் துறை செயலர் ராகேஷ் சந்திரா கூறும்போது, ""இ-வித்யா' திட்டம், புதுச்சேரியிலும், மற்ற பிராந்தியங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive