NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை

     குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

காப்பகம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த 2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு ‘செக்ஸ்’ தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.
போலீசில் புகார்
பின்னர், அவனை டெல்லியிலேயே விட்டு விட்டு, லண்டன் சென்று விட்டார். அந்த மாணவன் பலரது உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளான்.
அவனிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, பாலியல் கொடுமை நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி போலீசில், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செயதுள்ளனர். ஜான்சனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர், இந்த பிடிவாரண்டு அடிப்படையில் ஜான்சன் தேடப்படும் நபர் என்று இன்டர்போல் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதிகாரம் இல்லை
இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தேடப்படும் நபர் என்று சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஜான்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதேபோல், என் மீதான வழக்கை விசாரிக்க தமிழக கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. மாணவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி அவனது தாயாரின் சம்மதத்துடன்தான், அவனை டெல்லிக்கு அழைத்து சென்றேன். அவனை நான் கடத்தவில்லை. மேலும், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள், உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளனர். அதுவும், சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு பின்னர், புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வற்புறுத்தல்
மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கு (ஜான்சனுக்கு) எதிரான புகாரை தன்னையும், தன் மகனையும் வற்புறுத்தி போலீசார் பெற்றனர் என்று கூறியுள்ளார். தற்போது எனக்கு எதிராக கீழ் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு திரும்ப பெறப்பட்டுவிட்டது. ஆனால், இந்த பிடிவாரண்டு அடிப்படையில், என்னை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், என்னால் இந்தியாவுக்கு வர முடியாத நிலையில் உள்ளேன். எனவே, என்னை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும், எனக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
கண்டனம் வரும்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’ தண்டனையையும் வழங்கவேண்டும்.
இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.
ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2012–ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2013–ம் ஆண்டு 58 ஆயிரத்து 224 வழக்குகளாகவும், 2014–ம் ஆண்டு 89 ஆயிரத்து 423 வழக்குகளாகவும் அதிகரித்துள்ளது.
இந்த கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு, கொடூரமான தண்டனை வழங்கினால்தான், குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கண்டிப்பாக கூச்சல் போடுவார்கள் என்பது நன்றாக எனக்கு தெரியும்.
ஆனால், அப்படிப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
அறிவிப்புக்கு தடை
மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை ஜான்சன் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, ஜான்சன் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, ஜான்சன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
காட்டுமிராண்டி தண்டனை
கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால், காட்டுமிராண்டித்தமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள்.
ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.
‘செக்ஸ்’ கல்வி
அதே நேரம் பாலியல் கல்வி என்பது தற்போது அவசியமாகுகிறது. பொதுவாக நமது சமுதாயத்தில் ‘செக்ஸ்’ என்பது தேவையற்ற, ஒழுக்கக் கேடான, நியாயமற்ற ஒரு செயலாக கருதும் எண்ணம் உள்ளது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்கள், தேவைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், இணையதளங்கள், திரைப்படங்கள் மூலம் ‘செக்ஸ்’ பற்றி தவறாக மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதனால், குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுகிறது.
எனவே, கீழ் கண்ட பரிந்துரைகளை செய்கிறேன்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏதாவது தெரிந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும்.
கூட்டுக்குடும்பம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போலீசார் பணியாற்றி, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்.
பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே, மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
ஆண்மை அகற்றுதல்
இந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
குற்றப்பின்னணி
மேலும், பள்ளி மாணவர்களுக்கு கட்டாய செக்ஸ் கல்வி வழங்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெளிநாட்டினருக்கு விசா வழங்கும்போது அவர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை மத்திய அரசு பெறவேண்டும். இந்தியாவில் அனாதை காப்பகம் தொடங்க வரும் வெளிநாட்டினரின் குற்றப்பின்னணியை சர்வதேச போலீசார் மூலம் விசாரித்து அறிக்கை பெறவேண்டும். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் பாலியல் கொடுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்.
பள்ளிப்பாடத்தில் ஒழுக்கம், கலாசாரம், சமூகத்தில் குழந்தைகளில் முக்கியத்துவம் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.
குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive