NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உதவியால் இந்திய வருவாய்த்துறை பணிக்கு கூலித்தொழிலாளி மகன் தேர்வு தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்

    பள்ளி படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த கல்வி உதவி தொகையால் கூலித்தொழிலாளி மகன் இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் கூறினார்.


கூலித்தொழிலாளியின் மகன்

ஈரோடு மாவட்டம் பவானி மயிலம்பாடி கிராமம் அருகேயுள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வன், பாப்பா கூலித்தொழிலாளி தம்பதியரின் மகன் சரவணன். இவர் 2005-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று ஆதிதிராவிடருக்கான ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார்.

சரவணன் மாநில அளவில் முதல் இடம் பெற்றும் பள்ளி மேல் படிப்பினை தொடர முடியாத அளவுக்கு வறுமையும், குடும்ப சூழலும் அவரை வாட்டியது. வறுமை இருந்தாலும், படித்து சாதிக்கவேண்டும் என்று லட்சிய கனவு அவருக்கு இருந்தது.

துண்டு காகிதம் ஏற்படுத்திய மாற்றம்

அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் கல்வி உதவி பெறுவதற்கு நினைத்தார். தன் நோட்டில் இருந்து ஒரு துண்டு காகிதத்தை கிழித்து அதில், ‘தன்னுடைய மேல் படிப்புக்கு உதவி செய்யுமாறு’ ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார்.

துண்டு காகிதம் சரவணன் வாழ்வில் ஒளி ஏற்றியது. வேண்டுகோளை கனிவோடு ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, சரவணன் படிப்புக்கான உதவி தொகையை நேரில் அழைத்து வழங்கி வந்தார். ஒவ்வொரு வருடமும் சரவணனை நேரில் அழைத்து கல்வி உதவி தொகையை ஜெயலலிதா வழங்கினார்.

மனிதநேய மையம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியோடு என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்த சரவணன் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினார்.

இதில் வெற்றி பெற்ற அவருக்கு இந்திய வருவாய் சேவைகள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரவணன் தற்போது உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் பயிற்சி பெற்று வருகிறார். தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.

வறுமையான குடும்பம்

இதுதொடர்பாக சரவணன்  கூறியதாவது:-

நான் 10-ம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றதற்கு முதல்-அமைச்சரிடம் பாராட்டும், வாழ்த்தும் நேரடியாக பெற்றுள்ளேன். ஆனால் வறுமையின்காரணமாக 10-ம் வகுப்பிற்கு பின்னர் மேல் படிப்பினை தொடரமுடியாத சூழ்நிலை இருந்தது. அப்போது நோட்டில் இருந்து ஒரு துண்டு காகிதத்தை கிழித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘படிப்புக்கு உதவி செய்யுமாறு’ வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன்.

பல்வேறு பணியிடச்சூழலுக்கும் இடையே அவர் என் வேண்டுகோளை ஏற்று கல்வி உதவித்தொகை வழங்கி படிக்க வைத்தார். அவருடைய தயவால் பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டி. கல்லூரியில் ‘ஏரோநாட்டிகல்’ என்ஜினீயரிங் படித்தேன்.

உதவித்தொகைதவறுவதில்லை

நான் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் என்னை நேரில் அழைத்து ஜெயலலிதா கல்வி உதவித்தொகை வழங்கினார். ஆண்டுகள் கடக்கும்போதெல்லாம் ஜெயலலிதாவின் அழைப்புகள் ஒருபொழுதும் தவறியது இல்லை. அவருடைய கருணையால் பள்ளி படிப்பினை தொடர்ந்து, கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தேன்.

துண்டு காகிதத்தில் எழுதப்பட்ட வேண்டுகோளுக்கு, சொல்லப்போனால் ஒரு மொட்டை கடிதத்திற்கு இவ்வளவு மதிப்பளித்தது என்னையே நெகிழ வைத்தது. இவ்வளவு பெரிய மனிதரிடம் இருந்து எனக்கு உதவி கிடைத்தது பெருமையாக கருதுகிறேன். இதற்கு பின்னர்டி.சி.எஸ்.சில் பணியில் சேர்ந்தேன்.

வெற்றியை அர்ப்பணிக்கிறேன்

நாட்டிற்கு சேவை செய்யும் நோக்கில் 2013-ம் ஆண்டு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். எனக்கு அனைத்து உதவிகளும் கிடைத்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் 995-வது இடம் பிடித்து இந்திய வருவாய் பணிக்கு எனக்கு ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் தமிழில் மெயின் தேர்வு, நேர்முக தேர்வும் எழுதி தேர்வு பெற்ற இருவரில் நான் ஒருவன். உத்தரபிரதேச மாநிலம் முசோரியில் பயிற்சி பெற்று வருகிறேன். எனக்கு இவ்வளவு உதவி செய்து, நான் இந்த அளவுக்கு உயருவதற்கு காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கு என்னுடைய வெற்றியை அர்ப்பணிக்கிறேன். அவர் உதவி செய்யவில்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.

நேரில் சந்தித்துஆசி பெறவேண்டும்

அடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியுள்ளேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை என்னுடைய குடும்பத்தோடு நேரில் சந்தித்து வெற்றியை அர்ப்பணிப்பதோடு, ஆசியும் பெறவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் 3-வது மதிப்பெண் பெற்றதற்காக ‘தினத்தந்தி’ ரொக்க பரிசு பெற்றிருக்கிறேன்.

கிராமங்களில் உள்ள மாணவர்கள் பலரும் சாதனையாளர்களாக உருவெடுக்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சாதனைகளையும், போதனைகளையும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் எடுத்துக்கூறி வருகிறேன். சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தமிழில் எழுதுபவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகத்திலேயே பெரிய நன்றி

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது திருவள்ளுவன் வாக்கு. தக்க நேரத்தில் செய்யப்படும் உதவி உலகத்தில் மிகப்பெரியதாக கருதப்படும். அந்த வகையில் பள்ளி மேற்படிப்பை தொடரமுடியாத ஒருவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த உதவி இன்றைக்கு அவரை இந்திய வருவாய்த்துறை அதிகாரியாக உயரும் அளவிற்கு செய்திருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive